காக்கிச் சட்டைகள் நிஜ வாழ்க்கையில் மக்களிடம் எவ்வளவு மதிப்பிழந்து போய், வெறுமனே அடக்குமுறை மற்றும் அதிகாரத்தின் அடையாளங்களாய் நிற்கிறார்கள் என்பதை காட்ட வந்திருக்கும் இன்னெொரு போலீஸ் படம்.

மாமூல் வாங்கும் தனது தந்தைகளிடம் ப்ளாக்மெயில் செய்து பணம் பிடுங்கி குடியும் கும்மாளமுமாய் இருக்கிறார்கள் நாயகன்விமலும் அவரது நண்பர்களும்.  ஒரு சமயத்தில் எதார்த்தமாக விமலுக்கு சென்னையையே கலக்கும் படா ரவுடியின் தொடர்பு கிடைக்கிறது. போலிஸின் என்கவுண்டர் லிஸ்டில் இருக்கும் அந்த ரவுடியிடம் ஒரு டீல் பண்ணும்போது, விமலைப் பொறியாக வைத்து ரவுடியை போலிஸார் மடக்க முயல தப்பிச்செல்லும் அவர் , சென்னையை சற்று மறந்துவிட்டு ஹீரோவைப்போடத் துடிக்கிறார்.

இன்னொரு பக்கம் இதே ரவுடியை என் கவுண்டர் செய்ய, பீச்சில் பலூன் கடை வைத்துக்கொண்டு, பின்னர் இன்ஸ்பெக்டராக மாறி சமுத்திரக்கனி பீதியக்கிளப்பும் டிராக் ஒன்று வருகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் தயாரிப்பாளர் `புன்னகைப்பூ` கீதா  நாயகி அவதாரத்தையும் தானே எடுத்துக்கொண்டு விமலை லைட்டாக லவ் பண்ணி கொஞ்சம் ஸ்பீடாகப் போய்க்கொண்டிருக்கும் கதைக்கு சிதை வைக்கிறார்.

பெயருக்குத்தான் விமல் கதாநாயகனே தவிர, நடிப்பிலும், கம்பீர வசன உச்சரிப்பிலும் படத்தைக் கட்டி ஆளுவது சமுத்திரக்கனிதான். நாளைக்கே கமிஷனர் ஆபிஸில் டூட்டியில் சேரலாம் என்பது போல போலீஸ் வேடம் அத்தனை பொருத்தம் சமுத்திரக்கனிக்கு. கதை சற்றே விறுவிறுப்பாக இருந்தாலும் தொழில்நுட்ப சமாச்சாரங்கள் படத்தை நிம்மதியாய் பார்க்கவிடாமல் தொல்லை செய்கின்றன. குறிப்பாக `கேளண்டி கொட்டாவிக்கு நான் கியாரண்டி` என்கின்றன பாடல்கள். இசை ஜீ.வி.பிரகாஸாமே?

மற்றபடி படம் ஓரளவுக்கு ஓ.கே என்றாலும், பணம்போட்ட ஒரே காரணத்துக்காக கதாநாயகியாய் நடிப்பது என்பதை புன்னகைப்பூ கீதா கருணைகூர்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டும். அண்ணி, அத்தை வேடங்களில் நடிக்கத்தயாரானால் உங்களை இருகரம் கொண்டு அணைத்துக்கொள்ள தமிழ்சினிமா சார்பில் தயாராக இருக்கிறோம்.

ரோட்டில் பிச்சையெடுக்கும் தொழிலாளிகளையும், மாமுல் வாங்கும் போலீஸாரையும் ஒருசேரக்காட்டி, அவர்களது பிள்ளைகளை வைத்தே` நீ யூனிஃபார்ம் போட்ட பிச்சைக்காரன்` என்பதில் தொடங்கி,  காக்கிச்சட்டைகளை கசக்கிப்பிழிந்து துவைத்து தொங்கப்போட்டு, க்ளைமேக்ஸில் மட்டும் நீட்டாய் அயர்ன்பண்ணி அனுப்பியிருக்கிறார் புதுமுக இயக்குநர் நாகேந்திரன்.

காவல் கொஞ்சம் ராவல்தான்…

Related Images: