இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக
புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம்.

ஆனால் நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு
படமாக உருவாகியிருப்பதுதான் ‘சபரன்’.இந்தப் படத்தை கதை எழுதி
தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள   நடிகர்கள் வரை பலரும் நிஜ
தாதாக்கள்தான்.

தன்ஹா மூவீஸ் சார்பில் படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து
தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி என்பவர். இவர் கேரளாவில் பிரபல தாதா. பல
நிழல் உலகம் இவருக்கு ஒளி உலகமாகத் தெரியும் அளவுக்கு பரிச்சயம்.

‘சபரன்’ படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.புவனேஷ். இவர் ஏற்கெனவே தமிழில்
‘ஆறாவது வனம்’ ,மலையாளத்தில் ‘பகவதிபுரம்’ படங்களை இயக்கியவர்.

தாதா ஒருவர் நாயகனாக நடித்தாலும் ஏற்று நடிக்கிற கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி.

இப்படத்தின் கதை என்ன?

கோவை அருகே ஒரு குண்டுவெடிப்பு நடக்கிறது. அது பற்றி புலனாய்வு செய்ய
புறப்படுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. விசாரணை செய்யத் தொடங்கினால் தோண்டத்
தோண்ட புதையல் கிடைப்பது போல பல நிழல் உலக தாதாக்கள், பலநாட்டு
தீவிரவாதிகள், அரசியல் புள்ளிகளின் தொடர்புகள், அரசியல்வாதிகளின் தேச
துரோகங்கள் எல்லாம் அம்பலமாகின்றன. ஆணிவேர் எது என்று கண்டறியும்
முயற்சியே ‘சபரன்’ படக்கதை.’சபரன்’ என்றால் வேட்டைக்காரன். ஒரு
வேட்டைக்காரனாய் எழுந்து புறப்பட்டு நாசகார கும்பலை வேரறுப்பவன்தான் இந்த
நாயகன் ‘சபரன்’.

இந்தப் படத்தின் கதை ,திரைக்கதை அமைத்து பல கதாநாயகர்களிடம் படமாக்க
முயன்று பல லட்சங்கள் செலவு செய்து அலைந்திருக்கிறார் அம்ஜத். ஆனால் நம்
நாயகர்கள் இந்த நிஜ தாதாவுக்கே ‘தண்ணி’ காட்டிவிட்டார்கள். கடைசியில்
தானே தயாரிப்பது என்று முடிவெடுத்து இறங்கி விட்டார்.

இயக்குநரைக் கூட தடாலடியாகவே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஒரு நண்பர்
மூலம் இயக்குநருக்கு இந்த தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
கடத்தாத குறையாக கேரளாவில் ஒரு படகுவீட்டில் ஒரு நாள் அடைத்து வைத்து
மிரட்டாத குறையாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இது ‘ஜிகர்தண்டா’ அசால்ட்
சேது கதைபோல இருக்கிறதே என்றால்” ‘ஆமாம்’  என்கிறார் இயக்குநர் புவனேஷ்.

“சினிமா ஆசையில் ஒரு அப்பாவி டைரக்டரை மிரட்டி தன்னை கதாநாயகனாக்கும்
ஒருவனின் கதைதான் ‘ஜிகர்தண்டா’ . அதைப் போலத்தான் என்னையும் ஒரு வகையில்
டைரக்டர் ஆக்கினார்கள் எனலாம்.

கதை, திரைக்கதை, லொக்கேஷன் எல்லாம் தயார்செய்து வைத்திருந்தார்கள். நீ
டைரக்ட்செய்தால் போதும் என்றார்கள். அப்படி என்னை சிக்க வைத்த படம்தான்
‘சபரன்”’ என்கிறார்.

அப்படி மிரட்டி எடுத்த படம் எப்படி வந்திருக்கும்?

“அவர்களது உருட்டு மிரட்டலை முரட்டு அன்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று நினைத்தேன். பிறகுதான்
அவர்களின் இயல்பே அதுதான் என்று புரிந்து கொண்டேன். தயாரிப்பாளரின்
சினிமாபற்றிய ஆர்வம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

போலீஸ் பற்றி எத்தனையோ படம் வந்திருக்கும். இது போலீஸின் பெருமையைக்
கூறுகிற படமாக இருக்கும்.இது வழக்கமான படமாக இருக்காது. காதல், காமெடி
எல்லாம் இருக்காது. முழுநீள ஆக்ஷன் படம்.

எனக்கு எல்லா வசதியும் கொடுத்தார்கள்.படப்பிடிப்பில் சம்பளத்தில் எந்தக்
குறையும் வைக்கவில்லை. “என்கிறார்.

புதுமுகங்கள் பிரஷாந்தி, தீபிகா என்கிற மாடல்கள் இருவர் நடித்துள்ளனர்.
பிரதான வில்லனாக டார்வின் க்ரூஸ் நடித்துள்ளார். காதல் தண்டாபாணி,
அப்புக்குட்டி, வின்சென்ட் அசோகன், தலைவாசல்விஜய், போஸ் வெங்கட்
ஆகியோரும் நடித்துள்ளனர் . துபாயில் உள்ள நிஜமான தாதாக்களும்
நடித்துள்ளனர்.

’படத்துலயாவது இவங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ற மாதிரி சீன் இருக்காப்பா?’

Related Images: