salim-movie-review

விஜய் ஆண்டனி தனக்குப் பொருந்தும் பாத்திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். கடைசியாய் வெளியான அவருடைய ‘நான்’ ம் இதுபோன்றதொரு நீட்டான த்ரில்லர் தான். சலீம் அந்த வகையில் வெறுமனே த்ரில்லராக மட்டுமில்லாமல் தனிமனிதனுக்கும் சமூக யதார்த்தத்திற்குமான இடைவெளியைப் பற்றியும் பேசுகிறது. இது ‘நான்’ படத்தின் இரண்டாம் பாகமென்றும் கொள்ளலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.

சலீம் ஒரு மென்மையான, நேர்மையான, ஏழைகளுக்கும் இரங்கும் மனமுள்ள டாக்டர். தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரிகிறார். தனியாளாகவே வாழ்ந்துவிட்ட சலீம் நாயகி அஷாவை பெண்பார்த்து நிச்சயம் செய்கிறார். அவர்களுக்கிடையே ஒரு நட்புறவு ஏற்படும் வேளையில் சில சில பிரச்சனைகள் வெடிக்கின்றன. மிகவும் நேர்மையானவராகவும், யாரையும் துன்பப்படுத்தாதவராகவும் வாழும் சலீம் திடீரென்று ஒரே நாள் இரவில் நடக்கும் நிகழ்வுகளால் வன்முறையாளராக மாறுகிறார். ஏன் மாறுகிறார் / என்னதான் அவர் வாழ்வில் நடந்தது ? என்பது போன்ற விஷயங்கள் படத்தின் சத்தான விஷயங்கள் என்பதால் அதை தியேட்டரிலேயே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

படத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் நிலவொளியில் நடக்கும் அந்த வன்முறைக் காட்சி மட்டும் காட்டப்படாமல் இருந்திருந்தால் படம் இரண்டாவது பாகத்தில் பார்வையாளர்களை ஏன் நடக்கிறது ? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் முற்றிலும் த்ரில்லான உணர்வைத் தந்திருக்கவேண்டியது. சலீமாக விஜய் ஆண்டனி, பாத்திரமாகப் பொருந்திப் போகிறார். ‘என் பேரைக் கேட்டவுடனேயே தீவிரவாதின்னு முடிவு பண்ணிட்டீங்க. சரி என் பேரை விஜய்ன்னோ இல்லை ஆண்டனின்னோ வெச்சிக்கங்களேன்’ என்று பேசுமிடத்தில் பார்வையாளர்கள் கைதட்டல் கேட்கிறது. நாயகி அஷா கொஞ்சம் முகத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் நடிப்பில் ஓ.கே. செய்கிறார்.

‘மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் ஒரு சேவையல்ல. மாறாக ஒரு டார்கெட்’ எனப் பேசும் இடத்தில் எளிய மருத்துவ சேவைகளுக்குக்கூட பெரும் பணம் பிடுங்கும் இன்றைய மருத்துவமனைகளையும் அதில் பணத்தைக் கொடுத்து நோயை சரிசெய்துகொள்ள இயலாமல் போகும் நிலை சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ளதையும் இயக்குனர் படம் பிடிக்கிறார். போலீஸ் ஸ்டேஷன்களின் மனித நேயமற்ற தன்மையையும் அந்தஇன்ஸ்பெக்டர் வேடத்துக்காரர் நன்றாகப் பிரதிபலிக்கிறார்.

படம் த்ரில்லர் என்கிற விஷயத்தையும் தாண்டி முஸ்லீம் என்பவனும் ஒரு சாதாரண மனிதன்தான் என்கிற பார்வைக் கோணத்தை ரசிகர்கள் முன் வைப்பதன் மூலம் விஸ்வரூபம் போன்ற விஷமான படங்களினால் முஸ்லீம்களின் மேல் மற்றவர்களுக்கு ஏற்படும் இனம்புரியாத வெறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. அந்த மனிதாபிமானப் பார்வையை முன்வத்த விஷயத்தில் கமல்ஹாசன் வெட்கப்படும்படியான உயரத்தில்

நிற்கிறார் இயக்குனர் நிமல்குமார். உறுத்தாத வசனங்கள், பளிச்சென்ற ஒளிப்பதிவு( கணேஷ் சந்திரா) தெளிவான எடிட்டிங் (எம்.வி. ராஜேஷ் குமார்), குறுக்கிடாத இசை( விஜய் ஆண்டனி) என்று எல்லோரும் தங்கள் கடமைகளை சரிவரச் செய்திருக்கிறார்கள். இவர்களின் கூட்டுழைப்பில் சலீம் நிமிர்ந்து நிற்கிறான்.

அந்த வெளிநாட்டு டூயட் பாடலையும், ஆஸ்பத்திரியில் காமெடிக்காக சேர்க்கப்பட்ட சில காட்சிகளையும், பப்பில் நடக்கும் ஒரு பாடலையும் தவிர்த்திருக்கலாம் எனினும் சலீமுக்காக அவற்றை மறந்து விடுவோம்.

சலீம்  – அதிர்ச்சி வைத்திய டாக்டர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.