6 சூப்பர் ஹீரோக்கள் தோன்றும் “தி அவென்ஜர்ஸ் – தி ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ்’

ஹாலிவுட்டின் அயர்ன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், ப்ளாக் விடோ, ஹாவ்க் போன்ற சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் இணைந்து ஒரு மகாப் பெரிய வில்லனை வீழ்த்தும் ஸயன்ஸ் பிக்சன் அட்வென்ச்சர் கதையான தி அவென்ஜர்ஸ் பெரும் வெற்றி பெற்றது.

இப்போது அதன் அடுத்த பாகமான அவென்ஜர்ஸ் தி ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ் வெளிவர இருக்கிறது. இதிலும் அதே 4 சூப்பர் ஹீரோக்களும், 2 சூப்பர் ஹீரோயின்களும் இணைந்து கலக்குகிறார்களாம்.

இந்தப் படங்கள் எல்லாம் மேம்போக்கில் சூப்பர் கதாநாயகன்கள் பற்றியது போல இருந்தாலும் மறைமுகமாக அமெரிக்கத் துதிபாடும் படங்களே. அதாவது அமெரிக்கா என்றால் சூப்பர்.. உலகத்தையே காப்பவர்கள்.. வம்புக்கு சண்டையே போடாதவர்கள்… எங்கோ இருக்கும் ஏழை முஸ்லீம் நாடுகளையும் காக்கும் சூராதி சூரர்கள்… என்கிற ரேன்ஜில்.. உண்மை நிலைதான் நமக்கு நல்லாத் தெரியுமே.

இப்போது இந்தப் புதிய படத்தின் வெளியீட்டு விழாவையொட்டி படத்தின் பிரதான பாத்திரமான அயர்ன் மேனாக நடிக்கும் ராபர்ட் டௌனி ஜூனியர் ஒரு விளம்பர யுத்தி செய்துள்ளார். அதாவது ரசிகர்களுக்கு வலைத்தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அவர்கள் இதுவரை ஜூலியா எனும் ஆட்கொல்லி நோய் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவமனையை விரிவுபடுத்த 2 மில்லியன் டாலர்கள் திரட்டி கொடுப்பதாக இருக்கிறார்கள். அதில் 1.3 மில்லியன் டாலர்கள் ஏற்கனவே சேர்ந்துவிட்ட நிலையில் மீதி .64 மில்லியன் டாலர்களைத் தர ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அதற்கு பணம் தரும் ரசிகர்கள் படம் ஹாலிவுட்டில் வெளியாகும் தினத்தன்று அவருடன் சேர்ந்து படம் பார்க்கும் வாய்பபைப் பெறுவார்களாம்.

என்னே பெருந்தன்மை இந்த சூப்பர் ஹீரோக்களுக்கு ?! அவென்ஜர்ஸ் படம் முதல் பாகம் வெளியான போது அது அமெரிக்காவில் மட்டும் வசூலித்த தொகை 600 மில்லியன் டாலர்கள்.  உலகம் முழுவதும் வசூலித்த தொகை 1500 மில்லியன் டாலர்கள். இதில் ஜூலியா மருத்துவமனைக்கான மீதி 0.64 மில்லியன்களை தயாரிப்பாளரிடம் கேட்க மறந்து போன டோனி ஸ்டார்க் … ஸாரி.. ராபர்ட் டௌனி ஜூனியர்.. ரசிகர்களிடம் கேட்டுள்ளாராம்.

ரசிகர்களே !! அயர்ன் மேனுடன் சேர்ந்து உட்கார்ந்து படம் பார்க்க உங்களுக்கு விருப்பமா ?