pannaiyarum-padminium-review

தமிழில் குறும்படங்களினால் மிளிர்ந்த புது இயக்குனர்கள் சினிமாவிலும் நுழைந்து சிக்ஸர் அடித்திருப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னொரு படம் இது. பண்ணையாரும் பத்மினியும் என்கிற பெயரில் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்ற குறும்படமே அதே பெயரில் படமாக அழகாக விரிந்திருக்கிறது. படம் வசூலில் சிக்ஸர் அடித்ததா ? தெரியவில்லை. ஆனால் நுட்பமான உணர்வுகளைத் தொடுவதில் ஒரு ஹாட்ரிக் சிக்ஸர் அடித்திருக்கிறது இந்த ப.ம்.ப.ம்.

கார் என்பது ஆடம்பரத்துக்கான ஒரு அடையாளம். அதுபோக போக்குவரத்து தேவையை தீர்க்கவும் பயன்படும் வாகனம். அந்தக்கால பியட் பத்மினி காரொன்று ஒரு கிராமத்தில் ஈரமனதுள்ள பண்ணையார் ஒருவரின் வீட்டில் வந்து சேரும்போது அதன் ஆடம்பர அடையாளத்தைத் தாண்டி அந்தக் காரின் மீது கிராம மக்கள் முதல் பண்ணையாரின் வீட்டு மனிதர்கள் வரை கொள்ளும் ஈடுபாடு தான் படத்தின் கதையின் அடிப்படை. ஜெயப் பிரகாஷ் தான் கிராமத்துப் பண்ணையார். அவர்தான் கிராமத்துக்கு வந்த முதல் ரேடியோ, முதல் டெலிபோன், முதல் டி.வி., முதல் டாய்லெட் என்று எல்லா அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்பவர். அத்தோடு அவற்றை கிராம மக்கள் தங்களிஷ்டம் போல உபயோகிக்கவும் அனுமதிக்கும் பரந்த மனதுள்ளவர்.

அவரிடம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரொருவர் ஒரு பியட் காரை கொஞ்சநாள் இருக்கட்டும் என்று விட்டுச் செல்கிறார். திடீரென்று கிராமத்தில் ஒரு பையனை பாம்பு கடித்துவிட அதே கிராமத்தில் டிராக்டர் ஓட்டும் முருகேசன் (விஜய்சேதுபதி) டிரைவராக மாறி காரில் பையனை ஓட்டிச் செல்கிறார். அதன்பின் கார் அந்தப் பண்ணையார் மற்றும் ஊர் மக்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாததாக எப்படி ஆனது என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குனர் ஒரு மெல்லிய சிறுகதையை சொல்வதுபோல பல சின்னச் சின்ன விஷயங்களை நகைச்சுவையோடும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியபடியே செல்கிறார். இழவு வீட்டில் விஜய்சேதுபதிக்கு வரும் காதல், பண்ணையாருக்கும் அவர் மனைவிக்குமிடையே முதிர்வயதிலும் நிற்கும் காதல், பண்ணையாரின் மகளின் சுரண்டல், பண்ணையாருக்கும் மனைவிக்குமிடையே நடக்கும் இரவு உரையாடல், காரைத் தள்ளிவிட விஜய்சேதுபதி செய்யும் ட்ரிக், காரின் முன்சீட்டில் ஏறிவிட ஏங்கும் சிறுவன் என்று படம் நெடுக ரசிக்கும் காட்சிகள் ஏராளம், காரானது பண்ணையார், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதியின் மனங்களில் மெது மெதுவாக நிறைவதை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

பண்ணையாரின் பாத்திரப்படைப்பு, இப்படி ஊர்மக்களுடன் ஒன்றி வாழம் ஒரு பண்ணையாரை நாம் பார்க்கமுடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. பண்ணையாராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜெயப் பிரகாஷ், அவர் மனைவியாக வரும் துளசி, விஜய் சேதுபதி, அவர் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் (பால சரவணன்)’பீடை’ஆகியோர் நடிப்பில் நம்மை நெகிழ்த்திவிடுகிறார்கள், பண்ணையாரின் மகளிடம் காரைக் கேட்டுவிட்டு அவர் மறுத்து அவமானப்படுத்த கோபம் கொப்பளிக்க திரும்பிச் செல்லும் நடையில் சேதுபதியின் முகம் தெரியாவிட்டாலும் அந்த அவமானத்தையும் கோபத்தையும் உடலசைவுகளிலும், நடையிலும் அழகாக வெளிப்படுத்துகிறார் மனிதர்.

படத்தின் ஒளிப்பதிவு கோகுல் பினாய். ஆர்ப்பாட்டமில்லாத அலுங்காத படத்தின் கதைக்கேற்ற ஒளிப்பதிவு. இசை ஜஸ்டின் பிரபாகர் என்கிற மதுரையைச் சேர்ந்த புதுமுக இசையமைப்பாளர். உனக்காகப் பிறந்தேனே, காதல் வந்தாச்சோ, பேசுறேன் பேசுறேன் என்ற மூன்று பாடல்கள் இதம். பிண்ணணி இசையிலும் அசத்தியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் சில இடங்களில் பிண்ணணி இசை கொஞ்சம் டிராமாவாக நீண்டாலும் முதல்படம் என்கிற வகையில் பிண்ணணி இசையில் ஆச்சரியப்படுத்துகிறார். ரவுண்ட் வருவார் என நம்பலாம்.

ஒருவருக்கு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அற்ப விஷயங்கள் சமயங்களில் வேறு ஒருவருக்கு மிக முக்கியமான விஷயங்களாக மாறிவிடுகின்றன. ஒரு காரின் மீது ஒரு குடும்பத்து நபர்களுக்கு ஏற்படும் வினோதமான பாசத்தையும், அதில் ஊடாடும் மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளையும் அழகியலோடும் கலையுணர்வோடும் திரையில் வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குனர் அருண் குமார் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். தமிழில் இதுபோன்ற மெல்லிய உணர்வுகளை பதியவைத்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் மலையாளப்படம் போல நல்ல கதையம்சத்துடனும் மலையாளப்படங்களில் இல்லாத நேர்த்தியுடனும் நிற்கிறது ப.ம்.ப.ம்

ப.ம்.ப.ம் பத்து நிமிட குறும்படமாக இருந்தபோது அதில் இருந்த செறிவும் விறுவிறுப்பும் அதே கதை கொஞ்சம் நீட்டப்பட்டு இரண்டுமணி நேரம் சொல்லும்போது இல்லாமல் போனது ஆச்சர்யமல்ல. விசித்திரம் என்ற குறும்படம் வில்லா எனும் சினிமாவாக விரிந்தபோதுகூட இதே பிரச்சனை ஏற்பட்டது. அதுபோக படத்தின் தலைப்பு படத்தின் முக்கிய எதிரியாக மாறியிருக்கிறது. ஏதோ மலையாள கவர்ச்சிப் படம்போல ஒரு ஈர்க்கும் தலைப்பாக வைக்கப்பட்டு அதற்கும் படத்துக்குமுள்ள தொடர்புகூட காட்டப்படவில்லை. படத்தில் எநதவொரு இடத்திலும் பியட் காரை பத்மினி கார் என்றுகூட யாரும் சொல்லவில்லை. பண்ணையார் காரைப் பார்த்ததும், கண்டதும் காதல் போல அதன்மேல் இனம்புரியாத ஈடுபாடு கொள்கிறார். ஆனால் அது தொடர்ந்து வளர்வதற்கான ஒரு வலுவான காரணம் படத்தில் காட்டப்படவில்லை. அது தெளிவாக காட்டப்பட்டிருந்தால் அதைத் தொடர்ந்து பண்ணையாரின் மனைவியின் ஈடுபாட்டையும், விஜய் சேதுபதியின் ஈடுபாட்டையும் ரசிகர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும். அதேபோல படத்தின் மொத்தத்தையும் விவரிப்பதாக வரும் இளைஞனின் ஆரம்ப வர்ணணைகளில் அவன் கார் வாங்கும்போது காரினால் அவனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட வெற்றிடம் லேசாக குறிப்பிடப்படாததால் படம் முடிவடையும்போது வரும் காட்சிகள் பலமாக பதிய மறுக்கின்றன. ஆனாலும் படம் இவற்றால் சோடை போகவில்லை.

ப.ம்.ப.ம் வசூலைக் குவிக்கிறதோ இல்லையோ தமிழில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். கவிதைபோன்ற இந்தப் படத்திற்கு வேறு என்ன தலைப்பு இருந்தால் பொருத்தமாய் அழகாய் இருந்திருக்கும் என்று யோசித்தபோது எனக்குத் தோன்றிய பெயர் – ‘ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது’

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.