கத்தி. விமர்சனம் 2 – மக்களுக்குத் தரும் புத்தி.

கல்கத்தா ஜெயிலில் இருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் திருடர் கதிரேசன் என்கிற விஜய். அவர் அங்கிருந்து தப்பித்து சென்னை வந்து தனது நண்பர் ரூமில் செட்டிலாகிறார். அப்போது நடுஇரவில் யாரோ சிலர் ஒருவனை சுட்டுத்தள்ளிவிட்டுச் செல்ல காப்பாற்றப் போகும் விஜய் அதிரச்சியாகிறார். அங்கே உயிர்போகக் கிடப்பது ஜீவா எனப்படும் இன்னொரு விஜய்.

ஜீவாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பின்பு ஆள்மாறாட்டம் செய்துவிட்டு ஜீவா இருந்த முதியோர் இல்லத்தில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்து கதிரேசன் ஜீவாவாய் முதியோர் இல்லம் செல்ல ஒவ்வொன்றாய் பிரச்சனைகள் கிளம்புகிறது. எந்நேரமும் விஜய்யை கொல்ல ஆட்கள் சுற்றி வர மெதுமெதுவே தெரிகிறது ஜீவா பற்றி.
ஜீவா தன்னூத்து எனும் தன் கிராம மக்களுக்காக போராடி வரும் ஒரு ‘தீவிரவாதி’. தனது கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் விவசாயம் செழிக்க அந்தப் பகுதியிலேயே நிலத்தினடியில் இருக்கும் வற்றாத நீரூற்று இருப்பதை அறிகிறான் ஜீவா. அதை ஏற்கனவே அறிந்திருக்கும் கார்ப்பரேட் கோலா கம்பெனி அங்கிருக்கும் நிலங்களையெல்லாம் விவசாயிகளிடமிருந்து பலமடங்கு விலை கொடுத்து வாங்கிவிடுகிறது.
ஊர்மக்களை ஒன்று திரட்டி போராடுகிறான் ஜீவா. பதிலுக்கு அவனைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான் கோலா கம்பெனியின் அதிபர். கார்ப்பரேட் கோலா கம்பெனியின் ஆட்கள் ஜீவாவைக் கொல்ல முயன்றது போல் கதிரேசனை ஜீவா என்று நினைத்துக் கொல்ல முயல ஏற்கனவே பக்கா ரௌடியான கதிரேசன் அவர்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார். நடுவில் சமந்தாவுடன் மானே, தேனே பொன்மானே போல கொஞ்சம் ஜாலியாகக் காதலித்துக் கொள்கிறார்.
கார்ப்பரேட் முதலாளிகள் அனைவரும் கோலா கம்பெனிக்காரனுக்கு உறுதுணையாயிருக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினையும் விலைக்கும் வாங்கும் முதலாளியை எதிர்க்க சென்னை மாநகரத்துக்கு குடிநீர் வரும் ஏரிகளை அடைப்பதன் மூலம் சென்னை நகரமே கிராமத்தைத் திரும்பிப் பார்க்கும்படி செய்து தனது கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் ஜீவாவும், கதிரேசனும் என்பதுதான் மீதிக்கதை.

படம் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை நாலே வரிகளில் விளக்கிவிடுகிறது. நாலாவது உலகப்போர் தண்ணீரால்தான் வரும் என்று யாரோ சொன்னார்கள். படத்தில் கம்யூனிசம் பற்றி கூட ஒரு எளிய விளக்கம் வருகிறது. சமீபத்தில் வேலை தருகிறேன் என்று பட்டை நாமம் சாத்திவிட்டுப் போன ‘நோக்கியா’விலிருந்து மக்கள் கார்ப்பரேட்டுகளின் ஓநாய்க் குணத்தை மெல்ல மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
kaththi-movie-review1
படத்தில் இதுபற்றி மட்டுமல்ல பாலாற்றில் கோக் கம்பெனி துளை போட்டு நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது, காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயுவை (அதாங்க சமையல் கேஸ்) எடுக்கும் ரிலையன்ஸ் கம்பெனிபற்றி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி, இவற்றிலெல்லாம் கார்ப்பரேட்டுக்கள் மக்களுக்கு மொட்டையடிப்பது பற்றி சர்வசாதாரணமாக வசனங்கள் பளிச்சிடுகின்றன. முருகதாஸூக்கு ஒரு சபாஷ். முருகதாஸ் இனி கார்ப்பரேட்டுக்குப் படமெடுப்பாரா? இல்லையா? என்பது நமது நாளைய கேள்வி.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் கொலைவெறித்தாக்குதலிலிருந்தும் படம் தப்பிப் பிழைத்திருப்பது நம் அதிர்ஷ்டமே. ஜார்ஜ் சி.வில்லியமஸின் ஒளிப்பதிவுக்கு ஒரு சியர்ஸ். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் (கதையைச் சுட்ட)முருகதாஸின் கதைக்கு பலம் சேர்க்கிறது. ஹீரோ படம் என்பதால் விஜய் மற்றும் விஜய்யின் நண்பன் சதீஷ் போன்றோரே படம் முழுவதும் தெரிகிறார்கள். கிராமத்துத் தாத்தாக்களின் சென்ட்டிமென்ட் வசனங்கள் சில நெஞ்சைத் தொடுகின்றன.

‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளராக இனப்படுகொலைகளுக்கு துணை போன ராஜபக்சேவின் பினாமி லைகா மொபைல்ஸ் இருந்ததும் அந்தப் பிரச்சனை பெரிதாகியதும் தெரிந்ததே. விஜய் கோக் போன்ற குளிர்பான கம்பெனிகளின் விளம்பர ஹீரோ. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் திரைக்கதையை அப்படியே ஒருவரிடம் இருந்து கறந்துவிட்டு அவரை கழற்றிவிட்டார் என்று ஏகப்பட்ட குளறுபடிகள் இந்தப் பட விவகாரத்தில் உண்டு. ‘கார்ப்பரேட்டுகள் தங்களுக்கான சவப்பெட்டிகளுக்கு தாங்களே ஆர்டர் கொடுக்கும்’ என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது.

திரையரங்கினுள் படம் பார்க்க அமரும் ஆடியன்ஸ் இதுபோன்ற முரண் அரசியல்களை உணர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான். படம் கார்ப்பரேட்டுகள் எவ்வாறு ஒவ்வொரு கிராமம், டவுன், நகரங்கள், ஆறு, குளம் என்று எல்லா வளங்களையும் தங்கள் லாபமாக உறிஞ்சுகிறார்கள் என்பதை மிகத் துணிவாகப் பேசுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை எவ்வாறு கைகட்டி சேவகம் செய்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது திரைக்கதை. இப்படி துணிவாகப் பேசியதற்காக ஏ.ஆர்.முருகதாஸுக்கும், விஜய்க்கும் நாம் சல்யூட் வைக்கலாம்.

இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் வெறும் ஆடலும், பாடலும் காமெடியுமே  பிரதானமாய்க் கொண்டு படம் எடுக்க முடியாமல் போகும் நிலைக்கு சினிமா உலகம் வந்திருக்கிறது. ரத்தமும் சதையுமாக சமூக அவலங்களும், வேலைவாய்ப்பின்மையும், அமைதியான வாழ்க்கை வாழமுடியாத நிலையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மேலும் மக்களை சக்கைகளாக கரும்பு எந்திரத்தில் பிழியும் சூழலில் நிஜ உலகை விட்டு நிறையவே விலகிப் போய்விட்ட கமர்ஷியல் சினிமா மக்களின் kaththi-movie-reviewபிரச்சனைகளை வசூலுக்காகவாவது பேசியே ஆகவேண்டிய சூழல் இன்று வந்திருக்கிறது. விஜய்யின் குத்துப் பாட்டுக்கும், காற்றில் பறந்து அடிக்கும் ஹீரோயிசத்துக்கும் மட்டுமே விசிலடித்து வந்த ரசிகன் இப்போது தனது ஆதர்சன ஹீரோ விஜய் ஒரு போராட்டக்காரனாக ஆவதைக் காணும்போது தானும் மக்கள் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவனாக ஆகும் வாய்ப்பு ஒரு பத்து சதவீதம் இருந்தால் கூட அது ஒரு சமூக நன்மையே.

இப்படியாகவாவது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களே என்று நாம் லேசாக திருப்திப் பட்டுக்கொள்ளலாம் தான். அந்த வகையில் கத்தி ராஜபக்சேக்களும், லைக்காக்களும் தாங்களே தங்களுக்கு வைத்துக்கொண்ட ஆப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.