’இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் விஜய்சேதுபதி?’

’என்னிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட்டும் தராமல் கொடுத்த அட்வான்ஸையும் தராமல் கழுத்தை அறுக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அதனால் எனது கம்பெனிக்கு பூட்டுப்போட்டுவிட்டு சினிமாவை விட்டே வெளியேறுகிறேன்’ என்று குமுறிக்கொந்தளிக்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

அவர் பெயர் சுரேஷ். அவர் நிறுவனத்தின் பெயர் ‘ஸ்டுடியோ9’. கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதா?.

ஒரு விநியோகஸ்தராக உள்ளே நுழைந்து ‘சூதுகவ்வும்’ பரதேசி’முதல் சமீபத்தில் ரிலீஸான ‘சலீம்’ வரை தயாரிப்பிலும், விநியோகத்திலும் பங்குவகித்தவர் சுரேஷ்.

‘சூதுகவ்வும்’ ரிலீஸான சமயம் இயக்குநர் பாலாவின் பிஸ்டுடியோஸுடன் இணைந்து ‘வசந்தகுமாரன்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக விஜயசேதுபதிக்கு ஒரு தொகையை முன்பணமாக வழங்கியிருந்தார். அப்படத்தில் நடித்தால் எதிர்காலத்தில் பாலாவின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக்கிடைக்குமே என்ற நப்பாசையில் விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டார்.

அடுத்த சில மாதங்களில் சுரேஷின் நடவடிக்கைகளில் கலவரமான பாலா ‘வசந்தகுமாரன்’ படத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள, விஜய்சேதுவும் சுரேஷை ஓரங்கட்ட ஆரம்பித்தார்.

தற்போது அட்வான்ஸை திருப்பிக்கேட்டு டயர்டான சுரேஷ் தான் ‘சினிமாவுக்கு டாட்டா’என்ற புதுரூட்டை கையில் எடுத்திருக்கிறார்.

அவர் தனது இந்த முடிவை ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதால், அவருக்கு சிலர் ஆறுதல் சொல்லும் விதமாக ‘ஒரு நடிகரின் தவறான செயலுக்காக நீங்க சினிமாவை விட்டுப்போகக்கூடாது’ என்று ஆறுதல் வழங்க, சற்றுமுன்னர் ‘டாட்டா’வை மிக பயங்கரமான முடிவை எடுத்திருக்கிறார் சுரேஷ்.

‘ஒரு நடிகரின் துரோகத்தை வெல்ல, அவரது வழியில் நானும் நடிகராவது என்று முடிவு எடுத்துவிட்டேன். ஒரு நடிகனாக விஜய்சேதுபதியை வென்று காட்டுவதே என் லட்சியம்’ என்று சற்றுமுன்னர் சூளுரைத்திருக்கிறார் ஸ்டுடியோ9’ சுரேஷ்.

இந்த சூளுரையைப் படிக்கநேர்ந்தபிறகு தமிழ்சினிமாவை சூழவிருக்கும் ஆபத்தை உணர்ந்து அட்வான்ஸை திருப்பித்தருவாரா விஜய்சேதுபதி?’