cuckoo-raju-murugan-interview

‘வட்டியும் முதலும்’ என்கிற பரபரப்பான தொடர் மூலம் வாசகர்களின் மனதில் ஒரு எழுத்தாளாராக இடம் பிடித்து தற்போது ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குனராகவும் தடம் பதித்துள்ள இயக்குனர் ராஜூமுருகனிடம் பேசியபோது..

‘குக்கூ’வின் வரவேற்பு எப்படி?
இன்று இருக்கக்கூடிய திரைப்பட சூழலில் ஸ்டார்கள் இல்லாமலும், கேளிக்கை விஷயஙற்கள் இல்லாமலும் பிரமாண்டங்கள் காட்டாமலும் எடுக்கப்பட்ட குக்கூ இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றதிலேயே அது வெற்றிப் படம் என்று நான் சொல்வேன். எளிமையான மனித உணர்வுகளை படம் எடுக்கும் யாருக்கும் இப்படம் ஒரு நம்பிக்கையைத் தரும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

எழுத்தாளரை விட இயக்குனர் ராஜூமுருகன் சந்தித்த சவால்கள் என்ன?
எழுத்தாளரால் தான் என்னும் எல்லா விஷயங்களையும் எழுத்தில் கொண்டு வந்துவிட முடிகிற அளவிற்கு இயக்குனரால் திரைமொழியில் தான் உணரும் விஷயங்களை காட்டுதல் சவாலானது. திரைக்கதைக்குள் அனைத்து விஷயங்களை அடக்கிவிட முடிவதில்லை. இடம், நேரம், தொழில்நுட்பம் பட்ஜெட் போன்ற பல விஷயங்கள் இயக்குனரின் படைப்பைத் தீர்மானிக்கின்றன. எழுத்தாளராய் எழுதியபோது சுதந்திரமாய் எழுதமுடிந்த நான் இயக்குனராய் ஒரு பதட்டத்துடனே தான் படத்தை எடுத்தேன்.

உங்களது முதல் படமே குக்கூவா?
இல்லை. இதற்கு முன்பு ஒரு படம் ஆரம்பித்து ஒரு ஷெட்யூலில் நின்றுபோனது. இயக்குனர் ஷங்கரிடம் கதை சொல்லியது முதலில் நான் வைத்திருந்த ஒரு காமெடி கதையைத் தான். அவர் மெல்லிய உணர்வுகளைத் தொடும் ஒரு கதையைத் தான் எதிர்பார்ப்பதாகக் கூறியதும் நான் முதலில் எடுக்க விரும்பிய குக்கூவை அவரிடம் சொன்னேன்.

வட்டியும் முதலும் தொடர் பற்றி கூறுங்கள்.
திருச்சியில் குழந்தைகளின் செருப்பை பை நிறைய சுமந்து திரியும் ஒரு மனநிலை சரியில்லாத பெரியவரைப் பார்த்தபோது அவருள் ஒரு கதை இருப்பதை உணரமுடிந்தது. நம்மாழ்வாருடன் ஒரு பயணத்தின் போது விவசாயம் மற்றும் விவசாயிகள் வாழ்க்கை அழிவது பற்றி எந்தவித குற்றஉணர்வும் இல்லாது நாம் வாழ்வதாக உணர்ந்தேன். இவ்விஷயங்களை வட்டியும் முதலும் தொடர்மூலம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தேன். அது மட்டுமின்றி பெண்கள் உலகம் பற்றியதான முழுமையான புரிதல் எனக்கு ஏற்பட்டதும் இத்தொடரின் மூலமாகத் தான்.

எளிய மனிதர்களின் வாழ்வை கதைக்களமாகக் கொண்டதற்கு காரணம் ஏதும் உண்டா?
பாடலாசிரியர் யுகபாரதி ஒரு கம்யூனிசப் பரம்பரையைச் சேர்ந்தவர். என்னுடைய அண்ணணின் நண்பர். எனக்கு உடன்பிறவா சகோதரர். கம்யூனிசப் புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இவர்களே. கம்யூனிசப் பின்புலத்தில் இருந்து வருபவனால் அதிகாரத்தை ருசிக்கமுடியாது. பகட்டாக வாழமுடியாது. எளிய மக்கள் தான் அவனால் கவரப்படுவார்கள். நானும் அப்படித்தான். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மூன்று வருடங்கள் இருந்திருக்கிறேன். ஏதும் இல்லாத எளிய மனிதர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். கம்யூனிசம் எளிய மனிதர்களின் வாழ்வு பற்றிப் பேச, சிந்திக்க எனக்கு கற்றுக்கொடுத்தது.

குக்கூவில் இளையராஜாவின் பாடல்களும் இசையும் வகித்த பங்கு பற்றி..
இளையராஜா சமூகத்தில் எல்லோருடைய அன்புக்கும் உரியவர். சுமார் 50 ஆண்டுகளாக அவருடைய இசை காயம்பட்டோருக்கு மருந்தாக இருந்துவருகிறது. பார்வையற்றோருக்கும் அவரது பாடல்களுக்கும் உள்ள தொடர்பும் இயல்பானது. அதைக் கொண்டு வரமுடிந்ததற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் படத்தில் அவருக்கு ஒரு நன்றித் தலைப்பு வைத்திருக்கலாம் என்று பலரும் கூறியபோது நான் அறியாமல் தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். அவர் எனக்கு அப்பா போல. வீட்டு விசேஷத்துக்கு அப்பாவுக்கு அழைப்பிதழ் வைப்போமா நாம்? அதுபோல அவரை பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. ஆனாலும் இப்போது வருத்தமாக இருக்கிறது.

உங்களது அடுத்த படம் பற்றி
குக்கூவைத் தயாரித்த பாக்ஸ் ஸ்டார் மற்றும் தி நெக்ஸ்ட் பிக பில்ம் நிறுவனங்கள் தயாரிக்க இருக்கும் படத்தை அடுத்து இயக்கவிருக்கிறேன். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.