பூமிக்கு வெளியே உயிரினங்கள் பரவும் ?!

நம் பூமிதான் உயிரினங்கள் வாழத் தகுதியான சுற்றுப்புறச் சூழலை பெற்றிருக்கிறது என்று நினைப்பீர்கள். அது மட்டுமல்ல இந்த அண்டத்தில் பல்வேறு சூரியக் குடும்பங்களிலும் உயிர்கள் வாழத் தகுதியான கிரகங்கள் இருக்கின்றன.

அவ்வாறு ஒரு கிரகத்திலிருந்து அண்டத்திலுள்ள வெற்றிடம் வழியே எவ்வாறு வேறொரு கிரகத்துக்கு உயிரினங்கள் பரவக்கூடும் ? மைக்ரோப்ஸ் எனப்படும் நுண்ணியிரிகள் அதாவது பாக்டீரியா சைசில் இருக்கும் மிகச் சிறிய நுண்ணுயிர்களை பூமியைக் கடந்து செல்லும், பூமியில் வந்து விழும் விண்கற்களில் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த நுண்ணுயிர்கள் இவ்வாறு ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு வரலாம்.

சந்திரனில் காலூன்றி நின்றிருந்த சர்வேயர்-3 என்னும் விண்கலத்தில் நுண்ணுயிர்கள் படர்ந்திருந்ததை, இரண்டு வருடங்கள்  கழித்து சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ – 12 விண்கலம் மாதிரிகளை சேகரித்து வந்தபோது கண்டறிந்தார்கள்.

அண்டவெளியில், காற்றே இல்லாத சூழலில், சூரியனின் கொல்லும் அல்ட்ரா வயலட் கதிர்களையும் தாண்டி ஒரு நுண்ணுயிர் விண்வெளியில் பரவ முடியுமா? முடியும் என்று கூறுகிறார் ரோக்கோ மான்சினல்லி என்கிற கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானி.

அவர் இதை கண்டுபிடிக்க இரு வகையான உயிருள்ள பாக்டீரியாக்கள் அடங்கிய இரு கண்ணாடிக் குடுவைகளை விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கே அவை எக்ஸ்போஸர் எனப்படும் வெளி வராண்டா அறையில் விண்வெளியில் காற்றாட திறந்து வைக்கப்பட்டன. சுமார் இரண்டு வருடங்கள் அங்கே வைக்கப்பட்ட குடுவைகளை திரும்பவும் பூமிக்கு கொண்டு வந்து சோதித்தார்.
அப்போது அதில் வெற்றிடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த நுண்ணியிரிகள் எல்லாம் இன்னும் உயிரோடு இருந்தன.  சூரியனின் புற ஊதாக்கதிர்கள் பட்ட நுண்ணுயிர்கள் மட்டுமே இறந்திருந்தன.

நாம வேற கிரகத்துக்கு போறதுக்குத் தான் ராக்கெட்டு, பெரிய விண்வெளி ட்ரெஸ், ஆக்சிஜன் எல்லாம் தேவை. நுண்ணுயிர்கள் ஈசியா போய்டும் போல இருக்கு. எதுக்கும் செவ்வாய் கிரகத்தில் டெங்கு காய்ச்சல் வராம பாத்துக்கோங்க சயின்டிஸ்ட்ஸ்!!.