ஒரு மோசமான இயக்குனரிடம் ‘பசையுள்ள’ தயாரிப்பாளர் சிக்கி எல்லா பணத்தையும் இழந்து கடைசியில் கால் வயிற்றுக்கு கஞ்சி குடிக்கிற நிலைமைக்கு ஆளாவதும், ஒரு திறமையான இயக்குனர் தனது சுருக்கு பையை அவிழ்க்கவே அஞ்சுகிற ஒரு தயாரிப்பாளரிடம் சிக்கி, நினைத்ததை எடுக்க முடியாமலும், எடுத்ததை அவரே காண சகிக்க முடியாமலும் அந்து அவலாகிற நிலைமை கோடம்பாக்கத்தின் ஊழ்வினை! எப்பவாவதுதான் ஒரு திறமையான இயக்குனரும், சிறப்பான தயாரிப்பாளரும் ஒன்று சேர்கிறார்கள். அந்த படங்கள்தான் எந்த பம்மாத்தும் இல்லாமல் நிஜமாகவே ‘சக்சஸ் பார்ட்டி’ வைக்கிறது.
இந்த நேரத்தில் ‘என் கண்ணில் படுகிற கோபுர கலசங்களை குறிப்பிட்ட உயரத்தில் வச்சே தீருவேன்’ என்று கிளம்பியிருக்கிறார்கள் ஜெய்லானியும், முத்துராமலிங்கனும். இவர்களில் முறையே ஜெய்லானி ‘கேள்விக்குறி’ என்ற படத்தை இயக்கியவர். முத்துராமலிங்கன் ‘சினேகாவின் காதலர்கள்’ என்ற படத்தை இயக்கியவர். தங்களது நிறுவனமான மூவி ஃபண்டிங் நெட்வொர்க் மூலமாக தமிழ்சினிமாவில் பல அதிரடி முயற்சிகளை அரங்கேற்ற போகிறார்கள் இவர்கள். அதில் முதல் அஜண்டா இதுதான்.

நாடெங்கிலும் உள்ள திறமையான இளைஞர்களிடமிருந்து சினிமா ஸ்கிரிப்டுகளை வரவழைத்து அதில் ஐந்தை மட்டும் தேர்ந்தெடுத்து, நல்ல தயாரிப்பாளர்களிடம் சேர்ப்பது. இந்த திட்டத்தின் கீழ் முழுநீள திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டும், குறும்படத்திற்கான ஸ்கிரிப்டும் வரவேற்கப்பட்டன. சுமார் 150 ஸ்கிரிப்டுகளில் ஐந்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் கையால் சர்டிபிகேட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் மீரா கதிரவனும் கலந்து கொண்டார். இந்த ஸ்கிரிப்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று மேடையிலேயே வாக்குறுதி கொடுத்தார் அவர்.

சமீபத்தில் கன்னடத்தில் வந்து பெரு வெற்றி பெற்ற ‘லுசியா’ என்ற படம் க்ரவுட் ஃபண்டிங் என்ற முறையில் தயாரிக்கப்பட்ட படம். அதாவது சுமார் ஐம்பது அறுபது பேர் இணைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு படம் துவங்குவது. கிடைக்கிற லாபத்தை சமமாக பங்கு போட்டுக் கொள்வது. நஷ்டம் வந்தால்? அல்வா திங்கிற அதே வாய்தான் அரளிக்கொட்டையையும் முழுங்கியாகணும்!
இந்த க்ரவுட் ஃபண்டிங் முறையில் தங்கள் இரண்டாவது படங்களை துவங்கப் போகிறார்கள் இருவரும். ஜெய்லானி படத்திற்கு ‘சவுண்ட் கேமிரா ஆக்ஷன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு சினிமா எடுக்கப்படும்போது, அதில் வரும் பிரச்சனைகளும் அதனால் பாதிக்கப்படும் படக்குழுவும் படுகிற சங்கடங்களை கமர்ஷியலாக சொல்லப் போகிறாராம் இந்த படத்தில்.
முத்துராமலிங்கன் படத்தின் தலைப்பு, ‘ரூபசித்திர மாமரக்கிளியே…’. இது சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்தில் வரும் பாடல் வரிகள். இது ஒரு லவ் த்ரில்லர். அவ்ளோதான் இப்போதைக்கு சொல்ல முடியும் என்று நிறுத்திக் கொண்டார் அவர்.
‘இது தொடர்பாக ஆயிரம் என்ன, பத்தாயிரம் கேள்விகள் கேட்டாலும் எல்லாத்துக்கும் நியாயமான பதில் சொல்ல தயாராக இருக்கோம். கேட்டுட்டு திருப்தியா இருந்தால் மட்டும் இன்வெஸ்ட் பண்ணுங்க’ என்கிறார்கள் இருவரும் கோரஸாக!
சரியோ… தவறோ…? நாமளும் படம் தயாரிக்கணும் என்ற எண்ணமிருக்கிற ‘பசை’ பார்ட்டிகள், பொட்டியிலிருந்து கொஞ்சூண்டு எடுத்து ட்ரை பண்ணி பார்க்கலாமே!

நன்றி

http://www.newtamilcinema.com/public-investment-for-cinema/

Related Images: