நம் தமிழ் சினிமாவில் காட்டப்படும் போலீஸாரை இரண்டே வகைகளில் பிரித்து விடலாம். ஒன்று சிரிப்பு போலீஸ் மற்றொன்று சீரியஸ் போலீஸ்.

மேற்படி இரண்டிலும் சேர்த்தி இல்லாமல் நேர்த்தியாய் ஒரு போலீஸ் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் இந்த ‘திருடன் போலீஸ்’-ல்.

நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் ராஜேஷின் மகன் தினேஷ்.  தமிழ்சினிமா தர்மப்படி, வேலைக்குப் போகாமல் தண்டச்சோறு தின்று, போலீஸ் குவார்ட்டர்ஸில் வம்பு வளர்த்து திரிகிறார். அதே த.சி. தர்மப்படி குவார்ட்டர்ஸுக்கு புதுசாய் குடிவரும் ஐஸ்வர்யா மீது கண்டதும் காதலில் விழுந்து அவர்பின்னால் கண்டபடி அலைகிறார்.

பல பெண்களை கற்பழித்துக்கொண்டு திரியும் உயர் அதிகாரியின் மகன் நிதின் சத்யாவுடன் அடிக்கடி மல்லுக்கு நிற்க, மகனை அடித்ததற்கு பழிவாங்குவதற்காக ஒரு என் கவுண்டரில் ராஜேஷ் போட்டுத்தள்ளப்படுகிறார்.

பதவியில் இருந்தபோது வீரமரணம் அடைந்ததால் தினேஷுக்கு காவல்துறையில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது.

யூனிஃபார்ம் அணிந்து கெத்தாக வேலைக்குச் செல்லும் தினேஷ் காவல்துறை என்ற பெயரில் தனக்குத்தரப்படும் ஏவல் வேலைகளைப்பார்த்து கேவல்கிறார்.

ம்ம்ம்..அப்புறம்…? தனக்கு அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருந்ததால் ஆரம்பத்தில் அப்பாவை வெறுத்தவர், இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்தவேண்டுமே என்ற பொறுப்பில் அப்பாவின் அருமை பெருமைகள் உணர்ந்து அவரைக் கொன்றவர்களைப் பழிவாங்க போலீஸ் ஃபைலைக் கையில் எடுக்கிறார்.

அப்புறம் என்ன நடந்தது? வெள்ளித்திரையில் கண்டுகளியுங்கள்.

படத்தின் நாயகன் கண்டிப்பாக இயக்குநர் கார்த்திக்தான்.  போலீஸ்துறை குறித்த பாஸிடிவான படம் என்றாலும் சில கசப்பான உண்மைகளை கிழித்துத்தொங்கப்போட தவறவில்லை. படத்தில் அத்தனை கேரக்டர்களும் பக்கம் பக்கமாக வசனங்கள் பேசினாலும் ‘பேசியே கொல்றாங்கப்பா’ என்ற சில சுவாரசியமான சுய எள்ளல்களுடன் அவற்றைக் கடந்துபோகிறார்.

ஹீரோ தினேஷ் இன்னும் ‘குக்கூ’ விழிமுழியிலிருந்து வெளியே வரவில்லை போலும். பல இடங்களில் காரணமின்றி திருதிருவென முழிக்கிறார்.

நாயகி ஐஸ்வர்யா கொஞ்சம் சதைபோட்டு மினுமினுப்பாகியிருக்கிறார். அடுத்த படங்கள்லயெல்லாம் கொஞ்சமாவது நடிக்க ஆரம்பிக்கனும் செல்லம். இந்தப்புள்ளக்கிப்போயி இப்பிடி விசிலடிக்கிறானேன்னு எவ்வளவு நாளைக்குத்தான் கெட்டபேர் வாங்குறதாம்?

அடுத்த ‘புரோட்டா’ சூரி அறிகுறியுடன் காணப்படும் தம்பி பாலா ‘பேச்சக்குறை…பேச்சக்குறை…’

ஏதோ கொடுக்கல் வாங்கல் கணக்கு போல ஒரு குத்தாட்டத்திற்கு ஆடிவிட்டு குட்பை சொல்கிறார்  விஜய்சேதுபதி.

படத்தில் முக்கியமான ஸ்கோரர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். கொடூர வில்லனாக அறிமுகமாகி, ‘இப்பிடி உங்கப்பனைப் பத்தி பேசியே கொல்றதுக்குப்பதில் என்னை விஷம் வச்சிக்கூட கொன்னுக்கப்பா’ என்று தினேஷிடம் அவர் கதறும்போது தியேட்டர் அலறப்போவது நிச்சயம்.

டைட்டில் கார்டில் இசையமைப்பாளர் யுவன் என்று போட்டதாக ஞாபகம்.

முதல் பாதியில் கொஞ்சம் சீரியஸ் கொஞ்சம் காமெடியுடன் போகும் படத்தை, இரண்டாவது பாதியில் அப்பா செண்டிமெண்ட் உட்பட சகலத்தையும் காமெடியாக்கி கைமா பண்ணியிருக்கிறார்கள்.

’திருடன் போலீஸ்’  கொஞ்சம் காமெடி கொஞ்சம் டிராஜடி.கொஞ்சம் உட்டாலக்கடி.

 

Related Images: