’விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் சிம்பு’

பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த அஜித்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ படம் நேற்று நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ஓட ஆரம்பித்திருக்கிறது.

உடனடியாக வந்த ரிப்போர்ட்களை வைத்துப்பார்க்கும்போது படம் சூப்பர் ஹிட் என்பதாகவே தெரிகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் படத்தைப்பற்றி விஜய் ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நடிகர் சிம்பு தீவிரமான அஜித் ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போதுமே அஜித் படம் ரிலீசானால் முதல்நாளில் முதல் ஷோ பார்த்து விடும் சிம்பு இன்று காலையும் முதல் ஷோவை சென்னை குரோம்பேட்டையிலுள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்து ரசித்தார். அவரோடு அனிருத்தும் போயிருந்தார்.

படத்தைப் பார்த்து ஹேப்பியான சிம்பு “ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ்ப்படத்தை பார்த்து ரசித்தேன். தல அற்புதமாக நடித்திருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர, இந்தப்படம் எல்லாம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

பொதுவாக அஜித் படம் ரிலீசானால் படம் நல்லாவே இல்லை… என்று விஜய் ரசிகர்கள் தான் கருத்து சொல்வார்கள். அவர்களைத்தான் சிம்பு மெண்டல் என்று சொல்கிறாரோ என்றும்.படம் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களை எப்படி பொத்தாம் பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம் என்றும், சிம்புவின் ட்விட்டுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள் சிம்புவுடன் விடாமல் ட்விட்டரில் சண்டை போட்டு வருகிறார்கள்.

படத்தை விட இவர்கள் போடும் சண்டை இன்னும் சூடாக இருக்கிறது.