வீரம். புதிய காரம்..பழைய மசாலா

veeram-movie-review

இந்தப் பொங்கலில் வசூல் போட்டியில் இறங்கிய இரண்டு பெரிய ‘தல’க்களின் படங்களில் விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டியில் தயாரிப்பில் வந்திருக்கும் ‘தல’யின் வீரம் கொஞ்சம் முந்திக்கொண்டுள்ளதாக புரொடக்ஷன் பொன்னுசாமி நம்பகமான ‘உள்’துறைக வட்டாரக் கணக்குகளிலிருந்து தகவல் கொண்டுவந்தார். ஸ்டார்களின் படங்கள் என்கிற வழக்கமான ஃபார்முலாவைத் தவிர வேறு எதுவும் புதிதாக வீரம்மில் இல்லை. இது தாதா ப்ளஸ் காமெடி ஃபார்முலா.

கல்லூரியில் இரண்டு மாணவர் பிரிவினருக்கிடையேயான தகராறு கலவரமாய் மாற, புதிதாய் வந்திருக்கும் பிரின்ஸிபால் விழிபிதுங்கி நிற்க, ஒரு தகராறு குரூப் லீடர்களான நான்கு அண்ணன் தம்பிகள் நியாயமாய் பிரின்ஸிபாலிடம் மன்னிப்பு கேட்க, எதிர் குரூப் கிண்டல் செய்ய, மீண்டும் கல்லூரியே பற்றி எரிய ஆரம்பிக்க, பிரின்ஸிபால் அந்த நான்கு பேரின் மூத்த அண்ணன் ஒட்டன்சத்திரம் விநாயகத்தைத் தேடி ஓட, அங்கே டாப் ஆங்கிளில் என்ட்ரியாகிறார் தலை பாதி நரைத்த ‘தல’.

அப்புறம் தான் லோக்கல் கஞ்சா, பெண் கடத்தல் மற்றும் சில்லரை ரவுடிகளைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு பின்பு நன்கு ‘கவனித்து’ அனுப்புபவர்தான் நல்ல தாதா அஜித் என்று நமக்குப் புரிகிறது. அஜித்தின் பால்ய நண்பர்களான சந்தானம் குடும்ப வக்கீலாகவும், ரமேஷ்கண்ணா மாவட்ட கலெக்டராகவும் இருப்பதால் தல விநாயகத்தின் கொடி ஒட்டன்சத்திரமெங்கும் பறக்கிறது. அவருக்கு லோக்கல் மார்க்கெட்டை தானே ஏலம் எடுக்கும் வில்லன் தாதா ஒருவர். வில்லனுக்கும் தாதாவுக்குமிடையே மூளும் யுத்தம். நடுவில் கொஞ்சம் வானத்தைப் போல அண்ணன் தம்பி பாசம். தம்பிகளுக்காகவே கல்யாணம் செய்யாத அஜித் தனக்கும் தன் தம்பிகளுக்கும் இடையேயான பாசத்தை பிரித்துவிடக்கூடாது என்பதற்காகவே யாருக்கும் திருமணமே வேண்டாம் என்கிறார். ஆனால் அஜித்தின் மூன்று தம்பிகளும் காதலில் விழுந்து அதை அண்ணனுக்குத் தெரியாமல் மறைக்கிறார்கள். இது தெரிந்த சந்தானம் அஜித்துக்கும் காதலை வரவழைத்துவிட்டால் தம்பிகளுடைய காதல்களையும் நிறைவேற்றிவிடலாம் என திட்டமிட அங்கே ஹீரோயின் தமன்னா சிற்பக் கலைக் கல்லூரிப் பெண்ணாக வருகிறார். முற்பகுதி இந்தக் காதலிலேயே ஜாலியாகப் போய்விடுகிறது.

இரண்டாவது பகுதியில் தமன்னாவின் வீட்டுக்கு அஜித் சம்மதம் கேட்கச் செல்ல அங்கே தமன்னாவின் அப்பா நாசர் ஒரு அஹிம்சாவாதியாக நிற்கிறார். அவருக்கும் இவருக்கும் ஒத்துவருமா ? இரண்டாவது பகுதியில் வரும் ஆக்ஷன் காட்சிகள், விரட்டும் ரவுடிகள் யாருக்காக எதற்காக ? என்பதுபோன்ற சஸ்பென்சுகளை கடைசி நேரத்தில் அவிழக்கிறார் இயக்குனர் சிவா

அஜித் படம் என்பதால் பஞ்ச் டயலாக் பேசுறவனெல்லாம் என்கிற மாதிரி ஆரம்பிக்கும் பஞ்ச் டயலாக்குகளுக்கும், தல வந்துட்டார்ல இனி எல்லாம் சூப்பர் தான் என்பது போன்ற பாசக்குரல்களுக்கும் பஞ்சமில்லை. தல தலைக்கு டை அடிக்காமல் சால்ட் அண்ட் பெப்பராக இன்னும் நடிப்பைத் தொடர்வாரெனில் ஒரு சின்ன வேண்டுகோள். அவருக்கு ஜோடியாக தமன்னா மாதிரி காலேஜ் கேர்ளாகப் போடாமல் சிம்ரன் மாதிரி ஆண்ட்டிகளை டீச்சர் வேடத்தில் போட்டு ஜோடியாக்கினால் தலை நரைத்த மிடில் ஏஜ் அங்கிள்கள் ஒரு நூறு பேரை அவர் வீட்டுக்கு தியேட்டரில் இருந்து நடந்தே வரச்செய்வோம் என்று கேட்டுக்கொள்கிறோம். (வேறொன்னுமில்லை வயித்தெரிச்சல் பாஸ்).

மற்றபடி படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முற்பாதியில் சந்தானமும் பிற்பாதியில் தம்பிராமையாவும் உதவுகிறார்கள். ஒளிப்பதிவு செய்த வெற்றிக்கு படம் வெற்றிதான். விதார்த், பாலா மற்றும் தம்பிகள் நடிப்பில் ஓ.கே. செய்கிறார்கள். அதுல்குல்கர்னி வித்தியாசமான வில்லன். டி.எஸ்.பி(அதாங்க தேவி ஸ்ரீ பிரசாத்)யின் இசை வழக்கமான தல படங்களிலிருந்து பத்து இசைகளை எடுத்து கோர்த்துச் செய்த அயிட்டம் தான் என்றாலும் சொதப்பலில்லை.

அஜித்துக்கு இது மோசமான படமில்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றிப் படமாய் இது இருக்கப் போவதில்லை. சிவா இன்னும் கொஞ்சம் பலமான கதை கொடுத்திருக்கலாம் ஒரு நல்ல கமர்ஷியல் ஹிட்டடிப்பதற்கு.