நான் அந்த அளவு தைரியமான பெண் இல்லை – மாங்கா ஷிவதா

nedunchalai-shivatha-interview

மலையாளத்தில் பத்து இயக்குநர்கள் இயக்கி பெரும் வெற்றி பெற்ற ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் அறிமுகமாகி பின்னர் பாஸிலின் ‘லிவிங் டுகதரி’ல் நடித்து பின் நேரடியாக கோடம்பாக்கத்து ‘நெடுஞ்சாலையில்’ பயணித்த மலையாளத்துப் ‘பெண்குட்டி’ ஷிவதா நெடுஞ்சாலை படம் பற்றிய தனது அனுபவங்களை ‘கதைக்கிறார்’.

உங்களுடைய இளம் வயது.பற்றிச் சொல்லுங்கள்.
நான் மலையாளத்துப் பெண் என்றாலும் திருச்சியில் தான் நான் பிறந்தேன். அப்பாவுக்கு அடிக்கடி வேலையில் மாற்றல் வரும் என்பதால் நாங்கள் ஊர் மாறி சென்றுகொண்டேயிருப்போம். சென்னையில் 4ஆம் வகுப்புவரை படித்தேன். பின்னர் படிப்புக்காக கேரளாவில் செட்டிலாகிவிட்டோம். அப்பா மட்டும் ஊர் ஊராக மாற்றலாகி போய்க்கொண்டே இருந்தார். 12 வருடங்கள் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றுக்கொண்டு தேசிய விருது வாங்கியிருக்கிறேன். என் வீட்டில் எல்லோரும் இன்ஜினியர்கள். எனவே நானும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து கல்லூரி அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த போது பாஸில் சாரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்போது படித்த படிப்பு மறந்தே போய்விட்டது.

நெடுஞ்சாலை வாய்ப்பு பற்றி..
அருண் என்கிற எனது நண்பர் மூலமாக நெடுஞ்சாலை பட வாய்ப்பு கிடைத்தது. போட்டோ ஷூட் முடிந்ததுமே ஓ.கே. சொல்லிவிட்டார். இரண்டரை வருடம் இந்தப் படத்துக்கு மட்டுமே ஒதுக்கினேன். பலநாட்கள் நடிப்புப் பயிற்சி எடுத்த பின்பே ஷூட்டிங் செய்தார். என்னுடைய காட்சிகளை ஷூட் செய்வதற்கு முந்திய நாள் தான் எனது மேக்கப், நடை, உடை பற்றி தீர்மானித்தார். முதலில் கொஞ்சம் கலர் கம்மியாக காட்டுவதற்காக டல் மேக்கப் போட்டுப் பார்த்தார். அது செட்டாகவில்லை. பின்னர் மேக்கப் போன்றவற்றை கொஞ்சம் இயல்பாக மாற்றி நடிக்கவைத்தார். படத்துக்கு இரண்டரை வருடங்களில் நிறைய கஷ்டப்பட்டார். படமும் நல்லா வந்தது. ஆனால் அது எதிர்பார்த்த அளவு சரியாக ஓடாததில் எல்லோருக்கும் வருத்தமே.

படத்தின் மாங்காவைப் போல நீங்கள் தைரியமான பெண்ணா?
இல்லை. மாங்காவைப் போல மிகப் போல்ட்டான பெண்ணில்லை நான். ஓரளவுக்கு தைரியமான பெண் தான். எனது விஷயங்களை நானே பார்த்துக்கொள்ளவேண்டும் என்று இருப்பேன். மாங்கா அளவுக்கு ரவுடிப் பெண்ணில்லை நான். படத்தில் முதலில் நான் தமிழ்பேசி நடிப்பதாகத்தான் ஸ்கிரிப்ட் இருந்தது. எனக்கு தமிழ் தெரியாததால் தமிழ்ப் பயிற்சியும் கொடுத்தார்கள். கடைசியில் திடீரென்று மலையாளப் பெண்ணாக கேரக்டரை மாற்றிவிட்டார்கள். அது படத்திற்கும் எனக்கும் பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது.

எந்த மாதிரி வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் ?
இந்த மாதிரி என்று எதுவும் வரையறை வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் ‘ஷிவதா நடித்த வேடம் மாதிரி வேடத்தில் நடிக்கவேண்டும்’ என்று பலரும் சொல்லும்படி நினைவில் நிற்கும் வேடங்களில் நடிக்க வேண்டும்.
கிளாமராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. குட்டியா ஆடை அணிவது மட்டும் கிளாமர் இல்லை. புடவை கட்டிக் கூட கிளாமராக தோன்றமுடியும். என்னைப் பொறுத்தவரை ‘ஐய்யே.. இந்தப் பொண்ணு ஏன் இப்படி டிரஸ் போட்டுருக்குன்னு’ யாரும் முகம் சுளிக்காதபடி உடை இருக்கவேண்டும். (இப்போதெல்லாம் கிளாமரா டிரெஸ் போட்டா யார் மேடம் முகம் சுளிக்கிறாங்க?. சந்தோஷமா வாய் பிளந்து தானே பாக்குறாங்க)

காதல் அனுபவங்கள் ஏதும்?
படிக்கும்போது எனக்கு நிறைய காதல் கடிதங்கள் வரும். அதை வீட்டில் அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து படிப்போம். காதல் வரிகளைப் படித்துவிட்டு அவர்கள் அடிக்கும் கமெண்ட்ஸ் சூப்பராக இருக்கும்(?!). ஒரு பையன் என் கண்முன்னாலேயே கையை அறுத்து ரத்தத்திலேயே லவ்லெட்டர் எழுதிக் கொடுத்தான். இன்னொரு பையன் என்னுடைய பரதநாட்டிய நடனத்தை போட்டோ எடுத்து பெரிசா பிரேம் போட்டுக் கொடுத்தான். அதை நான் வாங்க மறுத்ததும் வீட்டுக்கு கொரியரில் அனுப்பினான். இந்த மாதிரி ஒருதலைக் காதல் அனுபவங்கள் நிறைய இருக்கு( ரொம்பத் தான் பீத்திக்கிறீங்க மேடம்).