‘திருட்டுக்’கத்தி’ மட்டமான உத்தி

ஏ[டாகூட]. ஆர்[ஜித] முருகதாஸ் மீது கதைத்திருட்டுப்பட்டம் கட்டப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு இவர் இயக்கிய ’ரமணா’ கஜினி’ உள்ளிட்ட படங்களும் ஒன்று திருட்டு டி.விடி அல்லது மற்றவர்களின் கதையைச்சுட்டே படமாக்கப்பட்டது என்பது ஊர் அறிந்த உண்மை.

’கத்தி’யின் ஒரு நாள் வசூல் 26 கோடி என்று ட்விட்டரில் போட்டுவிட்டு, குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார். அதே சமயம் இந்தக் கதையின் ஒரிஜினல் சொந்தக்காரர் மீஞ்சூர்கோபி வயிறு எரிய வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சுமார் ஒன்றைரை வருடகாலம் தன்னுடன் வைத்திருந்து விட்டு, பத்துப்பைசா கூட தராமல் இந்தக்கதையை முருகதாஸ் திருடிவிட்டார் என்று இணையங்களில் கோபியின் நண்பர்கள் பலரும் கொதித்தெழுந்து வருகின்றனர்.

அதில் முக்கியமான இருவர்களின் செயல்பாடு, இது வழக்கமான கோஷ்மாக இல்லாமல் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் பா.ஏகலைவன். ‘குமுதம்’ பத்திரிகையில் பணியாற்றியவர்.

இன்னொருவர் முத்து கிருஷ்ணன். எழுத்தாளர், சுதந்திர செய்தியாளர், சமூக ஆர்வலர். ‘விஜய் டிவி’யின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பலமுறை பங்கேற்று, தனது தனித்துவமான கருத்துக்களை பதிவு செய்திருப்பவர்

என்ன சொல்லுகிறார் ஏகலைவன்?

சரியாக ஐந்தாண்டுகள் இருக்கும். குமுதத்தில் இருந்த நேரம். பத்திரிகையாளர் தேவா மூலம் அறிமுகமானார் கோபி. அதிக படிப்பாளி. படைப்பாளியும்கூட. திரைப்படக் கதை மற்றும் இயக்கம் பற்றி பிரமிப்பாக பேசுவார். வீட்டிற்கு வந்தாரானால் மணிக்கணக்கில் விவாதம் நீளும்.

அப்படித்தான் தண்ணீருக்கான அரசியல், பன்னாட்டு பெரு முதலாளிகளின் பங்கு என்ற விதத்தையும் விவரித்தார் – அவரது பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து. எப்படி என்றால் திரைக்கதையாகவே. முற்போக்கு சிந்தனையோடு இப்படி மக்கள் பிரச்சனையை அணுகும்விதம் சினிமாவில் குறைவு.

இப்படியான சந்திப்பின்போதுதான் ஒரு நாள் எனக்கும் அவருக்குமான ‘எடக்கு முடக்கான’ கதையும் நடந்தது.

“காவிரி தண்ணீர் பிரச்சனை என்றால் தஞ்சை விவசாயி மட்டும்தானே போராடுறான். அங்கிருந்து கொஞ்சம் விவசாயிகள் சென்னை வந்து நம்ப கண்ணு முன்னதான் போராட்டம், ஆர்ப்பாட்டம்னு நடத்துறான். இதை சென்னைவாசிகள் வேடிக்கை பார்த்தபடியே, ‘நமக்கென்ன வந்தது’ என்று போகிறானே… ஏன்? தண்ணீர் கஷ்டம் பற்றி அவனுக்கு தெரியல. தெரியணும்னா என்ன செய்யணும்? வீராணம் குழாய உடைக்கணும். பூண்டி நீர்தேக்கத்தை முடக்கணும். அதுவும் விவசாயிகளே செய்யணும். நமக்கு சோறு போடுற விவசாயிகளோட கஷ்டம் அப்பதான் இந்த நகரவாசிகளுக்கு புரியும். ரெண்டு நாள்… இரண்டே இரண்டு நாள், குடிக்கவும் குடிநீர் இல்லாம தவிச்சானா, காவிரி நதிநீர் பிரச்சனையும், தஞ்சை விவசாயிகளோட போராட்டத்தையும் புரிஞ்சுக்குவான்… இல்ல?” என்று கோபி உணர்ச்சிவசப்பட்டு பேச, “அது தீவிரவாதமில்லையா?” என்று நான் கூற, “காவல் துறையை ஏவி மக்களை தாக்குவது என்ன, புனித போராட்டமா, இல்ல தீவிரவாதமா?” என்று அவர் கேட்க, கடைசியில் கரடுமுரடா முடிந்தது…

பிறகு ஒருநாள் வந்தார். பிரபல(!) இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் இந்த கதையை பற்றி சொன்னதாக கூறினார். இன்னும் சில மாதம் கழித்து சந்தித்தபோது, “ஷாட் பை ஷாட்டாக சொல்லி விவாதித்துள்ளேன். படத்தை அவர் தயாரிப்பதாகவும், நான் இயக்குவதாகவும் திட்டம்” என்றார். “மகிழ்ச்சி. தீவிர உழைப்பிற்கு வெற்றி கிடைக்கட்டும்” என்றேன்.

அடுத்த ஓரிரு மாதம் கழித்து சந்தித்தபோது, “தினமும் முருகதாஸிடம் கதை விவாதம் நடப்பதாக சொல்கிறீர். முன்பணம் ஏதாகிலும் கொடுத்தாரா? அல்லது செலவுக்கு ஏதேனும் தந்தாரா?” என்றேன். நக்கலாக சிரித்துவிட்டு, “இந்த ஒன்னரை வருஷத்தில் நாலே நாலு இட்லி, ஒரு டீ… அவ்வளவுதான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூறு ரூபாய் மட்டும் கொடுத்தார். அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார்” என்றார் வேதனையோடு.

இப்படி ஒன்னரை வருடமாக சிரமப்பட்டு போய் கதை சொல்லி விவாதித்து முடிந்த படம்தான் இன்றைய ‘கத்தி’ திரைப்படம். பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸே “சொந்தமா யோசிச்சு” எடுத்த படம்…!

போகட்டும். இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் நண்பர் கோபி. இவருடைய கதை ஸ்கிரிப்ட்டை, ஷாட் பை ஷாட்டாக கொடுத்திருந்தார். வழக்கு சொதப்பலானது. காரணம் வேற…

இப்போது மீண்டும் புதிய வழக்கறிஞரை பிடித்து, மீண்டும் வழக்கு போட்டிருக்கிறார். ஆனால் நண்பர் கோபி நீதிமன்றத்தில் கதையை கொடுத்ததை போல தைரியமாக எதிர்தரப்பு கொடுக்கவில்லை. உதவாத காரணங்களைச் சொன்னது.

இப்போது படத்தை பார்த்துவிட்டு கோபி கதறுகிறார். “ஒவ்வொரு காட்சியும் நான் சொன்னதேதான். காவிரி விவசாயி பிரச்சனையில், ‘பூண்டி நீர்தேக்கத்தை முடக்கணும், வீராணம் குடிநீர் குழாயை மூடணும்’ என்று சொன்னதைகூட எடுத்து காட்சி படுத்தியிருக்கிறார்கள். நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஸ்கிரிப்ட்ல எல்லாமும் அப்படியே இருக்கு” என்று புலம்புகிறார் என்கிறார் ஏகலைவன்.

இந்த முறை விசயத்தை லேசில் விட்டுவிடாமல் பெரும்போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார்கள் கோபியின் நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள்.