mundasuppatti-movie-review

தமிழில் புனைவுக் கதையாக ‘இம்சை அரசன்’ போன்ற படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. அவற்றில் முண்டாசுப்பட்டியும் புதிதாக இணைந்திருக்கிறது. 80களில் அல்லது 70களில் நடப்பது போல காட்டப்பட்டிருக்கும் கதை. செல்போனுக்கு செல்போன் கேமராக்கள் வைத்து க்ளிக்கிக் கொள்ளும் இந்தக் காலம்போல அல்லாமல் கையில் வைக்கும் டப்பா சைசில், சைடில் ஒரு ஹேண்டிலைச் சுழற்றி அப்பெர்ச்சரைத் திறந்து படம் பிடிக்கும் பழைய காலத்து

கறுப்பு வெள்ளை கேமரா இருக்கும் காலத்தில் நடக்கிறது இந்தக் கதை.

நாயகன் விஷ்ணு பெல்பாட்டம் பேண்ட்டும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ கமல் போடும் முக சைஸுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சிறிய டவுன் ஒன்றில் ஹாலிவுட் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவருடைய அஸிஸ்ட்டெண்ட் காளி சங்கர். இவர்கள் இருவரும் முண்டாசுப்பட்டி என்னும் ஊருக்கு ஒரு பிணத்தை போட்டோ எடுக்கப் போகிறார்கள். அப்போதுதான் தெரிகிறது அந்த ஊர் மக்கள் போட்டோ எடுத்தால் செத்துப்போவோம் என்கிற மூடநம்பிக்கை நிரம்பியவர்கள் என்று. அத்தோடு மட்டுமல்ல எதற்கெடுத்தாலும் அரிவாளைத் தூக்கும் வில்லங்கமானவர்களும் கூட. அந்த ஊரில் மாட்டிக்கொண்டு விஷ்ணுவும் காளியும் படும் பாடுதான் கலகலக்கும் முண்டாசுப்பட்டி.

படம் லைட்டான சென்ஸ் உள்ள படம் என்கிற அண்டர்ஸ்டாண்டிங்கோடு உள்ளே போய் உட்கார்ந்தால் நாமும் முண்டாசுப்பட்டிக்காரர்களின் முண்டாசுக்குள் சிக்கிக்கொள்கிறோம். இயக்குனர் ராம்குமார் எடுத்து,நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பரிசுபெற்ற குறும்படத்தை கொஞ்சம் இழுத்து காதல், வானமுனிக் கல் என்று சேர்த்து பெரிய முண்டாசாக விரித்திருக்கிறார்கள். இழுத்த இழுவை போதாமல் பிற்பாதியில் கதை கொஞ்சம் ஆமை வேகத்தில் போக ஆரம்பித்தாலும் கடைசி நேரங்களில் மீண்டும் விறுவிறுப்பை பிடித்துக் கொள்கிறது.

படத்தில் நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். விஷ்ணு, அவரது அஸிஸ்டெண்ட் காளி மற்றும் இறந்து போனவரின் தம்பி முனீஸ் காந்தாக வரும்  ராமதாஸ் ஆகியோர் படம் முழுவதும் ஸ்கோர் பண்ணுகிறார்கள். அப்புறம் அந்த மீசைக்காரரும், சாமியாரும். காமெடி வசனங்கள் பளிச். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற த்ரில்கள் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட க்ளைமாக்ஸில் என்ன நிகழும் என்பதை பார்வையாளர்களே ஊகித்துவிடவும் கூடும். பாரதிராஜாவின் பழைய படங்களின் சாயலில் அப்படியே வரும் நாயகி நந்திதா ஒரு ஹோம்லியான நல்வரவு. படத்தை அந்தக் காலக்கட்டத்திற்கே சென்று உள்வாங்கி அதை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கும் ராம்குமார் ஒரு பெரிய ஆளாய் வரும்குமார். நடித்தவர்களின் வித்தியாசமான முகபாவனை, வசன உச்சரிப்புகள் எல்லாவற்றையும் கதையை உருவாக்கிய இயக்குனரால் மட்டுமே வெளிக்கொணர்ந்திருக்கமுடியும். எனவே அவருக்கு சபாஷ்.

இசையமைத்த சீன் ரோல்டன் கிடார் மற்றும் வயலின் கொண்டு மேற்கத்திய நாட்டுப்புற ஸ்டைலில் பாடும் ‘ராசா’ பாடலில் சூப்பர் ராசா என்று சொல்லவைக்கிறார். பிண்ணணி இசையும் நன்றாக செய்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு பி.வி. ஷங்கர். குளுமை.  80களில் வெளிவந்த ஒரு கறுப்பு வெள்ளை படத்தை அப்படியே தெளிவான டிஜிட்டல் பிரிண்ட்டில் பார்ப்பது போல கலர்டோன் செய்திருக்கிறார். கலை இயக்குனர் கோபி ஆனந்த் 80க்கு முந்தைய காலத்தை எல்லா ப்ரேம்களிலும் சரியாக கொண்டுவந்திருக்கிறார். வெறுமனே காமெடியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட கதையில் போகிற போக்கில் அப்படியே மக்களின் மூடநம்பிக்கைகள் மேல் லேசாகக் கல்லெறிந்துவிட்டும் சென்றிருக்கிறார் இயக்குனர்.

ரொம்ப சீரியசா எதையும் எதிர்பார்க்காம ஜாலியா முண்டாசுப்பட்டிய விஸிட் பண்ணிட்டு வாங்க. 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.