மீண்டும் தலையெடுக்கும் சண்டியர்

sandiyar-dir-cholza-devan

“அநீதிகளும், ஊழல் மனப்பான்மையும் மலிந்துவிட்டிருக்கும் இந்தக் கால சூழலில் மனிதர்கள் அரசியலையும் சாக்கடை என்று ஒதுக்கிவிடுகிறார்கள். கிடைத்ததை அள்ளிக்கொண்டு போகவேண்டும் என்கிற மனநிலை எல்லோருடைய மனதிலும் ஊற ஆரம்பித்துவிட்டது. நேர்மையற்றிருப்பதை யாராவது சுட்டிக்காட்டினால் ‘நீ மட்டும் ஒழுங்கா’ என்று எதிர்பக்கம் விரல் நீட்டும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். தனிமனித ஒழுக்கம் என்பதே கேலிப்பொருளாகிப்

போன இந்தச் சூழலில் அதைக் கடந்துபோகிற ஒரு மனிதனுக்கு என்பதுதான் என் படம்.” – சொல்கிறார் இயக்குனர் சோழதேவன். இயக்குனர்கள் ரமணா மற்றும் விஜியஇன் உதவியாளராக பணியாற்றிய இவர் இயக்கும் முதல்படம் ‘சண்டியர்’.

படத்தின் தலைப்பை ஏற்கனவே கமல் தனது படத்திற்கு வைத்து பிரச்சனையாகியதே?
அது ஜாதியைக் குறிக்கும் விதமாக படமும் படத்தின் தலைப்பும் அமைந்ததால் அந்தப் பிரச்சனை. அதனாலேயே முன்பே சொல்லிவிடுகிறேன். கதை எனது வாழ்க்கையிலிருந்தே உருவானது. தஞ்சாவூர் பக்கத்தில் பள்ளியூர் தான் என் சொந்த ஊர். படித்து முடித்து சினிமா ஆசையில் சென்னை வந்து அலைந்து திரிந்து, உதவி இயக்குனராகப் பணியாற்றி பல வருடங்கள் ஓடிவிட்டன. திரும்ப ஒருநாள் எனது கிராமத்தைப் பார்த்துவரும் ஆசையில் கிளம்பி ஊருக்குப் போனால் ஊரே மாறிப்போயிருந்தது.

மனிதம், விவசாயம், சகோதரத்துவம், அரசியல், அப்பாவித்தனம், அழகியல் எல்லாம் மாறியே போய்விட்டிருந்தன. கிராமத்து மனிதர்களின் நாட்கள் பணம் தேடிய ஓடலில் கொஞ்சம் சளைத்ததாயில்லாமல் ஆகிவிட்டிருந்தது. பார்ட்டி, குடி என்று அனுதினமும் டாஸ்மாக்கின் முன்னால் கூடும் மக்களாக அவர்கள் ஆகிவிட்டிருந்தனர். தாய்மை, அன்பு, சகோதரத்துவம் இவற்றை தேடித்தானே எல்லோரும் வந்தோம். இப்போது திரும்பிப் போனால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறதே ஊர், இதன் காரணம் என்ன என்பதை எண்ணியபோது மாறிப்போன தலைமுறைக்கான பாடம் இருந்தது. அதுதான் இந்தப் படம்..

வளரும் தலைமுறைக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ?
வளர்ந்து வரும் எதிர்காலத் தலைமுறைக்கு நாம் என்ன கற்றுக் கொடுத்திருக்கிறோம் ? பசி தீர்க்கும் இரக்கத்துக்குப் பதில் இரை தேடும் வித்தையை மற்றும் கற்றுக் கொடுக்கிறோம். பணம், அதிகாரம் என்ற இடத்தை அடைவதையும் அதற்கான போட்டியாகவுமே வாழ்க்கையை முக்கால்வாசிப் பேர் கருதிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தலைமுறை தவறான பாதையில் பயணப்படவும் தயாராகிறது. சண்டியர் என்பது இழிவின் அடையாளம். சண்டியர் என்பவன் வாழத் தகுதியற்றவன் என்பதை அழுத்திச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

தஞ்சையும், தஞ்சைப் பகுதிகளும் படத்தில் உள்ளனவா?
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வரலாற்றில் சுயமரியாதையோடும், யாரையும் சுரண்டாமல், சுயநலநோக்கில் சண்டையிடாமல் வாழ்ந்து வருவதற்கு எப்போதும் வளமாயிருந்து உணவு விளைவித்துக் கொடுத்த தஞ்சை முக்கிய காரணம். தற்போதைய அரசியலும், நீர்ப் பிரச்சனைகளும், அரசியல்களும் தஞ்சையின் விவசாயத்தை எந்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதை உதிரிப் பதிவாகச் சொல்லியிருக்கிறேன். தஞ்சையின் உண்மையான பிரச்சனைகளை இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும் கொண்டுவந்ததில்லை. அவற்றை சஸ்பென்ஸாக வைக்கிறேன். திரையில் காணுங்கள். தஞ்சையின் முக்கிய பகுதிகளான பூண்டி, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், நீடாமங்கலம், சடையார் கோயில் போன்ற இடங்கள் படத்தின் கதை செல்லும் இடங்கள்.

படத்தில் நடித்த, நடிக, நடிகைகள் பற்றி..
ஆர்ப்பரிக்கும் சண்டைக் காட்சிகள் போன்ற எதுவும் இல்லாத கதையுள்ள படம்தான் இது. அதே போன்று கதைக்கான மாந்தர்களும் பெரிய ஹீரோக்களாய் இல்லை. பெரிய ஹீரோக்களை இந்தக் கதைக்குள் புகுத்துவதும் சிரமம். பட்ஜெட்டும் இல்லை. புதுமுகங்கள் பலரை டெஸ்ட் ஷூட் நடத்தி ஜெகன் என்கிற திருநெல்வேலிக்காரரை கதாநாயகனாக நடிக்கவைத்துள்ளேன். நாயகி கயலும் மலையாளத்திலிருந்து வந்திருக்கும் புதுமுகமே. இதுபோக எல்லா பாத்திரங்களிலும் புதுமுகங்களே நடிக்கின்றனர்.