ஆறு சக்கரக் குதிரை

aaru-sakkara-kuthirai-new-movie

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியான எண்ணிக்கையில், நல்ல வசதிகளுள்ள பஸ்கள் விடமுடியாத அரசும், அதன் இத்துப் போன பஸ்களும், டிக்கெட் கிடைக்காமல் நடுஇரவு வரை

அலைபாயும் மக்களும் மற்றும் இதை வைத்து சம்பாதிக்கும் தனியார் சொகுசு பஸ் கம்பெனிகளும் அவை விற்கும் டிக்கெட்களின் விலைக் கொள்ளையும் நாம் நெடுங்காலமாக அறிந்ததே. அதே போல வழியில் சிறு நகரங்களில் நிறுத்தாமல் நகரத்தை விட்டு தள்ளியிருக்கும் மோட்டல்களில் போய் நிறுத்துவார்கள். அங்கே விற்கும் காபி, டீ, சிகரெட், குளிர்பானங்கள் சாதாரண பன் உட்பட எல்லா உணவுப் பொருட்களும் விலை இருமடங்காக உயர்த்தி விற்பார்கள். அங்கே இருக்கும் உணவு விடுதியிலும் விலை இருமடங்காக இருக்கும். ஊத்தப்பம் இரண்டு தான் வாங்கமுடியும். ஒன்று தனியாகத் தரமாட்டார்கள். இன்னும் சில அயிட்டங்களுக்கு தனியாக குழம்பு காசு கொடுத்து வாங்க வேண்டும். இயற்கை உபாதைகளுக்குப் போவதற்கும் கட்டணம்.

வந்து நிற்கும் பேருந்துகளில் பயணிகள் தூங்கியபடியே இருந்து விட்டால் பஸ்ஸிலிருந்து ஆள் இறங்காவிட்டால் இந்தக் கொள்ளை வியாபாரங்கள் எதுவும் நடக்காதே. அதனால் சத்தமாக காது கிழிய ஒரு பாக்ஸ் வைத்து பாட்டுக்கள் போட்டபடியே இருப்பார்கள். இப்படியாக பயணிகளை என்னென்ன விதங்களில் இம்சை செய்து பணம் கறக்க முடியுமோ அப்படி பணம் கறந்து விடுவார்கள். இதுபோன்ற கொள்ளைக்கார ஹோட்டல்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சி அண்ணாச்சாமிக்கோ, அமைச்சா் ஐயாவுக்கோ சொந்தமானதாக அல்லது அவரது ஆட்சிக்கு கப்பம் செலுத்தும் சிற்றரசர்களாக பெரும்பாலும் இருக்கின்றன. இப்படி பொதுமக்கள் இன்னும் அனுபவித்து வரும் பிரச்சனைகளை சுமார் 10 வருடங்களுக்கும் மேல் யாரும் பெரிதாய் கண்டுகொண்டதில்லை.

இதையொட்டிய பிரச்சனைகளை மையமாகக் கொண்டு வரவிருக்கிறது எஸ் அண்ட் எஸ் ட்ரீம் மேக்கர்ஸ் தயாரிப்பில் புது இயக்குநர் செந்தில் சுவாமிநாதன் எழுதி இயக்கும் படம் ‘ஆறு சக்கரக் குதிரை’.  சமீபத்தில் வந்த ஜன்னலோரம் படம் போல பஸ் முழுவதும் கதாபாத்திரங்கள் நிரம்பியிருக்கும் இன்னுமொரு பஸ் பயணப் படம். ஜெய்சத்யா, அபினிதா, ராஜ்முரளி என்று எல்லோரும் புதுமுகங்களாக இருக்கிறார்கள். ஸ்டில்லைப் பாருங்க. நச்சுன்னு இல்ல?!