2014ன் தானப் பிரபு அஸிம் பிரேம்ஜி !!

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அஜிஸ் பிரேம்ஜி தனது விப்ரோவின் பங்குகளில் 36 சதவீதத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார். அதன் மதிப்பு சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய். அடடே என்ன ஆச்சரியம் ? தனது வருமானத்தின் 39 சதவீதப் பகுதியை சுமார் 15 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தொண்டு நிறுவனத்திற்கு மாற்றம் செய்து வந்திருக்கிறார். ‘ஹரன்’ என்கிற அமைப்பின் இந்திய கொடைவள்ளல்கள் பட்டியலில் 2014ன் தலைசிறந்த தானப்பிரபுவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அது சரி. அந்தத் தொண்டு நிறுவனம் பெயர் என்ன ? விப்ரோ நிறுவனத்தின் தொண்டு நிறுவனங்களான அஸிம் பிரேம்ஜி பவுன்டேஷன் மற்றும் அஸிம் பிரேம்ஜி தொண்டுச் சேவை ஆகிய நிறுவனங்களுக்கு பண உதவிகள் செய்யும் அஸிமுடைய சொந்த ட்ரஸ்ட்டான பிரேம்ஜி ட்ரஸ்ட்தான் அது.

“இது போன்ற தொண்டு முயற்சிகள் தான் எங்களுக்கு எப்போதும் உந்து சக்தியாக இருந்து வந்திருக்கின்றன். ஒரு நல்ல சமூகத்தைக் கட்டமைக்க கார்ப்பரேட் பாடுபடும் முயற்சியின் செயல்பாடுதான் இது.” என்றார் அஸிம் பிரேம்ஜி.

வருஷத்துக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் பேர்னுட்டு கூசாமல் வேலையை விட்டு தூக்கி எறிஞ்சு அவங்க வீட்டுல எரியுற அடுப்பை புடுங்கிடுற விப்ரோ கம்பெனியின் நிறுவனருக்கு திடீர்னு ஏன் இந்த தர்ம சிந்தனையெல்லாம் வருது ? விஷயம் சிம்பிள். அவர் பேர்ல இருக்கிற கம்பெனில இருந்து அவரோட பணத்தை அவர் பேர்லயே இருக்கிற ட்ரஸ்ட்டுக்கு இடம் மாத்திவிட்டிருக்கிறார். அவ்வளவுதான். ஏன் அவர் அப்படி செய்யனும்?

கம்பெனின்னா இன்கம்மு , டாக்ஸூ , ரெய்டு அப்புறம் ஸ்விஸ் பாங்க் அப்புறம் அங்கிருந்து பெர்முடா பாங்க்ன்னு சுத்தி சுத்தி தப்பிச்சு பணம் வரவேண்டியிருக்கு. டிரஸ்ட்டுன்னா பிரச்சனையே இல்லை. அதுவும் நம்ம சொந்த ட்ரஸ்ட்டு. எல்லாம் சமூக சேவைக்குதானுங்கோன்னுட்டா எந்தக் கேள்வியும் எந்த நாட்டுலயும் கிடையாது.

சரி விடுங்க. தர்மவான் பிரேம்ஜியின் நாலுபேருக்கு நல்லது செய்யனும்ன்ற நல்ல நோக்கத்தை பாராட்டுங்க.