’ஆரோகணம்’ என்ற,உண்மைக்கு நெருக்கமான, சற்றே கவனத்தை ஈர்த்த, லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படைப்பு. இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்போமே என்றுஜனங்களும் அவரும் பரஸ்பரம் நெருக்கமாக உணரமுடியாத ஒரு கற்பனையைக் கையில் எடுத்திருக்கிறார்.

நாயகன் சபீர், பெட்ரோல் பங்க் ஓனரின் மகனாக இருந்தும் பொறுப்பில்லாமல் ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறார். நாடெங்கும் பெட்ரோல் இல்லாமல் ஸ்ட்ரைக் நடந்துகொண்டிருக்கும் வேளையில், எம்.எல்.ஏ . ஏ.எல். அழகப்பன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் லாரியில் கொண்டுபொய் சேர்க்கும்படி வெங்காய லோடு கொடுத்து அனுப்புகிறார். அந்த லாரியில் கொஞ்சநேரத்தில் ஒரு காதல் ஜோடி தஞ்சமடைகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் தம்பிராமைய்யா லிஃப்ட் கேட்டு ஏறுகிறார். அடுத்த சில மைல்களில் பியாவும் அவரது பாய்ஃப்ரெண்டும் அடிசனல் லக்கேஜாக ஆஜராகிறார்கள்.

நடுநடுவே முதல் காதல்ஜோடியின் ஃப்ளாஷ்பேக், பியாவின் ஃப்ளாஷ்பேக் வந்துபோக, லாரியில் இருப்பது வெங்காயமல்ல,2ஆயிரம் லிட்டர்  டீஸல் அதுவும் நாட்டை சீர்குலைக்கப்போகும் தீவிரவாதிகளுக்கு உதவ என்று சபீருக்குத் தெரியவர, அவர் குபீர் ஆகி என்ன செய்தார் என்பது க்ளைமேக்ஸ்.

ஒரு நெடுஞ்சாலையில் ஒழுங்காக பயணிக்கவேண்டிய கதை, பஞ்சரான லாரிபோல், அவ்வப்போது படுத்துக்கொள்ளும்போது, ‘என்னம்மா நீங்களே இப்பிடி பண்றீங்களேம்மா’ என்று லட்சுமி ராமகிருஷ்ணனை நோக்கி கேட்காமல் இருக்கமுடியவில்லை.

ஹீரோவுக்கான எந்த லட்சணங்களும் பொருந்திவராத சபீர், கொடுத்தவேலையை செவ்வனே செய்திருக்கிறார். பியாவுக்கு நயா பைசா பெறாத கேரக்டர்.

அம்மா விஜிக்கும்,மகள் பியா பாஜ்பாய்க்குமான கதையை ‘சொல்வதெல்லாம் உண்மையின் ஏதோ ஒரு எபிசோடிலிருந்து சுட்டிருப்பார் போல. ‘எங்கப்பா யாரு?’ என்று தொடர்ந்து நச்சரிக்கும் பியாவிடம் ‘தெரியலை. நாலுபேரு என்னை ரேப் பண்ணினாங்க. அதுல யாருன்னு சொல்றது?’ என்று விஜி சொல்லும்போது… என்னம்மா இதெல்லாம் போறபோக்குல சொல்ற கதையாம்மா?’ என்று தியேட்டரில் ஆடியன்ஸ் சவுண்டுவிடப்போவது நிச்சயம்.

இசையமைப்பாளர் யாரோ மேட்லி ப்ளூஸாம். வெரி பேட்லி ஃபெல்லோஸ்.பின்னணி இசையும் பாடல்களும் பெரும் சோதனை.

நாட்டை அழிக்க தீவிரவாதிகளுக்கு துணைபோகும் பெட்ரோலியத்துறை அமைச்சராக ஒரு குட்டி வெட்டிப்பாத்திரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனே நடிக்கவும் செய்திருக்கிறார்…ம்ம்ம் என்னத்தைச்சொல்ல?’

‘நெருங்கிவா முத்தமிடாதே’ ’தியேட்டருக்கு வா டிக்கட் எடுக்காதே’.

Related Images: