’12 வருட அடிமை’க்கு ஆஸ்கார்

oscars2013-news-12yearslave

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 86வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் சென்ற ஆண்டின் சிறந்த ஆங்கிலத் திரைப்படமாக ‘ட்வல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்'(Twelve years a slave) என்கிற படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் சிவில் போருக்கு முந்தைய காலகட்டத்தில் கருப்பர்கள் அடிமைகளாக இருந்த காலத்தில் விடுதலையடைந்த ஒரு கருப்பினத்தவர் மீண்டும் கடத்தப்பட்டு அடிமையாக 12 வருடங்கள் துன்பப்பட்டு பின் மீண்டெழுந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இப்படத்தின் இயக்குனர் ஸ்டீவ் மக்விய்ன் கருப்பினத்தவர். கருப்பினத்தவர் ஒருவர் இயக்கிய படம் சிறந்த பட விருதைப் பெறுவது ஆஸ்கார் வரலாற்றிலேயே இது முதல் தடவையாகும்.(ஓ இப்பத்தான் இவிய்ங்களுக்கு ஒரு கருப்பின டைரக்டரே கண்ணுல பட்டார் போலத் தெரியுது.)

சிறந்த நடிகருக்கான விருது மாத்யூ மெக்கார்னிக்கு(Mathew Meconaughey) டல்லாஸ் பையர்ஸ் க்ளப்(Dallas Buyers Club) படத்துக்கு கிடைத்தது. 1985ல் நிஜமாக டல்லாஸில் வசித்த ரான் வுட்ரூப்(Ron Woodruf) என்பவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்துகளைப் பெற அவர் உருவாக்கிய அமைப்பு பற்றிய கதை இது.

சிறந்த நடிகைக்கான விருது வுட்டி ஆலனின்(Woody Allen) ‘ப்ளூ ஜாஸ்மின்'(Blue Jasmine) படத்தில் நடித்த கேதே ப்ளான்ச்சட்டுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற சமூகசேவகியின் மன அழுத்தங்களைப் பற்றிய உளவியல் பூர்வமான படம் இது.

சிறந்த துணைநடிகருக்கான விருது டல்லாஸ் க்ளப்பில் நடித்த ஜேரட் லீட்டோவுக்கும்(Jared Leto), சிறந்த துணைநடிகைக்கான விருது 12 வருட அடிமை படத்தில் நடித்த லுபிட ந்யோங்கோவுக்கும்(Lupita Nyong’o) கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டில் அதிக விருதுகளைப் பெற்ற படமாக கிராவிட்டி(Gravity) அமைந்தது. சிறந்த ஒளிப்பதிவு – எம்மானுவேல் லூபஸ்கி(Emmanuel Lubezki), சிறந்த இயக்குனர் – அல்போன்ஸோ க்யூரென்(Alfonso Cuarón), சிறந்த இசை – ஸ்டீவன் ப்ரைஸ்(Steven Price) போன்ற விருதுகளோடு சிறந்த எடிட்டிங், சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங், விஷூவல் எபக்ட்ஸ் போன்றவற்றிற்கும் விருதுகளைப் பெற்றிருக்கிறது இந்தப் படம்.
விண்வெளியில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் அதை ரிப்பேர் செய்ய நிலையத்துக்கு வெளியே வரும் விஞ்ஞானிகள் இரண்டுபேர் எதிர்பாராத விபத்தில் விண்வெளி நிலையத்திலிருந்து துண்டிக்கப்பட்டு விண்வெளியில் அந்தரத்தில் விடப்படுகிறார்கள். அந்த நிகழ்வைப் பற்றிய த்ரில்லர் இது. இன்னும் சென்னையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது க்ராவிட்டி.

சிறந்த மாற்று மொழித் திரைப்படமாக இத்தாலியின் தி கிரேட் பியூட்டி(The great beauty) தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த குறும்படமாக ஆண்டர்ஸ் வால்டரின்(Anders walter) ஹீலியம்(Helium) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 23 நிமிடங்களே ஓடும் இந்தப்படம் நோயினால் விரைவில் சாகப்போகும் சிறுவன் ஒருவன் ஆஸ்பத்திரியில் இருக்கும் மற்றொரு ஆள் சொல்லும் ஹீலியம் என்கிற மாயமான உலகு இருக்கிறதென்று நம்பி அதனுள் தனது அமைதியைத் தேடுவதைப் பற்றிய கதை.

விழாவின் நடுவில் ஒரு பிட்சா டெலிவரி பாய் வந்து அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு ஆர்டர் செய்த பிட்சாவை டெலிவரி செய்தது போன்ற விளம்பர ஸ்டண்ட்டுகளுக்கும் பஞ்சமில்லை. நடிகை ஏமி ஆடம்ஸ் விழாவின் நிகழ்ச்சிகள் போரடித்ததோ என்று எண்ணும்படி பெரும்பான்மையான நேரம் தனது செல்போனில் ஏதோ டைப் செய்துகொண்டேயிருந்தது வேறு ஹைலைட்டாகியுள்ளது. மொத்தத்தில் இந்த வருடம் அதிக பாலிடிக்ஸூக்கள் பெரிதாக எதுவும் பேசப்படாததால் பெரும்பாலும் தகுதியான படங்களே விருதுகளைப் பெற்றிருக்கின்றன.