அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு யுனிவர்சிடியில் நம்ம நாட்டு இந்தியரோ (நம்ம ஊர் ஐ.ஐ.டியில் படித்து விட்டு ஓடிப்போனவரோ?) அல்லது என்.ஆர்.ஐ இந்தியரோ ‘மனு பிரகாஷ்’ ன்னு பேரு.  இவர் கண்டு பிடித்திருப்பது தான் இந்தத் தண்ணீரில் இயங்கும் கம்ப்யூட்டருக்கான அடிப்படை லாஜிக்.

அதென்ன லாஜிக் ? கம்ப்யூட்டர் எல்லா கணக்குகளையும் 0 அல்லது 1 என்கிற இரு எண்களின் கணக்கீடுகளாகவே எடுத்துக் கணக்கிடும். இது தான் பைனரி(binary) லாஜிக் என்பது.

இந்த பைனரி லாஜிக்கை இவர் தண்ணீர்த் துளிகளை வைத்து கணக்கிடச் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அதற்காக இவர் பிரத்தியேகமான சோதனை வடிவமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த வடிவமைப்பு ஒரு போஸ்ட் ஸ்டாம்ப் அளவேயுள்ள ஒரு கண்ணாடித் தட்டு. அதன் மேல் இரும்பினாலான ஒரு புதிர்க்கட்டம் (maze) வடிவமைப்பு. இந்த புதிர்க்கட்டத்தை மூடும்படி இன்னொரு கண்ணாடித் தட்டு. இதுதான் அந்த சோதனை அமைப்பு.

இந்த இரு கண்ணாடித் தட்டுகளிடையே ஒருவித எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும். இந்த எண்ணெய்க்குள் காந்தமாகக்கூடிய நேனோ துகள்கள் உட்பொதிந்த ஒரு மிகச்சிறிய நீர்த்துளி ஒன்று செலுத்தப்படுகிறது. இப்போது இந்த கண்ணாடித் தகடுகளின் மேல் ஒரு சுழலும் மின்காந்தத்தை நகர்த்தினால் அதன் மூலம் நீர்த்துளியையும் நாம் நினைத்த திசையில் நகர்த்த முடியும்.  நீர்த்துளி இருந்தால் அது 1 நீர்த்துளி இல்லாவிட்டால் 0.

இந்தத் தகடுகளுக்கிடையே இதுபோல லட்சக்கணக்கான நீர்த்துளிகளை செலுத்தி நகர்த்த முடியும். இந்த அமைப்பு ஒரு வேதிப்பொருள் சார்ந்த உயிரி கம்ப்யூட்டராக (Bio-Computer) இயங்கும் அடிப்படை தயார் இப்போது !!

இந்தக் கண்டுபிடிப்பின் ஒரு உபயோகம் என்னவெனில் ஒரு கெமிஸ்ட்ரி லேப்பையே இவ்வாறு ஒரு கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்துவிடலாம் என்கிறார்கள்.

மனு பிரகாஷ் கண்டுபிடித்த அந்த சோதனை அமைப்பு பற்றிய வீடியோ …

Related Images: