கண்ணில்லாத குயில்கள் பாடும் ‘குக்கூ’

cuckoo-movie-review

தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது குக்கூ படத்தின் மூலம் அதை பொய்யாக்குவேன் என்று கிளம்பிய எழுத்தாளர் ராஜூ முருகன் ஓரளவிற்கு வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லலாம். தமிழில் படங்கள் நல்ல தரமாக இருந்தால் அதைப் பாராட்டும் நல்ல மீடியாக்கள் இருப்பதும், ரசிகர்கள் தியேட்டரில் போய் காசு கொடுத்து ஓடவைக்காவிட்டாலும் நல்ல படங்களை நல்ல படங்கள் என்பதால் அவற்றுக்குத் தரும் மதிப்பும்

தமிழ் சினிமாவை நல்ல சினிமாக்கள் நிரம்பியதாக ஆக்கிவருகிறது ஒரு நல்ல அறிகுறியே.

இயக்குனர் ராஜூமுருகன் தான் விகடனில் நிரூபராக எழுதிவந்த காலத்தில் சந்தித்த பார்வையற்றவர்களான தமிழ்-சுதந்திரக்கொடியின் காதலை பற்றி கூறுவதாக கதை ஆரம்பிக்கிறது. தமிழ் (அட்டகத்தி தினேஷ் ) மின்சார ரயில்களில் பொருட்கள் விற்றும் மற்றும் பாட்டுக்கச்சேரிகளில் இளையராஜாவின் குரலில் பாடியும் வருபவர். அவர் மற்றொரு பார்வையற்றவரான சுதந்திரக்கொடியை (மாளவிகா நாயர்) சந்திக்கிறார். கொடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தானே முயற்சி எடுத்து ஆசிரியை படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணன்-அண்ணி இருந்தும் சுயநலமிக்க அவர்களுடன் வசிக்காமல் தனியாக சிஸ்டர்ஸ் ஹாஸ்டலில் வசிக்கிறார்.

இவர்களிருவரும் சந்தித்து, அது மோதலாகி, பின் காதலாக மலர்ந்து, வளர்ந்து, உறவினர்களின் சூழ்ந்திருப்பவர்களின் சூழ்ச்சிகளால் எவ்வாறு கலைக்கப்பட்டது? பின் கடைசியில் கண்ணுள்ளவர்களின் உலகில், இரக்கமுள்ளவர்களின் கைதூக்கல்களில், கண்ணில்லாத கொடியும் தமிழும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் கதைச் சுருக்கம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு எளிமையான காதல் கதை.

இது பார்வையற்ற இருவரின் காதல் கதை என்பதால் தான் இந்தக் கதை கவனிப்பு பெறுகிறது. அதற்கேற்றபடி பார்வையற்றோரின் உலகை ஓரளவிற்கு காட்சிப்படுத்த முயல்கிறார் இயக்குனர். பிங்க் நிறம் எப்படியிருக்கும். மார்க் போட்டதால் கோபப்படும் கொடியின் மீதான காதலை இன்னதென்று வரிகளில் விளக்கும் தினேஷ், கொடியின் காலடித் தடத்தையும், வாசனையையும் தூரத்திலிருந்தே  தினேஷ் உணர்வதான புனைவு, ‘நீ எப்படி இருக்கேன்னு பாத்துக்கறேன்’என்று தொடு உணர்வுகளில் நபர்களை உணரும் அவர்களின் உலகம், காதலை எதிர்பார்த்துச் செல்லும் கொடிக்கு கிடைக்கும் அயர்ன்-செய்யப்பட்ட-ட்ரெஸ்கள் இரக்கம், இசை – இளையராஜா, மின்சார ரயில்களில் பார்வையற்றோர், திருநங்கை, பிச்சைக்காரர்களின் வாழ்க்கை, பார்வையற்றோரின் குசும்புகள், பேசும் வார்த்தைகள் என்று அவர்களின் உலகினுள் நம்மை எட்டிப் பார்க்க வைக்கிறார்.

யதார்த்தமான காட்சியமைப்புகளும், நாடகத்தன்மையற்ற நடிப்பும், பளிச்சென்ற வசனங்களும், எளிமையான காதலும் படத்தைவிட்டு ரசிகர்கள் விலகாமல் பார்த்துக் கொள்கின்றன. அட்டகத்தி தினேஷூம், புதுமுக நாயகியான கேரளாவைச் சேர்ந்த மாளவிகாவும் நடிப்பில் பிரமாதப் படுத்திவிடுகின்றனர். தினேஷின் அந்த முழியும், வசனங்களைப் பேசும்போது பார்வையற்றவர்கள் போலவே பேசுபவரை நோக்கிப் பேசாமல் காதைச் சாய்த்தபடி பேசுவது என்று சின்ன விஷயங்களிலிருந்து விரல் நுனியில் உணர்வுகளைப் பரிமாறுவது வரை அருமையாகச் செய்திருக்கிறார்கள். இளையராஜா வெறியர், நாடகக் குழு உறுப்பினர்கள், தினேஷின் நண்பன், கொடியின் நண்பிகள், அண்ணன், உதவி செய்பவர்கள் என்று எல்லோரும் சரியாகவே நடித்திருக்கிறார்கள். இயக்குனருக்கும் இவர்களை நடிக்க வைத்ததில் பெரும்பங்குண்டு.

படம் யதார்த்த படங்களின் சாயலைக் கொண்டிருப்பது படத்தின் கதைக் களத்திற்கு அவசியமானதென்பதால் யதார்த்த ஒளியமைப்பு கொண்ட ஒளிப்பதிவு படத்திற்கு பலமாய் நிற்கிறது. ஒளிப்பதிவு ஷர்மா. இயக்குனரோடு இணைந்து அவருடைய உணர்வுகளை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார். அடுத்த பலம் சந்தோஷ் நாராயணின் இசை. பாடல்களும் அவற்றை படமாக்கிய விதமும் தமிழ்-கொடியின் காதலை ரசிகர்கள் மனத்தில் அச்சேற்ற உதவுகின்றன. பிண்ணணி இசையில் இசைஞானி ராஜாவுக்கும் சேர்த்து டைட்டில் கார்டு போடலாம் என்கிற அளவுக்கு படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் வியாபிக்கின்றன. தமிழ் இளையராஜாவின் குரலில் பாடுபவர் என்று வைத்திருப்பதும் பார்வையற்றோருக்கும் – இசைக்கும் – இளையராஜாவுக்குமிடையேயான உறவை பதியவைக்கும் நோக்கத்தில் கையாளப்பட்ட ஒரு உத்தியே. இந்த உத்தி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

படம் நன்றாக இருக்கிறது என்பதைத் தாண்டி ஒரு க்ளாசிக்காக மாறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்பதை நாம் கூறித்தான் ஆகவேண்டும். பிற்பாதியில் சொல்லப்பட்ட கதை வலிந்து சொல்லப்பட்ட புனைவாக, வலுவில்லாததாகத் தென்படுகிறதேயன்றி அழுத்தமானதாக இல்லை(விக்ரம் நடித்த காசியில் கதையின் முடிவில் அப்படியொரு அழுத்தம் இருக்கும்). முற்பாதியில் கதையில் இருந்த தெளிவும் முதிர்ச்சியும் பிற்பாதியில் இல்லை. பார்வையற்றவர்களின் உலகின் காதல் உணர்வுகளுக்குள் தானும் பயணித்த இயக்குனர் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குள் ஊடுருவிப் பயணிக்காமல் போனதால் இது ஏற்பட்டிருக்கலாம். அது போல க்ளைமாக்ஸ், ஆன்ட்டி க்ளைமாக்ஸ் என்று திரும்பித் திரும்பி எங்கோ அலைய வேண்டிய தேவை சுவையானதொரு திரைக்கதை அமைந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. படம் முடிவு தெரிந்துவிட்ட பின் காதலர்கள் படும் துன்பத்தை மூன்றாம் பிறை ஸ்டைலில் சொல்ல முனைந்ததும் படத்துக்கு தொய்வையே தருகின்றன. படம் முடியும்போது அப்பாடா நல்லவேளை சொதப்பிவிடவில்லை என்று நாம் ஆறுதலடைகிறோம். ஆனாலும் ராஜூமுருகன் நி்ச்சயம் அடுத்த படத்தில் நம்மை நெகிழ்த்திவிடுவார் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறார்.

மொத்தத்தில் இந்தக் கண்ணில்லாத குயில்களின் காதல் ராகம் எப்போதும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் தெய்வீக ராகமாக இல்லாமல், அமைதியான ஒரு காலை வேளையில் எழுந்தவுடன் கேட்கும் இனிமையான குயில்களின் ராகமாக ஆனதோடு மட்டுமே நின்றுவிட்டது. அதனாலென்ன ?  குயில்களின் ராகமும் இனிமையானதுதானே !!