‘இனிமே இப்படித்தான்’ – சந்தானம்

நடிகர் சந்தானம் தனது சொந்த தயாரிப்பில் நடித்து வெளிவர உள்ள ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூன் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், ஒரு படத்தை எடுத்து வெளியிடுவதில் உள்ள சிரமங்களைப் பேசினார்.

“இப்ப இருக்கிற சூழ்நிலையில ஒரு படத்தைப் பண்றது ஈஸி, ஆனால், அந்தப் படத்தை ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு இப்ப நான் தெரிஞ்சிக்கிட்டேன்.

இதுக்கு முன்னால ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் பண்ணேன், அதுல நான் லைன் புரொடியூசர், இராம.நாராயணன் சார்தான் புரொடியூசர், ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்துலயும் நான் லைன் புரொடியூசர்தான், புரொடியூசர் பிவிவி. படத்தை எடுத்துக் கொடுத்துடுவேன், அதுக்கப்புறம் அதை ரிலீஸ் பண்றதுலாம் அந்தந்த புரொடியூசரோட வேலை. ஆனால், முதல் முறையா என்னோட ஹேன்ட் மேட் சார்பா தயாரிக்கிற படத்தை நானே ரிலீஸ் பண்றேன். இப்பதான் ஒரு படத்தை வெளியிடற கஷ்டமும், வலியும் தெரியுது.

தேதி பிடிக்கிறதுல இருந்து டைட்டில் பிடிக்கிறது வரைக்கும் பிரச்சனைதான். எல்லாரும் இடம் வாங்கி ரிஜிஸ்டர் பண்றாங்களோ இல்லையோ, தயாரிப்பாளர் சங்கத்துல போயிட்டு ஒரு டைட்டிலை ரிஜிஸ்டர் பண்ணிடறாங்க.எந்த தலைப்பைச் சொன்னாலும் அது தயாரிப்பாளர் சங்கத்துல பதிவு பண்ண பெயரா இருக்கு.

சும்மா, ‘நீ ஏண்டா என்னைக் கூப்பிட்ட’ அப்படின்னு கேட்டால் அந்தப் பெயரைக் கூட ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்காங்க. டைட்டில் வைக்கிறதுல இருந்து படத்தை ரிலீஸ் செய்யற வரைக்கும் ரொம்ப ரொம்ப போராட வேண்டியிருக்கு.

இந்தப் படத்தோட இயக்குனர்கள் முருகானந்த் தான் என்னோட பலம். நான் இதுக்கு முன்னாடி பல படங்கள்ல பேசுன நகைச்சுவைகளுக்கும் அவங்கதான் காரணம். இந்தப் படத்தைப் பேசிப் பேசிதான் படத்துக்கான ‘லைன்’ பிடிச்சோம்.

ஒரு அழகான காதல், யதார்த்தமான, நகைச்சுவை கலந்த படம். கடைசியில சின்ன ஒரு மெசேஜ் இருக்கும். எல்லாருக்குமே பிடிக்கிற மாதிரியான படமா இந்தப் படத்தை உருவாக்கியிருக்கோம்,” என சந்தானம் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள் முருகானந்த், இசையமைப்பாளர் சந்தோஷ தயாநிதி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வர், நாயகி ஆஷ்னா சவேரி மற்றும் படத்தின் தயாரிப்பாளர், கதாநயாகன் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படம் ஜுன் 12ம் தேதியன்று ரீலீஸாக இருக்கிறது.