அறிக்கைகள் வெளியிடுவதில் கின்னஸ் சாதனை புரிய முடிவு செய்துவிட்டார்கள் போல ‘லிங்கா’ நஷ்டப்புலம்பல் கோஷ்டியினர்.

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் – மன்னன், வட-தென்ஆற்காடு விநியோகஸ்தர் – கிருஷ்ணகுமார், நெல்லை விநியோகஸ்தர் – ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

‘லிங்கா’ படத்தினை வெளியிட்ட வகையில் செங்கல்பட்டு ஏரியாவிற்கு ஏழரை கோடி ரூபாயும், ஆற்காடு ஏரியாவிற்கு நான்கு கோடி ரூபாயும், நெல்லை ஏரியாவிற்கு இரண்டரை கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அறிவுறுத்தலுக்கு பிறகு படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பனிரெண்டரை கோடி ரூபாயை நஷ்ட ஈடாக தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நஷ்டம் என்று கூறி நிவாரணம் பெற்றுத்தர சங்கங்களை அணுகிய போது யாருமே ஆதரவு தராததால் தான் அறவழியில் போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் தற்போது ரஜினிகாந்த் பணம் தருகிறார் என்றவுடன் பங்கு போட்டுத் தருவதாகக் கூறி சங்கங்கள் மூக்கை நுழைப்பதன் மர்மம் எங்களுக்கு புரியவில்லை.

இந்த படத்தை வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்திருப்பது வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே. அவரர்களை கலந்து பேசாமல் திருப்பூர் சுப்பிரமணி என்பவர் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருவது வருத்தப்பட வைக்கிறது. பணத்தை கொடுத்து படத்தை வாங்கிய எங்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பங்கு போட்டுத் தருமாறு இவரை அழைத்தது யார் என்பதை இவர் முதலில் அறிவிக்க வேண்டும். கட்டப் பஞ்சாயத்து செய்வதை திருப்பூரோடு நிறுத்திக்கொண்டால் இந்தப் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும் என்பதை படத்தயாரிப்பாளர் புரிந்துகொள்ள வேண்டும்.

“தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்கள். இந்த திருப்பூர் சுப்பிரமணி, ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களை திரையிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தவர். ஆனால் ‘பாபா’ படத்தில் இழப்பு என்றவுடன் அசலுடன் லாபமும் கேட்டுப்பெற்றவர். ஆனால் லிங்கா விசயத்தில் வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்று இவர் கூறுவது “சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளது”.

நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் கணக்கு வழக்குகளை கேட்டுப் பெற சொல்லியிருப்பதாகக் கூறி கணக்கு வழக்குகளை பெற்றுக் கொண்ட பின்பு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர் இவரை ஏன் அழைக்கவில்லை என்பதையும் இவர் விளக்க வேண்டும். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் அல்ல என்பதை சுப்பிரமணியன் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளராக தன்னை நினைத்து செயலாற்றி வினியோகஸ்தர்களுக்கு அநீதி இழைப்பதை திருப்பூர் சுப்பிரமணி நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா வினியோகஸ்தர்களை வைத்துக்கொண்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பணத்தை ஏரியா வாரியாக பிரித்துக் கொடுத்தால்தான் இந்த பிரச்சனை முடியும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இடையில் சினிமாவில் கிடைத்த செல்வாக்கை வைத்துக்கொண்டு திருப்பூர் சுப்பிரமணி போன்றவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்தால் போராட்டங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

பல கோடியையும் இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வினியோகஸ்தர்களை காக்கும்படி தயாரிப்பாளரை கேட்டுக்கொள்கிறொம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

1.விஜயபார்கவி எண்டர்டெடெய்ண்மெண்ட், செங்கல்பட்டு.
2.கேப்ரிகான் பிக்சர்ஸ், வட-தென்ஆற்காடு.
3.சந்திரகலா மூவீஸ், நெல்லை.

Related Images: