‘கடல்’ படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டாத வரை ‘ஒ காதல் கண்மணி’ படத்தை வெளியிடுவதில்லை என்று விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஒ காதல் கண்மணி’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏப்ரல் 17-ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் பணபரிவர்த்தனை பிரச்சினைகளை தற்போது விநியோகஸ்தர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

‘கடல்’ படத்தை தயாரித்த மணிரத்னம், அப்படத்தை ஜெமினி நிறுவனத்திடம் விற்றுவிட்டார். ஜெமினி நிறுவனம் அப்படத்தை சன் ஸ்ரீநிறுவனத்திடம் தமிழக உரிமையைக் கொடுத்தது. சன் ஸ்ரீநிறுவனம் தமிழகம் முழுவதும் மன்னன் பிலிம்ஸ் மூலமாக விநியோகம் செய்தது.

‘கடல்’ திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள், வசூல் என அனைத்து ரீதியிலும் தோல்வியைத் தழுவியது. அப்படம் வெளியான சில நாட்களில், மன்னன் பிலிம்ஸ் சார்பாக மணிரத்னம் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினார்கள்.

தற்போது, ‘ஒ காதல் கண்மணி’ வெளியாக இருக்கும் இந்த வேளையில், மன்னன் பிலிம்ஸ் சார்பாக தென்னந்திய வர்த்தக கூட்டமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றில் மணிரத்னம் நஷ்டத்தை ஈடுகட்டிவிட்டு படத்தை வெளியிட வேண்டும் என்று புகார் அளிக்கவுள்ளனர்.

நாளை (ஏப்ரல் 6) அல்லது நாளை மறுநாள் (ஏப்ரல் 7) ஆகிய தேதிகளில் அவர்கள் புகார் அளிக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன.

இதனால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 17-ம் தேதி ‘ஒ காதல் கண்மணி’ வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

Related Images: