குபீர் – நினைத்தாலும் ‘பகீர்’. விமர்சனம்

‘நட்டு கழண்டவர்கள் ஐந்து பேர் ஒரு இடத்தில் சந்தித்தால் எப்படி  இருக்கும்.?  ஐந்து பேரும் ஐந்துவிதமான நட்டுகளாக இருந்தால் எப்படி இருக்கும்? அவர்கள் ஐந்து பேரும் நான்ஸ்டாப் நான்சென்சாக தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? சற்றும் கேப் விடாமல் இரண்டு மணிநேரம் பத்து நிமிடத்துக்கு உளறிக்கொட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்???
ஏன்யா இந்த கொலவெறி என்று கேட்க நினைப்பீர்கள். ஆனால் ‘குபீர்’ என்றொரு படம் படுத்திய பாடு இருக்கிறதே…

ஒரு வாரக்கடைசியை கொண்டாட நினைக்கும் ஐந்து வம்பர்கள், ஒரு வீட்டில் அமர்ந்து குடிக்கிறார்கள் குடிக்கிறார்கள் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சரக்குக்கு சைடிஷாக தமிழ்சினிமா தொடங்கி சேகுவாரா வரை மென்று துப்புகிறார்கள். படத்தில் வசனங்கள் மட்டும் சுமார் ஐநூறு பக்கங்கள் தேறும். அதில் ஐந்து ஆறு வசனங்கள் தாண்டி அத்தனையும் அரைவேக்காடு.
அவர்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால் படத்தில் நடித்த, இயக்கிய, தயாரித்த மற்றும் தொழில்நுட்ப[?] கலைஞர்கள் அனைவரும் மதுரை தியாகராஜா கல்லூரியை சேர்ந்தவர்கள் என்று அறிய முடிகிறது.

ஏற்கனவே  படங்கள் இயக்கி சிலபல ஆஸ்கார்களை வாங்கியவர்கள் போல் அஜீத், விஜய்யில் துவங்கி சினிமாக்காரர்கள் பலரையும் கிண்டலடித்திருப்பது உச்சக்கட்ட எரிச்சல். ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் இவர்களது கல்லூரி சீனியர் என்பதால் அவரை மட்டும் வியந்து பேசுகிறார்கள்.[கார்த்திக் சுப்பாராஜ் தனது ஃபேஸ்புக்கில் இந்த அரைவேக்காட்டுப் படத்தை, வித்தியாசமான படம் ஆதரியுங்கள் என்று ஸ்டேட்டஸ் போட்டிருப்பது தனிக்கதை].
என்னத்தைச்சொல்ல….படத்தை முழுசாய் பார்த்த அனுபவத்தை இப்போது நினைத்தாலும் பகீர் என்கிறது.

ஆர்வக்கோளாறின் உச்சபட்சம் தான் இந்த ‘குபீர்’.