என்றென்றும் புன்னகை. வெறுப்புக்குள்ளே ஒளிந்திருக்கும் புன்னகை.

endrendrum-punngai-review

புது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என்றென்றும் புன்னகை தெளிவான திரைக்கதை, நடிப்புடன் நம்மை கட்டிப்போடும் படம். இவர் ஒரு புதுமுக இயக்குனர் என்பதையே நம்பமுடியவில்லை!! அவ்வளவு நேர்த்தியான இயக்கம்.

படத்தின் நாயகன் கௌதம்(ஜீவா) விவரிக்கும் பார்வையில் ஆரம்பிக்கிறது படம். ஜீவாவின்  அப்பா நாசர், ஒரு தொழிலதிபர். ஜீவாவின் அம்மா ஓடிப்போய்விட, உருக்குலைந்து போன சிறுவன் ஜீவா, நாசர் அப்போது குடித்துவிட்டு  ‘பொண்ணுங்களையே நம்பாதேடா…இப்படித்தான் நம்மளை விட்டுட்டுப் போய்டுவாங்க’என்று புலம்பும் வார்த்தைகளை ஆழமாக மனத்தில் உருவேற்றிக்கொள்கிறார். அவரால் பெண்களை அவரது வாழ்வில் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. சிறுவன் அம்மாவை நினைத்து விரக்தியிலிருப்பதை மாற்ற நாசர் மறுமணம் செய்துகொள்ள, ஜீவாவோ அப்பாவையும் துரோகியாக நினைத்து அவருடனும் பேச மறுக்கிறார். இரண்டாம் மனைவியோ உங்களிருவருக்கும் நடுவில் நான் பிரச்சனையாக இருக்கவிரும்பவில்லை என்று கிளம்பிப் போய்விடுகிறார்.கௌதம் பெண்களுடன் பேசுவதில்லை. பெண் குழந்தைகளிடம் விளையாடுவதில்லை. மிகவும் ஈகோ உள்ள குழந்தையாக வளர்கிறான்.

அப்படிப்பட்ட சூழலில் பள்ளியில் அவன் சந்திக்கும் நண்பர்கள் தான் ஸ்ரீ(வினய்) மற்றும் பேபி(சந்தானம்). பார்த்தவுடனே பற்றிக் கொளளும் அவர்கள் நட்பு அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்பும் தொடர்கிறது. மூவரும் இணைந்து விளம்பரக் கம்பெனி நடத்துகிறார்கள். சேர்ந்தே சுற்றுகிறார்கள். கலாய்க்கிறார்கள். வசிக்கிறார்கள்.இவர்களில் வினய் எந்தப் பெண்ணைக் கண்டாலும் உடனே வழிந்தபடி அந்தப்பெண்ணை சுற்றும் டைப். ஒரு கட்டத்தில் மூவரும் இனிமேல் கல்யாணமே செய்துகொள்வதில்லை என்று (கௌதமின் அழுத்தத்தால்) சத்தியம் செய்துகொள்கிறார்கள்.அவர்கள் நட்பிற்கு சோதனை வருகிறது.

ஜீவாவின் வாழ்க்கையில் அட்வர்டைஸிங்கில் வேலை செய்யும் த்ரிஷாவும், அட்வர்டைஸிங் மாடல் ஆண்ட்ரியாவும் குறுக்கிடுகிறார்கள். இதனால் மூவரின் நட்பும் என்ன ஆனது? அவர்கள் திரும்ணம் செய்துகொண்டார்களா? கௌதம் பெண்களை வெறுப்பவனாகவே இருந்தானா? என்பது போன்றவற்றை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொண்டால் தான் நல்லது.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை பாத்திரங்களுமே ஜமாய்க்கிறார்கள். முற்பாதி முழுக்க ஜீவா, சந்தானம், வினய் கூட்டணியின் ஜாலி கலகலப்பு களைகட்டுகிறது. சந்தானம் நீண்ட நாட்களுக்குப் பின் காமெடியில் மீண்டு ‘வந்தானம்’. மனிதர் திரையில் தெரியும் யாரையும் விடுவதில்லை. ஜீவா  உட்பட எல்லோரையும் கலாய்த்துவிடுகிறார்.மனைவி காத்திருக்க குடித்து விட்டு வரும் அந்த சாய்ந்த ரூம் காமெடி புதுமை. வினய்க்கு நீண்ட நாட்களுக்குப் பின் சொல்லும்படியான வேடம். சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் வரலாம். ஜீவாதான் படத்தின் நாயகன். கதையின் முக்கியமான குணாம்சங்களும் இவரிடமே இருந்தாலும் சறுக்கிவிடாமல் நடித்திருக்கிறார். கற்றது தமிழிலேயே இவரது நடிப்பு நன்கு வெளிப்பட்டது. இதில் இன்னும் மெருகேறியிருக்கிறார்.

நாசர் போன்ற நடிப்பு ஜாம்பவான்களுக்கு இதெல்லாம் சாதாரணம் என்கிற மாதிரி அப்பா பாத்திரத்தை கஷ்டமே படாமல் அழகாகப் பண்ணிவிடுகிறார் நாசர். ஆண்ட்ரியாவும், த்ரிஷாவும் முக்கியமான ரோல்களில் சரியாக நடித்திருக்கிறார்கள். த்ரிஷாவின் முகத்தில் மிக லேசாக பழைய சாயல் தெரிந்தாலும் நடிப்பிலும், மதியின் ஒளிப்பதிவிலும் தேவதையாக வருகிறார். மெலிதான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஆனால் இவர்களின் நடிப்பு எல்லாமே இயக்குனர் அஹமத்தின் சரியான இயக்கத்தினால் வந்ததென்று நம்ப நிறைய இடமிருக்கிறது. திரைக்கதை உள்மன விவகாரங்களான ஈகோ, நட்பு, காதல் போன்றவற்றைப் பற்றிப் பேசினாலும் கதை தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் விஷூவலாக நிறைய சொலலிச் செல்கிறார். பால்கனியில் குடித்துவிட்டுத் தடுமாறும் போது நொறுங்கு்ம் க்ளாஸ், அவர்களின்  ராட்டினம், ஒரு சண்டையில், கோபத்தின் குழப்பத்தின் உச்சியில் சம்பந்தமேயில்லாத இடத்தில் உதிக்கும் காதல், சன்னிபாய் மற்றும் கே(Gay) சம்பந்தமான உறுத்தாத பார்வை, த்ரிஷாவின் மௌனமான காதல், ஜீவா காதல் உணரும் இடம், சொல்லும் இடம்  என்று படம் நெடுக தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தானத்தின் பல காமெடி வசனங்களும் இயக்குனருடையதாக இருக்கலாம்.ஹாரீஸ் ஜெயராஜ் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயித்தராஜ் ஆக ஆகியிருக்கிறார் பின்னணி இசையில்.  பாடல்களில் ஒன்றிரண்டு ஓ.கே செய்திருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் எல்லோருமே நன்றாக ஸ்கோர் செய்திருக்கும் படம். சில சிறு குறைகளும் உண்டு. நாசரின் இரண்டாவது மனைவி இரண்டே ஷாட்களில் வந்து போய்விடுவது. ஒரு திருமணத்தை நாசரும், அந்தப் பெண்ணும் அவ்வளவு எளிதாக கடந்து போனார்கள் என்று காட்டியிருப்பது லேசாக இடிக்கிறது. கௌதம் எப்போது பெண்களை விரும்ப ஆரம்பித்தான்? அந்த விருப்பு வெறுப்பிலான கட்டத்தை எப்படிக் கடந்தான் அல்லது கடக்கவில்லை என்பதற்கான விஷூவல்கள் இல்லை. கடைசியில் ஸாரி சொல்லவேண்டிய இடத்தில்’ஸாரி’ சொல்லாமல் [‘ஐ லவ் யூ’ என்னுமிடத்தில் அந்தப் பழைய கௌதம் கேரக்டர் சரியாகிக் கொள்கிறது. ‘கௌதம் அம்மாவை எவ்வளவு தூரம் நேசித்தான் இவ்வளவு வெறுப்பதற்கு?’ என்பதை விளக்கும் காட்சிகள் படத்தில் வரவே இல்லை. ஒருவேளை கதையை இழுத்து விடும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். ஒரு சில ஷாட்கள் போதுமே. இருந்தாலும் முதிர்ந்த இயக்குனர் போல ஷாட்கள், விஷூவல்கள் சொன்ன அஹமத்திற்கு நம் பாராட்டுக்கள்.

என்றென்றும் புன்னகை.. முடிவிலாப் புன்னகை.