’கத்தி’ கதைத்திருட்டு இந்த அளவுக்குப் பற்றி எரிவதில் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏக சந்தோஷம்.  ‘என் கதையை குறிப்பிட்ட இயக்குநர் திருடிவிட்டார்’ என்று  புலம்பியவர்களை ஏறத்தாழ பைத்தியக்காரர்கள் போலவே பார்க்கவைத்த சினிமா நம் தமிழ்சினிமாவாக மட்டுமே இருக்கும்.
ஒன்றா இரண்டா, இன்றா நேற்றா காலகாலமாக நடந்து வரும் இந்தக்கதைத்திருட்டில் மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா உட்பட அனைவருக்கும் பங்கு உண்டு.
முருகதாஸின் முன்னோடிகளான இவர்கள் குறித்து இரண்டு சம்பவங்களை கவிஞர் மகுடேஸ்வரன் தனது முகநூலில் இன்று எழுதியிருக்கும் இந்த வேதனையான பதிவுகளை படியுங்கள்.
இதுபோன்ற ஆயிரம் திருட்டு சம்பவங்கள் இருக்கின்றன தமிழ்சினிமாவில்…

பூர்வ ராகங்கள்’ திரைப்படம் என். ஆர். தாசன் என்ற எழுத்தாளரின் கதை. எழுபது எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் அவர். அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநரைத் தொடர்புகொண்டபோது முறையான பதில் கூறப்படவில்லை. இத்தனைக்கும் என்.ஆர். தாசன் அரசுத்துறையில் உயரதிகாரி. பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நெடுநாள் நடந்தது.

இடையில் இதுதொடர்பாக இருதரப்புக்குமிடையில் பேச்சு வார்த்தை நடத்த முயன்றவர் மறைந்த நாடக இயக்குநர் கோமல் சுவாமிநாதன். என். ஆர். தாசனுக்குச் சார்பாகவே தீர்ப்பு வந்தது. ஏற்கனவே வெளியான புத்தகத்தில் வந்த கதையைப் படமாக்கினால் தப்பிக்கவா முடியும் ? வழக்கு முடிவில் எதிர்த்தரப்புக்கு அபராதம் ஆயிரம். படத்தில் அவர் பெயரைச் சேர்க்க வேண்டும். பணத்தையோ பெயரையோ அவர் எதிர்பார்க்கவில்லை, நீதிக்காக அந்த வழக்கை நடத்தினார்.

முதல் மரியாதை’ திரைப்படக்கதையின் மையம் (ஒன்லைன்) என் நண்பரும் எழுத்தாளருமான சுப்ரபாரதிமணியனுடையது. ‘கவுண்டர் கிளப்’ என்ற தலைப்பில் சுப்ரபாரதிமணியன் எழுதிய குறுநாவலின் விரிவாக்கமே அத்திரைப்படம். அந்தக் கதையில் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலின் அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. அது தொடர்பாக கி.ராஜாநாராயணனிடம் பேசவந்த பாரதிராஜாவின் உதவியாளர் சிறுதொகையைக் கொடுத்து ‘ஒப்புக்கொண்டீர்கள் எனில் படத்தில் உங்கள் பெயர் வரும். இல்லையென்றால் உங்கள் பெயரில்லாமல் படம் வரும்’ என்றாராம். வேறு வழியில்லாமல் கி. ராஜநாராயணன் ஒப்புக்கொண்டார் என்பார்கள். படத்தில் அவர் பெயர் வந்ததைக் கீழே இணைத்திருக்கிறேன்.

ஆனால், சுப்ரபாரதிமணியனை யாரும் அணுகவில்லை. அப்போது அவர் வளரும் எழுத்தாளர், புதியவர், இளைஞர். படம் வெளிவந்ததும் சுப்ரபாரதிமணியன் வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பினார். அந்த வக்கீல் நோட்டீஸ் முதல் மூன்று முறை பெற்றுக்கொள்ளாமல் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. நான்காவது முறை பெற்றுக்கொள்ளப்பட்டதாம். பெற்றுக்கொண்டதன் பின் சுப்ரபாரதிமணியனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்ததாம். ‘யார் நீ ? இந்தக் கதையை எழுதியதாகச் சொல்லும் சுப்ரபாரதிமணியனுக்கும் இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியிருக்கும் R.P. சுப்ரமணியனுக்கும் என்ன சம்பந்தம் ? இருவரும் ஒருவரே என்று உம்மால் நிரூபிக்க முடியுமா ? அப்படியென்றால் ஏன் வேறு பெயரில் கதை எழுதவேண்டும் ? அதன் உள்நோக்கம் என்ன ?’ என்பது அந்த வக்கீல் நோட்டீசின் சாரம்சம்.

சுப்ரபாரதிமணியனின் இயற்பெயர் R.P. சுப்ரமணியன். தம்பெயர்க்கு நடுவில் ‘பாரதி’யைச் சேர்த்துக்கொண்டதைத்தான் ‘பாரதி-ராஜா’ கேள்வியெழுப்புகிறார். ஓர் எழுத்தாளனுக்கு அந்த இடத்தில் எப்படி இருந்திருக்கும் ? அப்போது அவர் செகந்தராபாத்தில் பணி நிமித்தமாக வசித்திருக்கிறார்.

இது தொடர்பாக சுப்ரபாரதிமணியன் என்.ஆர்.தாசனை முன்னனுபவஸ்தர் என்ற வகையில் தொடர்புகொண்டு கேட்டபோது அதிலுள்ள ‘இடையூறுகளை’ விவரித்தாராம். ‘நான் மெட்ராஸ்ல இருந்தேன். கேஸ் நடத்தினேன். வழக்கறிஞரும் வேண்டிய நண்பர். எப்படியோ கஷ்டப்பட்டு நடத்திட்டேன். ஆனா, நீங்க எங்கேயோ இருக்கீங்க. மாசத்திற்கு இரண்டு தடவை வரணும். வருஷக்கணக்கில இழுக்கும். தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தாலும் அது ஆயிரம் இரண்டாயிரம் அபராதமா இருக்கலாம். நல்லா யோசிச்சிக்குங்க…’ என்று அறிவுறுத்தியிருக்கிறார். நன்கு யோசித்துப் பார்த்து வழக்குத் தொடரும் முடிவை சுப்ரபாரதிமணியன் கைவிட்டுவிட்டார்.

அண்மையில்கூட அவர் எழுதிக்கொடுத்த ‘காஞ்சிவரம்’ என்ற திரைக்கதை அவர்க்கே தெரியாமல் பல கைகளுக்கு மாறி, இறுதியில் ப்ரியதர்சன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வெளியாகி தேசிய விருதுகள் பெற்றது. அதற்கெதிராகவும், அவர் கதையைப் பெற்றுச் சென்றவர்களிடம் (கனிமொழி, தங்கர்பச்சான்) முறையிட்டுப் பார்த்தார். விளைவு ஒன்றுமில்லை. இவையெல்லாம் அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்டவை, நானாக வருவது வரட்டுமென்று பொறுக்கமுடியாமல் சொல்கிறேன். அறிவுலகமே, மனசாட்சியுள்ளோரே… இதற்கு என்ன சொல்கிறீர்கள் ?

Related Images: