காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?

க்கள் திரையரங்கு (மல்டி பிளக்ஸ் அல்லாத அரங்கு) ஒன்றில் காக்கா முட்டை பார்த்த போது, எந்தக் காட்சிகளுக்கு அதிகம் கைதட்டல் என்று எண்ணினால் மொத்தம் மூன்று. தோசை மாவைக் கொண்டு ஆயா பீட்சா சுடும் காட்சி, சிறார் தள்ளு வண்டியில் தள்ளாடும் தண்டி வண்டி ஒன்று ஏறி கவிழ்ந்த காட்சி, பீட்சா நல்லாவே இல்லையே எனும் சிறுவர்களின் கடைசிக் காட்சி. மூன்றிலும் நகைச்சுவையோடு இழையோடும் உணர்ச்சி எது?

அது ஏமாற்றத்தின் சுய எள்ளலா? இல்லை ஆசைப்பட்டதை விட அகப்பட்டதே மேல் எனும் தெளிவா? அல்லது தரப்பட்ட வாழ்க்கை யதார்த்தத்தை சிரித்துக் கொண்டே ஏற்கும் பக்குவமா? அடி வாங்கிய பிறகு வேறுவழியின்றி வரும் அமைதியின் அருமையா? ஏன், அப்துல் கலாமின் வல்லரசு இந்தியக் கனவை ஒரு கம்மாக்கரை ஆண்டி பேசினால் எப்படியிருக்கும் எனலாமா?

தெளிவாகச் சொல்வதாக இருந்தால் இந்தப் படம் ஏழ்மையைக் கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டத்தையே கருணை உணர்ச்சியாக படம் பார்ப்போர் சிலாகிக்கிறார்கள்.

ஏழ்மையின் துயரத்தை, உலகமயமாக்கத்தின் விளைவை பிரச்சார நெடியில்லாமல் வேறு எப்படி காட்ட முடியும் என்று இணையத்தில் வாழ்த்தியும் பாராட்டியும் ஏராளம் எழுதியிருக்கின்றனர். ஆனந்த விகடனின் 60 மதிப்பெண் அதற்கோர் குறியீடு. எனினும், சற்று நிதானமாக பார்த்தால் இந்தப்படத்தில் ஏழ்மை பற்றிய நமது பார்வையில் நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் இருக்குமளவுக்கு உணர்வு இல்லை என்பதை கசப்புடன் ஏற்க வேண்டியிருக்கும்.

இல்லையேல் சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரைப் போன்று புது தில்லியின் ரவிதாஸ் காலனியையும் நேசிக்க வேண்டி வரும்.

சுற்றிவரும் வாழ்க்கையுள்ள சென்னை வாசிகளுக்கு சைதை திடீர்நகர் குப்பம் பரிச்சயமான ஒன்று. ஆனால், அந்தப் பார்வை வானிலிருந்து மண்ணைப் பார்க்கும் பயணப் பார்வை. இயக்குநர் மணிகண்டனின் கேமராவும் அப்படி சில முறை காட்டுகிறது. சைதை அடுக்கு மாடிகளிலிருந்து பார்க்கும் போது தீப்பெட்டி வரிசைகளாய் ஏராளம் கூரைகள். கூவக்கரையில் ஒதுங்கியிருக்கும் மக்கள் வாழ்க்கையை இறங்கி வந்து பார்க்க வேண்டிய தேவை என்ன? கொசு, சாக்கடை, வறுமை, குடி, சண்டை இதைத்தாண்டி என்ன என வழக்கமாக சலித்துக் கொள்ளும் சென்னைவாசிகள் இந்தப் படத்தின் மூலம் அங்கே மகிழ்ச்சியும் இருப்பதாக அறிகிறார்களோ?

திடீர்நகரைச் சேர்ந்த இரு சகோதரர்களான சிறுவர்கள். அப்பா சிறையில், அம்மா சிறை மீட்பின் வலியில். அமர்ந்தபடியே பேரன்களின் சேட்டைகளுக்காக வாதிடும் ஆயா, சோம்பல் முறித்தவாறே தூங்கும் நாய்க்குட்டி. பெயரில் நகரமென்றாலும் இதர மக்கள் வழக்கில் இது ஒரு குப்பம். குப்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடும் காலி மனை. மனையின் மரத்திலுள்ள காக்கா கூட்டில் முட்டைகளை எடுத்து சாப்பிடும் சகோதரர்கள். காலி மனையை விலைக்கு வாங்கும் பீட்சா முதலாளி.

பீட்சாவை சாப்பிட நினைத்து காசு சேர்த்து அது இயலாமல் போய், புது உடை வாங்கி, பீட்சா கேட்டு அடி பட்டு, அந்த அடி தற்செயலாய் ஊடக பரபரப்பாய் மாற, பீட்சா முதலாளி சிறுவர்களை அழைத்து பீட்சா துண்டுகளை ஊட்டி விசயத்தை தணிக்க, இறுதியில் பீட்சா நல்லா இல்லையே என சிறுவர்கள் தெளிய படம் முடிகிறது.

kaaka-muttai-review-specialஒரு ஆவணப்படத்தின் சாயலில் அதிகம் மிகை உணர்ச்சி காட்சிகள் இன்றி, திருத்தமான காட்சிகளின் தொகுப்பில், கதையில் விறுவிறுப்பும் காட்சிகளில் அமைதியும் கொண்டு ஒரு தமிழ்ப்படம் வெளியாவது அரிது. மசாலா ஃபார்முலா இல்லாமல் ரசிகர்கள் திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்று திரையுலக பெரு முதலைகள் டாஸ்மாக்கை நியாயப்படுத்துவது பொய்யென மற்றொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் மாஸ், அஞ்சான், உ.வில்லன் போன்ற மசாலாக்கள் தூக்கி எறியப்பட்ட காலத்தில் ஒரு குப்பத்தின் வாழ்க்கையை சொல்லும் படம் தூக்கி வைக்கப்பட்டு கொண்டாடப்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது.

எனினும், இந்தப் படத்தில் மசாலா இல்லையென்றாலும் வேறு ஒன்று தூக்கலாக இருக்கிறது. அதுவே நம் விமரிசனத்திற்குரியது.

சென்னையின் திடீர் நகரைப் போன்ற குப்பங்கள் அடிப்படையில் ஊர்களின் அருகில் இருக்கும் சேரிகளைப் போன்றவை. குப்பங்களின் சிறுவர்கள் அல்லது இளைஞர்களை வேலைக்கு வைக்கும் ஆதிக்க சாதி சென்னை சிறு முதலாளிகள், அவர்களை ‘சேரிப்பசங்க’ என்றே இழிவழக்காக அழைப்பார்கள். கிராமங்களில் இருக்கும் இயற்கையான வாழ்வியல் வசதிகள் கூட இங்கே இல்லை என்பதால் சென்னையின் சேரி மக்கள் ஊர்ப்புற சேரி மக்களோடு கணிசமாக மாறுபடுகிறார்கள்.

1838-ம் ஆண்டில் ஆலிவர் டிவிஸ்ட் நாவலை வெளியிடுகிறார் சார்லஸ் டிக்கன்ஸ். அந்தக் கதையில் சித்தரிக்கப்படும் லண்டன் வாழ்க்கையில் வரும் உதிரிப்பாட்டாளிகள்தான் முதலாளித்துவம் உருவாக்கிய புதுவகை ஏழைகள். இவர்களையே இன்றைய அறிஞர்கள் மட்டுமல்ல தமிழ் இணைய அரட்டை எழுத்தாளர்கள் கூட விளிம்புநிலை மக்கள் என்று தவறாக அழைக்கின்றார்கள்.

மையம், விளிம்பு என்ற பதமே மார்க்சியத்திற்கு எதிராக முதலாளித்துவம் கொண்டு வந்த சொற்பதம். அந்தjf பதம் பின்நவீனத்துவ சிந்தனை ஊடாக வந்திருந்தாலும் மையத்தில் இருக்கும் முதலாளி x தொழிலாளி முரண்பாட்டை ஓரத்தில் உதிரியாக இருக்கும் சிறுதிருடர்கள், விலை மாதர்கள், திருநங்கைகள், உதிரிவேலை செய்பவர்கள் தலையில் சுமத்தி உண்மையில் அந்த முரண்பாட்டை இல்லையென ஆக்க நினைக்கிறது இத்தவறான கருத்து. குப்பங்களின் ஏழைகளை இந்த இயக்குநர் பார்ப்பதிலும், அந்தப் பார்வையை கொண்டாடும் இரசிகர்களின் கருணையிலும் கூட அந்தத் தவறு வேறு வகையில் மையம் கொண்டிருக்கிறது.

உதிரிப்பாட்டாளிகளின் பண்புகளை தோழர் மாவோ கச்சிதமாக வரையறுக்கிறார். இன்றைக்கு என்ன வேலை, என்ன ஊதியம் என்று தெரியாமல் நகரத்து இழுப்பில் வழுக்கிச் செல்லும் இம்மக்களிடமிருந்து திருடர்களும், ரவுடிகளும் ஏன் உருவாகிறார்கள், ஆளும் வர்க்கங்கள் இவர்களை தமது சேவைக்கு பணியமர்த்துவது ஏன், திட்டமிட்ட வாழ்க்கை இல்லாத நிலை இலக்கணமான சமூக மதிப்பீடுகளை இல்லாமல் ஆக்குவது எப்படி என்று விளக்கும் மாவோ முதலாளித்துவத்தின் முரண்பாடு முற்ற முற்ற இம்மக்கள் அதிகரிப்பார்கள் என்கிறார். ஆகையால், இவர்களையும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நெறிப்படுத்தி அணிதிரட்டுவது தவிர்க்க இயலாதது என்கிறார். இன்றோ இந்தக் கடமை மலை போல திரண்டு நிற்கிறது.

திடீர் நகரின் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை இயக்குநர் உள்ளார்ந்து அறிந்திருக்கவில்லை. உதிரிப்பாட்டாளிகள் கூவம் கரையில் வாழ்ந்தாலும் முழு சென்னையின் நரம்பு மண்டலத்தையும், அதன் வழியே பாயும் ரத்த ஓட்டத்தையும் ஓரளவுக்கு அறிவார்கள். அதாவது முழு நகரத்திற்கும் சேவையாற்றும் வழியில் அவர்கள் பெருநகர வாழ்க்கையின் இரு பக்கங்களையும் குறிப்பிட்ட அளவுக்கு தெரிந்திருப்பார்கள்.

படத்தில் வரும் சிறுவர்களுக்கு பீட்சா என்றால் என்னவென்றே தெரியாது, புதுத்துணி வாங்க சிட்டி சென்டர் போகிறார்கள், பீட்சா டெலிவரி இளைஞரை புதிதாக பார்க்கிறார்கள். இவையெல்லாம் யதார்த்த மொழியில் சொன்னால் லாஜிக் மீறல்கள். சென்னையில் 10, 50, 100 ரூபாய்க்கு பிராண்டட் சட்டை கிடைப்பதோ, இல்லை அம்மா உணவகம் அல்லாத கடைகளில் 2 ரூபாய்க்கு இட்லி கிடைப்பதோ, இல்லை உயர்ரக பேக்கரிகளின் கேக்கு தூள்கள் கப்பு ஒன்றுக்கு ஐந்து அல்லது பத்து ரூபாயில் வாங்க முடியும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.

மேலும், “ஓகே கண்மணி”யில் வரும் “நேற்று என்பது இன்றில்லை நாளை நினைப்பே ஓ தொல்லை, இன்று மட்டும் கிங் அண்ட்  குயினா” எனும் அரதப்பழசான இளையோர் மகிழ்ச்சி இவர்களுக்கும் பொருந்தும். அதாவது வேலை இருக்கும் நாட்களில் அதுவும் தற்செயலாக அதிகம் ஊதியம் கிடைக்கும் பட்சத்தில் அன்று தீபாவளிதான். கறியோ, குடியோ, பிரியாணியோ காட்டு வெள்ளமாய் ஓடும். வேலையில்லாத நாட்களில் நாட்கணக்கில் கால்வயிற்றுக் கஞ்சியோடும் ஓட்டுவார்கள். இரண்டிலும் அவர்கள் அனேகமாய் ஒரே மனநிலையில்தான் இருப்பார்கள். அதாவது நடுத்தர வர்க்கத்தின் ஜாலி, துன்பம் என இருமைகளுக்கு இங்கே பொருளில்லை.

நாட்டுப்புறங்களில் இருந்து இங்கே சமீபத்தில் குடியேறிய ஏழை சிறுவர்கள் கூட சடுதியில் நகரத்து அடையாளங்களில் கை தேர்கிறார்கள். பீட்சாவும், ஸ்மார்ட் போனும், அல்ட்ரா மாடர்ன் பைக்கும் கூட அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. பிரச்சினை என்னவென்றால் இந்த அதிக விலையுயர்ந்த அடையாளங்களை அவர்கள் மட்டுமல்ல, கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கமும் கூட வாங்க முடியாதவைதான். ஆனால் உதிரிப்பாட்டாளிகளின் நிலையில் படம் சித்தரிப்பது போன்ற ஒரு காவிய ஏக்கம் ஒரு பீட்சாவை தின்பதற்கு இருக்கும் என்பது எப்படிப் பார்த்தாலும் சரியல்ல.

எனில் இந்த மகிழ்ச்சிகளை அந்த சிறுவர்கள் எளிதாக கடந்து போகிறார்கள் என்பதல்ல. மேட்டுக்குடி பள்ளியில் படிக்கும் சிறுவர்களையோ, இல்லை அவர்களது பொம்மைகளையோ, நடை உடை பாவனைகள் அனைத்தையும் குழந்தைகளின் பார்வையில் பார்க்கிறார்கள். சுற்றி எது இருக்கிறதோ அதோடு உறவாடுவது, போலச் செய்வது குழந்தைகளின் இயல்பு என்றாலும் உதிரிப்பாட்டாளிகளின் குழந்தைமையை இப்படியான வார்த்தைகளில் நெகிழ்ச்சியாக விவரிப்பதும், விளக்குவதும் தவறென்கிறோம்.

kaaka-muttai2-review-specialகிராமத்தின் கருணையுடன் சென்னையில் ஒரு மக்கள் குடியிருப்பில் – கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க பகுதி – குடியேறிய நண்பர் ஒருவரின் வீட்டிற்கு ஒரு சிறுவன் ஏக்கத்தோடு வருவான். பசியால் வாடியவனது பார்வையை அறிந்த நண்பரது அம்மா தாயுள்ளத்தோடு பசியாற்றுகிறார். பிறகு அச்சிறுவன் மணிக்கொரு முறை வந்தான். ஜூஸ் வேண்டும், தீனி வேண்டும் என்று அதிகாரத்தோடு கேட்டான். ஓரிரு நாட்களில் கருணை முடிவுக்கு வந்தது.

அச்சிறுவனது அக்கா அவளும் சிறுமிதான், இப்படி மற்றவர் வீட்டில் வாங்கி உண்பது அவமானம் என்று இழுத்துச் செல்கிறாள். இருவரும் ஒரே வீட்டில்தான் வளர்கிறார்கள். எனினும் அச்சிறுவனது இயல்பு ஒரு உதிரிப்பாட்டாளியின் வகை மாதிரியில் வருவது. எனில் இந்தப்படம் இத்தகைய விழுமியங்களுக்கிடையிலான போராட்டத்தை, நடுக்கத்தை உணர்த்துகிறதா?

மதிப்பீடுகளுக்கான போராட்டம் எனும் உணர்ச்சியில் இம்மக்களை வைத்துப் பார்ப்பதே சரியல்ல என்பதோடு அது ஒரு கிரிமினல் குற்றமும் ஆகிறது. காரணம் இங்கே நல்லது கெட்டது என்ற நிதானத்தோடு கூடிய ஆளுமைப் போராட்டத்திற்கு இடமில்லை. எதை, எப்போது, எதற்காக செய்கிறார்கள் என்பதற்கு தர்க்க வகைப்பட்ட காரணங்கள் இருக்க வேண்டும் என்பதில்லை.

சென்ற மகளிர் தினத்தின் போது சென்னை மதுரவாயல் கூவம் கரையில் வாழும் ஒரு பெண்ணைப் பார்த்தோம். நான்கைந்து வீடுகள் அல்லது தீப்பெட்டிகள். ஆயிரம் ரூபாயில் ஓரறையில் வாடகைக்கு இருக்கும் அப்பெண் பத்து வருடங்களாக அங்கு வாழ்கிறாள். கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்டு கைக்குழந்தையுடன் வந்து வாழ்ந்து சமாளிக்கிறாள். கையேந்தி பவன் ஒன்றில் வேலை செய்கிறாள். அருகாமை அறையில் வட இந்திய இளைஞர்கள் ஹோலி பண்டிகைகையை இந்திக் குத்தாட்டம், மதுவோடு வெளியே கொண்டாடிக் கொண்டிருந்தனர். மற்ற கேள்விகளை முடித்து விட்டு அவளது பெண்மைக்கு இங்கே என்ன பாதுகாப்பு என்றோம்.

அங்கே பாதுகாப்பிற்கு எந்தக் குறைவுமில்லை என்றாள் அவள். இங்கே பாதுகாப்பு குறித்த நமது கவலையும், அவளது கவலையும் வேறு வேறு உலகிலிருந்து எழுபவை. அவளை துரத்தியடித்த சமூகம், ஆணாதிக்கம், சொந்தபந்தம் குறித்தே பயப்படுகிறாள். ஆனால் சமூகத்தின் வசதிகள் தந்த பாதுகாப்பில் வாழும் நாமோ தனி இளம் பெண்ணின் பயம் என்பதாக மதிப்பிடுகிறோம்.

இதுதான் உதிரிப்பாட்டாளிகளை நமது நல்லுள்ளம் கொண்ட பார்வையால் அளக்க முடியாது என்பது. எனினும் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு எப்போதும் இருக்கிறது என்பதல்ல. அப்படி பாதுகாப்பின்மையால் ஏதும் அநீதி நடந்தாலும் அது ஓரிரு கணங்களுக்கு மேல் நினைக்கப்படுவதில்லை. அப்படி நினைக்க முடியாதபடி துரத்துவதுதான் உதிரிப்பாட்டாளிகளுக்கென்று இந்த நகரம் இல்லை நரகம் விதித்திருக்கும் சாபம்.

படத்தில் நாயகச் சிறுவர்கள் கூட்ஸ் வண்டியில் சிதறி விழுந்த கரிகளை பொறுக்கி கிலோ ஒன்றிற்கு 3 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே குப்பத்து சிறுவர்களோ உதிரிகளின் இயல்பின்படி சிறு சிறு குற்றங்கள் செய்து வாழ்கிறார்கள். மாநகர ரயிலின் படியில் செல்பேசியோடு இருப்போரை கம்பால் அடித்து பறிக்கிறார்கள். பெரிய காக்கா முட்டையும் தனது இலட்சியத்திற்காக ஒரு முறை கம்பெடுத்து பிறகு வேண்டாம் என்று போட்டு விடுகிறான்.

அந்த வேண்டாம் என்பது எப்படி வருகிறது அல்லது வராமல் போகிறது என்பதே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய கதை. ஆனால் இயக்குநர் மணிகண்டன் இந்த முரணை சில தற்செயலான நிகழ்வுகள் மூலம் நகர்த்திச் செல்கிறார். இதை எளிமைப்படுத்தி அவர் பிரச்சாரத்தோடு சொல்லாததை, வினவு பிரச்சாரத்தோடு சொல்ல வேண்டும் என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

திடீர்நகரம் போன்ற குப்பங்களில் அனேகமான வாழ்க்கைக் காட்சிகள் தற்செயலாக நடப்பதாக தோன்றினாலும் அவற்றின் பின்னே அவசியமான சமூக அடிப்படைகள் இருக்கின்றன. படத்தின் நாயகக் குடும்பத்தில் நெகிழ்ச்சியான தருணங்கள், பாசம், அதில் பாட்டி பாசம், தாயன்பு, சிறையில் இருந்தாலும் மகன்களை நினைக்கும் தந்தையன்பு, பழைய பொருள் விற்கும் அக்காவின் நேயம், எவர்சில்வர் பட்டறையின் தொழிலாளிகளின் கருணை போன்றவை அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவை தோன்றி மறையும் விட்டில்பூச்சிகளைப் போன்றே காட்டப்பட்டிருக்க வேண்டும். காரணம் அங்கே அழுத்தமாக இருப்பது அவலம் அல்லது வெறுமை. வறுமையில் எப்படிப் பார்த்தாலும் இனிமையைத் தேடுவது தெற்று.

ஆரம்பக் காட்சியில் இரவு தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் சிறியவன் எழுந்து அது அம்மாவை தீண்டக்கூடாது என்று காலால் தடுக்கும் ஒரு கவிதைக் காட்சி உண்டு. ஆனால் குத்தாட்டங்களின் மண்ணில் ஒரு கவிதைக்கு இடமில்லை என்பதால் கவிதையெனப்படுவதே யாருக்குரிய வஸ்து என்ற கேள்வி வருகிறது.

அங்கே மகிழ்ச்சி, வேதனை, துன்பம், ஜாலி என்பதெற்கெல்லாம் பெரிய பொருளில்லை. படத்தின் ஓட்டத்தில் உரையாடல்களோடு வரும் பாடல்  காட்சியில் மழைக்காட்சி வருகிறது. திடீர்நகரில் மணிரத்தினத்தின் மழைப்பாடலுக்கு இடமுண்டா?

2012-ம் ஆண்டில் இதே குப்பத்திற்கு நாங்கள் சென்ற போது மழையின் கவித்துவ கர்மத்தை நேரில் அறிந்தோம். கொஞ்சம் பெருமழையாக இருந்தாலும் அங்கே வெள்ளம் வீடு தேடி வரும். மக்கள் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அருகாமை அரசுப்பள்ளிகளில் அகதிகளாய் சில நாட்கள் ஒதுங்குவார்கள். வெள்ளம் வடிந்ததும், சகதியில் நடக்க முடியாது, இடிந்து விழுந்த சுவர், இதரவற்றை சரி செய்வதற்கு கடன் வாங்குவது, அந்தக் கடனை அடைக்க ஆண்டு முழுவதும் மீண்டும் வேலை … இங்கே மழைக்கால கவிதை ஆபாசமில்லையா?

சிறையில் இருக்கும் கணவனை பார்க்க மோட்டார் வைத்த மீன்பாடி வண்டியில் பயணிக்கிறார்கள், சிறுவர்களும், தாயும். இதே வண்டியை சில நாட்கள் முன்னாடி ஆர்.கே நகரில் வழிமறித்து சட்டவிரோதம் என்று டிராபிக் ராமசாமி நடவடிக்கை எடுத்தார். போலீசும் வண்டியை கைப்பற்றி அந்த தொழிலாளியை அழ வைத்து விரட்டியது. டிராபிக் ராமசாமியின் அஞ்சா நெஞ்சத்தையும் பாராட்டுகிறார்கள், திடீர் குப்பத்தின் சிறுவர்களுக்காகவும் கசிகிறார்கள் என்பது கொஞ்சம் எரிச்சலாகவும் இருக்கிறது.

உதிரிப்பாட்டாளிகள் என்றாலும் சிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட ஆசையில்லையா, அந்த ஆசையை வைத்து ஒரு கதை உருவாக்குவதில் என்ன தவறு என்று கேட்கலாம்.

பீட்சா சாப்பிடுவதில் ஒரு திடீர்நகரச் சிறுவனுக்கு இருக்கும் வேட்கை இங்கே சராசரியான குழந்தைத்தனத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுவதில் கொஞ்சம் பிழையிருக்கிறது. சென்னை சேத்துப்பட்டில் அப்போது இருந்த பாமா (மறைவு) கடையில் கடித்து வீசப்பட்ட மாட்டு எலும்புகளை பார்த்து முதன் முறையாக சென்ற தோழர் ஒருவர் கலங்கிப் போனார். மாலையில் மாட்டுக்கறி குடல் வறுவல், அழுகிய பழங்கள் – காய்களை கூறுகட்டி விற்கும் முதியவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் காரமான மசாலாவில் தயாராகும் பிரின்ஜ்ஜிக்கள் என்று உணவிலும், உண்ணும் முறையிலும் அங்கே பீட்சாவின் நாசுக்கான நாகரீகங்கள் இல்லை.

மாட்டுக் கறியும், கருவாடும் மகத்தானதாக பார்க்கப்படும் குப்பங்களில் அதற்கு மேல் பார்வை போவது சிரமம். மாலை நேரக் குடிகளோடு துரித உணவகங்களை இப்பகுதி ஆண்கள் மொய்க்கிறார்கள் என்றாலும் அவை நீண்ட காலமாக நாக்கில் மறைந்திருக்கும் இருட்டுக் கடை அல்வாவின் சுவையுணர்வோடு சேரவே சேராது. ரயில்வேத் தொழிலாளியாக வரும் பழரசம் வெறும் ரசம் சோறு மட்டும் சாப்பிடுவது கூட எரிச்சலூட்டும் படிமமாகவே இருக்கிறது. கடுமுழைப்பு தொழிலாளிகள் காரமாகவும், கறிகளோடும் சாப்பிடுவதை விருப்பமாகக் கொண்டவர்கள்.

உணவு என்றில்லை உடை, விபத்து, நோய், பிரசவம் அனைத்தும் தோற்றத்திலும், உள்ளடக்கத்திலும் கடமுடாவென்று கடுமையாகவே இருக்கும். அவர்களுக்குத் தெரியாத நகரத்தின் நாகரிகங்களும், நுகர்பொருட்களும் இருக்கலாம். ஆனால் அவை கொலைப்பசியின் வேட்கையோடு மட்டுமே இருக்குமன்றி கலைப்பார்வையின் ரசனையாக ஒரு போதும் இராது.

குப்பங்களில் இருக்கும் பொதுக்கழிப்பறைகளில் பாதை முதல் கூரை வரை மலம் இரைந்து கிடக்கும். நீரில்லாத அந்தக் கழிப்பிடங்களை அடுத்த நாள் மாநகர நகரசுத்தி தொழிலாளி வந்து கழுவது உண்மையிலேயே நரகத்தில் மட்டும் நடக்கும் ஒன்று. எனினும், காலை ஒன்பது மணிக்கு தாமதமாக கழிக்க வரும் நபர் இந்த நரகல்களை அசால்ட்டாக தாண்டிய படியே பீடியை வலித்துக் கொண்டு சாணியிறக்க குந்துவார். இத்தகைய இரும்புமனம் கொண்டவர்களிடம் ‘இளகிய’ உணர்ச்சிகளை தேடுவது எப்படி?

விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் குப்பத்து இளைஞர்கள் விரும்பி விளையாடும் கால்பந்தில் கூட உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள். ஒரு மாலை நேர பொழுதுபோக்கிற்கு இப்படி கை கால்களை அடிபடச் செய்வது எப்படி சாத்தியம் என்று புரிந்து கொண்டால் பீட்சாவின் ஏக்கம் அப்படி இருக்காது என்பதையும் யூகிக்கலாம். உடனே இது வீரம் மட்டுமென ரொமான்டிக்காக பார்க்க கூடாது. உடலுக்கும் உயிருக்கும் மதிப்பில்லாத வாழ்க்கையில் இப்படி உடலடி காயங்கள் எந்த அபாயத்தையும் உடன் கொண்டு வந்து விடாது. இன்னும் காதல், காமம், திட்டுவது, அனைத்தும் நேரில் பார்த்தால் நீங்கள் திடீர் நகரை விட்டு பதறியடித்துக் கொண்டு ஓடுவீர்கள்.

படத்தில் திடீர்நகரோடு முரண்பட்டு வரும் எம்.எல்.ஏ, பீட்சா முதலாளி, போலீசு அனைவரும் அளவாக காட்டப்பட்டிருந்தாலும் சரியாக காட்டப்படவில்லை. பீட்சா தொடர்கடைகளை சென்னையெங்கும் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் நிறுவனர் படத்தில் காட்டப்படுவது போல முட்டாளாக இருக்க மாட்டார். மூடநம்பிக்கை, சட்ட விரோத வழிமுறைகளுக்கு பணத்தை அள்ளிவீசுவது இவையெல்லாம் அவர்களிடம் இருந்தாலும் இந்த சமூக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதில் அவர்கள் நிச்சயம் முட்டாள்கள் இல்லை.

கடைசிக் காட்சியில் தனது நிறுவனத்தின் கெட்ட பெயரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த சிறுவர்களுக்கு தாரைதப்பட்டையுடன் வரவேற்பு கொடுத்து, பீட்சா ஊட்டி விட்டு, 299 ரூபாயில் மட்டுமல்ல, 45 ரூபாய்க்கு மலிவு விலை பீட்சா அறிமுகம் என்பதையெல்லாம் பார்த்து இது ஒரு திறமையான கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் என்கிறார் ஒரு எழுத்தாளர்.

இதைப் போன்று ஆயிரம் முறை இதை விட அதிகமாய் அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனங்கள் மக்களை இழிவுபடுத்தியிருக்கின்றன. அவை வீடியோவாக அல்லது, சாட்சிகளாக வெளிப்பட்டாலும் அந்த பிராண்டுகளின் பெயர்களோ அல்லது நற்பெயரோ பாதிக்கப்படவில்லை. தற்போது மேகியும் அப்படித்தான் தான் தவறே செய்ய வில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கிறது. போபால் படுகொலைக்காக யூனியன் கார்பைடு என்ன இழந்தது? 10,000 பேர் படுகொலையே ஒன்றுமில்லை என ஆக்கிய முதலாளித்துவ உலகில் இந்த பீட்சா அடியை ஒரு கிரைசிஸ் என்று எப்படி ஏற்பது?

இதே சென்னை நகரில் ஒரு கிரிக்கெட் கிளப்பில் ஒரு நீதிபதிக்கே வேட்டி கட்ட அனுமதி இல்லை என்பது பகிரங்கமாக பேசப்பட்டிருக்கிறது. ஐ.டி நிறுவனங்களின் ஆட் குறைப்பு, தற்கொலை, உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டது – அதற்கு  போக்குவரத்து உரிமையை ரத்து செய்த டாடா என்று பகிரங்கமான கொடுமைகள் பல நடந்தும் யாரைக் கேட்க முடிந்தது?

ஆகவே இது வெறுமனே இமேஜ் பற்றிய பிரச்சினை அல்ல. கார்ப்பரேட்டுகளின் சர்வரோக வல்லமை பற்றிய விவகாரம். திடீர் நகரை தவறாக காட்டுவதை விட ஒரு நிறுவன முதலாளியை கோயிந்தாக காட்டுவது பாரிய பிழை. இதனால் அவரை ஒரு ஆக்சன் பட வில்லனாக ஆக்ரோஷமாக காட்ட வேண்டுமென்பதில்லை. படத்தில் பீட்சா கடையில் சிறுவர்கள் அடிபட்ட சம்பவம் ஏதோ விபத்து போல ஊடகங்கள் வரை போய் ஒரு பெரிய செய்தியாக மாறுவதில் ‘பொருட் பிழை’ நிறைய இருக்கிறது – வார்த்தைகள் சரியாக இருந்தாலும்.

மேலும் பா.ம.க எம்.எல்.ஏ போன்ற ஒருவர் தலைவர், லோக்கல் போலீசு, மற்றும் திடீர் நகரில் சிறு மோசடிகளை செய்யும் இரு இளைஞர்கள் வழியாக இந்தப்படம் காட்டும் சித்தரிப்பு பல தமிழ் சினிமாக்களின் ஃபார்முலாவில் வரும் ஒரு வழக்கமான சித்தரிப்புதான். உதார் அரசியல்வாதிகள் கமிஷன் வாங்குவது, அவர்களை நம்பி சில்லறைகள், மக்களை பகடையாக்கி பயன்படுத்துவது போன்றவை மூலம் நடுத்தர வர்க்கத்தின் போலித்தனமான அரசியல் விமரிசனத்தை ஊக்குவிக்கவே உதவும்.

உண்மையில் எஸ்.ஆர்.எம்முக்கு படியளந்து, அப்பல்லோவிற்கு அழுது கொட்டி இறுதியில் ஐ.ஐ.டி அல்லது அமெரிக்காவிற்கு சொத்தை விற்று போக கனவு காணும் வர்க்கத்தோடு திடீர் நகரம் இணைக்கப்பட்டிருந்தால் மேலே சொன்ன அபத்தமான அரசியல் உலகம் கொஞ்சம் மாறி விவரமான அரசியல் உலகத்தை தொட்டிருக்கும். படத்தில் நடுத்தர வர்க்க சிறுவன் வெறுமனே முரண்பாட்டிற்காக மட்டும் அடையாளமாக தொட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறான்.

அது பொம்மை, உடை, பீட்சா என்று மட்டும் போவதால் திடீர்நகரின் பிரச்சினை அந்தக் குறியீடுகளின் எதிர்மையாக மட்டும் உணரப்படுகிறது. நேர்மைறையில் குப்பத்தின் உலகை அறிய, கனவுகளால் சூழப்படும் நடுத்தர வர்க்கத்தின் உலகம் அவசியம் வேண்டும். ஏனெனில் இத்தகைய கனவுகளுக்காக சாமர்த்தியமாக பேசும் வர்க்கத்தின் மூலம்தான் அத்தகைய சாமர்த்தியம் ஏதுமின்றி வாழ்வை கடந்து போகும் மற்றொரு வர்க்கத்தை அறிய முடியும்.

இயக்குநர் மணிகண்டனின் திடீர் நகரம் பற்றிய பார்வைக்கு உலகளாவிய முறையில் ஒரு பின்னணி இருக்கிறது – அதை இயக்குநர் அறியாமல் இருந்தாலும்.

“மேற்கத்திய சுற்றுலா பயணிகளில் பலர் பாரிசின் ஈஃபில் கோபுரம், நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை, ஆக்ராவின் தாஜ்மகால் இவற்றில் கிடைக்காத புதிய உணர்வை தேடி ஏழ்மை பீடித்துள்ள நகர்ப் பகுதிகளை தேடி போகிறார்கள் என்கிறது பிபிசி உலக சேவையின் பிசினஸ் டெய்லி.

2006-ம் ஆண்டிலிருந்து கிருஷ்ணா புஜாரி என்பவரும் அவரது பிரிட்டிஷ் நண்பர் கிரிஸ் ரே என்பவரும் ரியாலிட்டி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய சேரியான மும்பையின் தாராவி பகுதியை சுற்றிக் காட்டும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

“இதை வறுமை என்று மட்டும் நினைத்தால் அது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும், ஆனால் இந்த வறுமையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது” என்கிறார் பூஜாரி.

கர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கும் மேற்கத்திய சுற்றுலா பயணிகள் வறுமையில் வாழும் மக்களைப் பார்த்து,

  • எளிமையாக வாழ்கிறார்கள், நிரம்பி வழியும் சாக்கடைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்! 1400 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற அவலச் சூழலை திறமையாக சமாளிக்கிறார்கள்!
  • இடிந்து போகவிருக்கும் பள்ளி கட்டிடங்களில் குழந்தைகள் இயல்பாக படிக்க போகிறார்கள்!
  • சிறு கிளினிக்கில் இருக்கும் ஒற்றை டாக்டரிடமே ரூ 15-க்கு மருந்து வாங்கிக் கொண்டு உடல் நலக் குறைவை சரி செய்து கொள்கிறார்கள்!
  • காற்றோட்ட வசதி இல்லாமல் இருட்டாக இருக்கும் குடிசைகளில் தொழில் செய்து ஒவ்வொரு ஆண்டும் ரூ 5,000 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்!

என்று வியக்கிறார்கள். வறுமையுடனான மக்களின் போராட்டத்தை ‘உண்மையில் ஏழைகள்தான் மகிழ்ச்சியாக இருக்காங்க, தெரியுமா!’ என்று  புனிதப்படுத்துகிறார்கள்.”

– மேற்கண்ட வரிகள் வினவு தளத்தில் 2012-ம் ஆண்டில் எழுதப்பட்டவை. இதற்கு முன்பேயே 2009-ம் ஆண்டில் வெளிவந்த “ஸ்லம்டாக் மில்லியனர்” திரைப்படம் குறித்து புதிய கலாச்சாரத்தில் விரிவான விமரிசனம் வந்திருந்தது. அது வினவிலும் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தை தயாரித்த ஃபாக்ஸ் குழும நிறுவனமே தற்போது காக்கா முட்டையையும் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் திரைப்பட நிறுவனம் இத்தகைய சேரிப்படங்களை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன?

உலகமயத்தால் சேரிகள் மட்டும் அதிகரிக்கவில்லை, பிரச்சினைகளும் அதாவது வன்முறையும் பெருகி வருகின்றது. மாநகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் எல்லா நகரங்களிலும் சேரிகள் நகரத்திற்கு வெளியே தூக்கி எறியப்படுகின்றன. சென்னையில் சேரி குறித்த செய்திகள் அதிகம் தீவிபத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்திருப்போம். ‘விபத்திற்கு’ பிறகு அவர்கள் செம்மஞ்சேரி எனும் எந்த அடிப்படை வசதியுமற்ற அகண்ட திறந்த வெளிச் சிறைக்கு போக வேண்டும். அங்கிருந்து தினசரி 50 கி.மீட்டர் பயணம் செய்து நகரத்திற்கு வந்து போக வேண்டும். ஆக உதிரிப்பாட்டாளிகளின் வாழ்க்கை இன்னும் நெருக்கடிக்குள்ளாகிறது.

இவர்களை தணிப்பது ஆளும் வர்க்கத்திற்கு பெரும் சவாலாகி வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்கவும் முடியவில்லை, அருகில் வைத்திருக்கவும் விரும்பவில்லை. இதன் போக்கில் உலகளாவிய என்.ஜி.வோக்களின் வலைப்பின்னலில் சேரிகளே முதன்மையான இலக்குகள். கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது சேரிவாழ் சிறுவர்களுக்கென்றே ஒரு உலகக் கோப்பை பிரேசிலில் நடந்தது. அதில் சென்னை சேரி சிறுவர் அணியும் கலந்து கொண்டது. இது போக விமானம், ஹெலிகாப்டர், சுற்றுலா என்று பெயருக்கு சில சிறுவர்களை அழைத்து செல்வது, சேரிகளில் ஏராளமான அடையாள சேவைகளை செய்வது என்று இவர்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்கப்படுகிறார்கள்.

kaaka-muttai1-review-specialகாக்கா முட்டை பட வெற்றிக்கு பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், இயக்குநர் மற்றும் அந்த இரண்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு போய் மும்பையில் தோனியை சந்திக்க வைத்து செய்தியை வெளியிடுகிறது. இந்த சந்திப்பிற்கு தோனி எவ்வளவு வாங்கினார் அல்லது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் கிரிக்கெட் ஊழலை அமுக்குவதற்கு எவ்வளவு கவனித்தார் என்பதெல்லாம் அந்தச் சிறுவர்களோ இல்லை இயக்குநர் மணிகண்டனோ அறியமாட்டார்கள்.

ஆனல் சேரியை ஏன் இப்படி அருவெறுப்பாக வியாபாரம் செய்ய வேண்டும்? ஸ்லாம்டாக் மில்லியனர் படத்தில் தாராவியின் பின்னணியில் கோன்பனேகா குரோர்பதியில் மில்லியனராகும் சேரி இளைஞனின் கதை காட்டப்படும். அந்தப் படத்திலும் உதிரிப்பாட்டாளிகளின் சேரிகள் ஒருவித புனிதப்படுத்தலோடு, இன்னும் நிறைய மசாலாவோடும் சித்தரிக்கப்படும்.

இறுதியில் மேற்குலகின் அட்வென்சர் சுற்றுலாவில் சேரிகளும் வருகின்றன. உழைப்பிற்கும், மரணத்திற்கும், துன்பங்களுக்கும் அஞ்சாத அல்லது அவற்றை சட்டை செய்யாத அம்மக்களின் வாழ்க்கைக் காட்சிகள் சுற்றுலா பயணிகளுக்கு பரவசமளிக்கின்றன. கழைக்கூத்தாடி கர்ணம் அடிப்பதில் ஏற்படும் அதே பரவசம்.

அனாதைக் குழந்தைகளின் ஆசிரமங்களுக்கு பிறந்த நாள் சென்று லட்டும், கேக்கும், இரண்டு நோட் புக்கும் கொடுத்து கொண்டாடும் நட்ச்திரங்களுக்கு இத்தகைய குழந்தைகள் இல்லையென்றால் கருணையைக் காட்டுவது எப்படி? அது போல பெருகி வரும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் இத்தகைய கருணைக் கடத்தல்கள் தேவைப்படுகின்றன. அதற்கு ஃபாக்ஸ் ஸ்டூடியோக்களுக்கு மணிகண்டன்கள் பயன்படுகிறார்கள்.

இன்னமும் நீங்கள் இந்த விமரிசனத்தை ஏற்கவில்லை என்றால் ரவிதாஸ் காலனிக்கு சென்று பாருங்கள்.

சொல்லப் போனால் உதிரிப்பாட்டாளிகளின் வாழ்வியல் உலகை மகிழ்ச்சி கொள்ள முடியாத கவனத்தோடும் பதட்டத்தோடும் ஊடுருவிப் பார்த்த படமொன்றில்தான் அந்த ரவிதாஸ் காலனி வருகிறது.

அந்த படத்தின் பெயர்  “இந்தியாவின் மகள்”. ஆம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பி.பி.சியின் ஆவணப்படம்.

மருத்துவ மாணவி ஜோதியை வன்புணர்ந்து கொடூரமாக தாக்கி சாலையில் வீசுகிறார்களே அந்த இளைஞர்கள், அவர்கள் வாழும் சேரியின் பெயர்தான் ரவிதாஸ் காலனி.

இந்த இளைஞர்கள் யாரும் தொழில்முறைக் கிரிமினல்களோ இல்லை உளவியல் ரீதியில் சிதைவுண்டவர்களோ இல்லை என்கிறார் திஹார் சிறையின் உளவியல் மருத்துவர். ரவிதாஸ் காலனியில் வாழும் ஒரு இளைஞன் அப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை என்பதை படம் நுட்பமாக உணர்த்துகிறது. திடீர் நகரைப் போன்ற நெருக்கடி, வசதிகள் இல்லை, குடி, அடி, குறிப்பாக பெண்களை அடிவாங்குவதற்கென்றே வைத்திருக்கும் வட இந்திய பார்ப்பனியம், வேலைக்கு செல்லுமிடத்தில் அச்சுறுத்தும் நுகர்வுக் கலாச்சார வசதிகள் எல்லாம் சேர்ந்து அவர்களை இயல்பாகவே அப்படி உருவாக்கியிருக்கிறது.

தாங்கள் செய்வது தவறு அல்லது குற்றம் என்பதாக அவர்கள் கருதவில்லை. அதுதான் அவர்களது பார்வையில் திமிராக இருப்பதாக ஜோதியின் தந்தை கருதுகிறார். அவர்கள் ஏன் அதைக் குற்றம் என்று கருத வேண்டும்? இங்கே குற்றம், நன்னடத்தை என்று நாம் தீர்மானிக்கும் விழுமியங்கள் உண்மையில் வாழ்வதற்கென்றே சில அடிப்படை வசதிகள் இருக்கும் இடங்களில்தான் செல்லுபடியாகும். அல்லாத இடங்களிலும் வேண்டும் என்பது பேராசை மட்டுமே. ஒரு வகையில் உங்களது ஒழுக்கத்தை அதற்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம் திணிப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

எனில் அன்பு, பாசம், கருணை, எளியோர் மீதான பரிவு போன்றவை உலகப் பொதுவான உணர்ச்சிகள் இல்லையா? அவை ஒரு ஏழைக்கு அதாவது வினவு  சொல்லும் உதிரிப்பாட்டாளிக்கு இல்லையா?

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

நாகரிக உலகின் மெக்காவான அமெரிக்காவிடம் இவை இல்லை என்பதை அரசியல் ரீதியாக ஏற்போர், ஏழைகளின் உறைவிடமான ஆப்பிரிக்காவிலும் அது இல்லை என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஆப்பிரிக்க உள்நாட்டு போரில் அமெரிக்கா போன்று அதி உயர் ஆயதங்களோ குண்டுகளோ இல்லை, அல்லது அப்படி கொலை செய்வதற்கான பொருளியல் ராஜதந்திரங்களோ அம்மக்களிடம் இல்லை. ஆனாலும் கூட இருப்போர், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று மலிவாக கொல்லப்படும் அந்த உள்நாட்டு போரில் எங்கு தேடினாலும் மனிதாபிமானத்தை காண இயலாது.

ஆம். ஏழ்மை என்பது நல்ல பண்புகளை பராமரித்து மேம்பட்ட சமூகமாக ஆக்கும் நேர்மறை சக்தியல்ல. அது எதிர்மறைச் சக்தி. நாட்பட்ட வறுமையோ ஆண்டுகணக்கிலான ஏழ்மையோ ஒரு மனிதனின் நம்பிக்கைகள், விழுமியங்கள், நன்னெறிகள் அனைத்தையும் வெறிகொண்டு உறிஞ்சி தீர்த்துவிடும். விவசாயம் காலியாகி, வேறு வாழ்க்கை இல்லை என்ற நிலையில் பெண்கள் விலைமாதராக ஆவதோ, சிறுவர்கள் குற்றவாளிகள் ஆவதோ, இளைஞர்கள் கூலிப்படையினராக மாறுவதோ இயல்பாக நடக்கும்.

அதனால்தான் ஏழ்மை ஒரு அழிவுச் சக்தி. ஏழைகள்தானே கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை வர்க்கம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் ஒரு நாடு ஏழை நாடு என்பதால் மட்டும் புரட்சியோ, கம்யூனிசமோ வருவதில்லை. புரட்சி என்ற நெறியை போதிக்கக் கூட அங்கே ஒரு குறைந்தபட்ச வாழ்க்கை வேண்டும். அதனால்தான் உதிரிப்பாட்டாளிகளை அமைப்பாக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகளே இன்றும் போராடித்தான் வருகிறார்கள்.

இந்தியாவின் மகள் படத்தில் கடைசிக் காட்சியில் அந்த ஓட்டுநர் இளைஞன் முகேஷ் சிங் “என்னைத் தூக்கிலிட்டால் இனி நடக்கும் கற்பழிப்புகளுக்கு பிறகு அந்தப் பெண்களை இளைஞர்கள் கொன்று விடுவார்கள்” என்று சொல்வான். இதை அவன் திமிரிலிருந்து சொல்கிறான் என்று நினைக்கும் தோழர்களிடம் இல்லை இதை அவனது ‘கருணைப்படி’யே சொல்கிறான், காரணம் அவனது ரவிதாஸ் காலனி ஒழுக்கத்தின்படி இது மிகப்பெரும் ‘மனிதாபிமானம்’ என்று விவாதித்தது நினைவுக்கு வருகிறது.

எனினும், சில தோழர்கள் அந்தக் குற்றவாளிக்கு தண்டனை வேண்டாம் என்பதாக இந்த வாதம் இருக்கிறது என்று குறைபட்டார்கள். காக்கா முட்டை விமரிசனத்திற்கு கூட அப்படித்தான் கருத்துக்கள் வரும். எனினும் காக்கா முட்டையை ரசித்தவர்கள் உண்மையான திடீர்நகரமான ரவிதாஸ் காலனியை பார்க்க வேண்டும்.

ஆனால் காக்கா முட்டையை பார்த்த பிறகும் தொடரும் விருப்பம், இந்தியாவின் மகளை பார்க்கும் போதே இருக்காது.

பார்க்க முடியாத ஒரு படத்தை பார்ப்பது எப்படி? அதை விரும்புவது எப்படி?

நன்றி. வினவு இணையதளம்