இளையராஜா எடுத்த படம்

ialyaraja-photo-exhibition

இளையராஜாவுக்கும் இசைக்குமுள்ள தொடர்பு நாம் நன்கறிந்ததே. இளையாராஜா உலகம் சுற்றி வருவதிலும் விருப்பம் உள்ளவர். அத்துடன் புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு உடையவரும் கூட. 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள கண்காட்சி வளாகத்தில் இசைஞானி இளையராஜா 1978லிருந்து எடுத்த புகைப்படங்களைக் கொண்டு ‘நான் பார்த்தபடி’ என்கிற பெயரில் ஒரு கண்காட்சி நடத்தினார்கள். இளையராஜா இதுவரை எடுத்திருந்த சுமார் ஐயாயிரம் புகைப்படங்களிலிருந்து சிலவற்றைத் தேர்வு செய்து காட்சியில் வைத்திருந்தனர்.

நடிகர் கமல்ஹாசன் ஜனவரி 15ம் தேதி அதைத் திறந்து வைத்தார். ஒரு வாரம் நடைபெற்ற கண்காட்சியை பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், பார்த்திபன், விவேக், மேத்தா, அறிவுமதி போன்ற திரையுலகினர் பலருடன் பொதுமக்களும் திரளாகப் பார்த்துச் சென்றனர்.

இதுபற்றி இளையராஜா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். “நீண்ட பயணங்களின் போது எனக்குத் தெரிந்த விஷயங்கள் தான் இந்தப் புகைப்படங்கள். பெரிய மெனக்கெடல்கள் எதுவுமின்றி அந்தக் கணத்தின் போக்கிலேயே இப்படங்களை எடுத்துள்ளேன். ஏனெனில் மெனக்கெடலுக்கு எனக்கு நேரம் கிடைத்ததில்லை. இதுவரை எடுத்தவற்றில் மனம் கவர்ந்தவற்றில் சிலதைத் தேர்வுசெய்து இங்கு காட்சிக்கு வைத்திருக்கிறேன். இந்தப் படங்களை எடுத்த நேரத்தை விட இப்போது பார்க்கும்போது அரிதான உணர்வுகள் ஏற்படுகின்றன.

உடல் நலமில்லாமல் அம்மா இருந்த போது அவர் ஊசிக்கும், மாத்திரைக்கும் பயப்பட்டார். இதற்கெல்லாம் பயப்படலாமா என்ற சொல்லி அவரை ஒரு புகைப்படம் எடுத்தேன். என் புகைப்படங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் யாரும் இல்லை. பலர் பாராட்டியிருக்கின்றனர். இசையமைப்பாளருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று சிலர் நினைக்கக்கூடும். இசையே ஒரு வேண்டாத வேலை தானே(?!).

புகைப்படமெடுப்பதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் புதிய கேமரா எது மார்க்கெட்டுக்கு வந்தாலும் உடனே அதை வாங்கி புகைப்படங்கள் எடுப்பேன். டிஜிட்டல் கேமரா வந்தபின் புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டேன். காரணம் டிஜிட்டல் கேமரா போட்டோகிராபிக்கு அழகல்ல. டிஜிட்டல் கேமராவில் புகைப்படக் கலைஞனின் திறமைக்கு மதிப்பு குறைந்துவிடுகிறது. ஆனால் சினிமாக்காரர்கள் எல்லாம் இப்போது டிஜிட்டலில்தான் படமே எடுக்கிறார்கள். நல்ல விஷயங்களைத் தான் நாம் கைவிட்டுவிடுவோமே! என் புகைப்படங்களை நான் பிரிண்ட் போட கொடுக்கும்போது அதன் ஒளி அளவுகளை கூட்டவோ குறைக்கவோ கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவேன். மேலும் இயற்கையான வண்ணங்களை கூட்டவோ குறைக்கவோ
அனுமதிக்கமாட்டேன்.

ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்துக் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் வாசலில் வறுமையின் பிடியில் இருந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதன் முகத்தில் ஒரு தெய்வீகத் தன்மை எனக்குத் தெரிந்தது. அக்குழந்தையைப் படமெடுக்கவேண்டும் என்று தோன்றவே படமெடுத்தேன். பின்னர் உள்ளே போய்விட்டு வந்தபோது அந்தக் குழந்தைக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று தோன்றியது. குழந்தையை தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. வறுமையிலும் சினேகம் பூத்த அந்தக் குழந்தையின் முகத்தை புகைப்படத்தில் பார்க்கும்போதெல்லாம் உள்ளுக்குள் ஏதோ குற்ற உணர்வு வந்து போகிறது.

சினிமா ஒளிப்பதிவில் எனக்குப் பிடித்த கலைஞர்களான பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டினர். நான் புகைப்படம் எடுக்க விரும்பும் தலைவர், நடிகர், பெரும்புள்ளிபற்றிக் கேட்கிறார்கள். அப்படி ஒருவரும் இல்லை. அதில் எனக்கு விருப்பமில்லை. இன்னும் சிலர் இந்தப் புகைப்பட ஆர்வத்தை வைத்து கொஞ்சம் அதிகமாக சினிமாவில் ஒளிப்பதிவு செய்யலாமே என்று கேட்கிறார்கள். அதில் எனக்கு நாட்டமில்லை மேலும் இது எனக்கு ஒரு ஹாபி போன்றதே.” . இவ்வாறு இளையராஜா பேசினார்.

டிஜிட்டல் போட்டோகிராபி பற்றிய இளையராஜாவின் கருத்து பல பிரபல புகைப்படக் கலைஞர்கள் டிஜிட்டல் போட்டோகிராபி அறிமுகமானபோது சொன்னதைப் போலவேயிருப்பது ஒரு ஆச்சர்ய ஒற்றுமை. தான் மிகச் சிறந்து விளங்கும் தனக்கு மிக உயிரான ஒரு விஷயமான இசையையே ‘வெட்டி வேலை’ என்று துறவி போல சாதாரணமாகச் சொல்லிவிடும் இளையராஜாவின் படங்கள் அவரைப் போலவே வித்தியாசமாகத் தான் இருக்கின்றன.