பாகுபலி – விமர்சனம்

250  கோடி ரூபாய் பட்ஜெட், அதில் பாதித்தொகை கிராஃபிக்ஸ் செலவுக்கு, 3 வருடகாலத் தயாரிப்பு, பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள், படம் குறித்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த செய்திகள்  என்று எல்லாம் சேர்ந்து `பாகுபலி` படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்திருந்ததென்னவோ உண்மை.

உலகில் வேறு யாராவது இப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்களா தெரியவில்லை, தொடர்ச்சியாக 9 வெற்றிப்படங்களை த்தந்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பத்தாவது படம் இது.

ராஜமவுலியின் பெரும்பாலான படங்களைப்போலவே இதுவும் ஃபேண்டஸி பீரியட் கதைதான். ராஜா, ராணி, இளவரசன், பதவி ஆசைபிடித்த நயவஞ்சக மாமா, உயிரையே தரத்தயாராக இருக்கும் இன்னொரு விசுவாச மந்திரி,கிளுகிளு ஹீரோயின்… இந்த கேரக்டர்களையெல்லாம் கொடுத்து மூனாம் வகுப்பு படிக்கிற சமர்த்துக்குட்டியிடம்… `எங்கே இவங்களை வச்சி ஒரு கதை சொல்லு பாப்போம்? என்று கேட்டால் சொல்லிவிடமுடிகிற கதைதான் இந்த `பாகுபலி`யின் கதையும்.

இந்த சாதாரண கதையை அசாதாரணமான திரைப்படமாக்க முடிகிற ராஜதந்திரம் தான் ராஜமவுலியின் திரைமந்திரம்.

மகிழ்மதி நாட்டில் ஃப்ராடு ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி பிரம்மாண்டமான 120 அடி உயர சிலையை நூற்றுக்கும் மேற்பட்டோர் கயிறுகட்டி இழுத்து ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் முடியாமல் போய் அந்தக்கயிறு அறுந்து அத்தனைபேரும் சிலையின் கீழ் சிக்கி சிதையப்போகும் வேளையில் ஒரு கரம் வந்து அநாயசமாக விபத்தை தவிர்த்து சிலையை நிறுத்த, அவர் முகத்தைப்பார்த்து அதிர்ந்து போய்  ஒரு சிப்பாய் `பாகுபலி` என்று முனுமுனுக்க, அந்த வார்த்தை காற்றெங்கும் பரவி `பாகுபலி பாகுபலி என ஒலிக்கத்துவங்க….அந்த இடத்திலிருந்தே `இந்திய சினிமா ராஜாங்கத்தின் திரைக்கதை ராஜா நானே தான்` என்று அறைகூவல் விடுக்க ஆரம்பிக்கிறார் ராஜமவுலி. இந்த கம்பீர ராஜாங்கம் படம் முழுக்கவே சுபிட்சமாக நடக்கிறது.

`நோ லாஜிக் ஒன்லி மேஜிக்` என்பதுதான் ராஜமவுலியின் திரைக்கதை உத்தி.  ரசிகர்கள் மனதில் அப்படிப்பட்ட கேள்விகள் வந்துவிடாதபடிக்கு அமானுஷ்ய சக்திகளை மொத்தப்படத்துக்கும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். இல்லையெனில் ரம்யாகிருஷ்ணன் தான்செத்தபிறகும் நடு ஆற்றில் வெறும் கைகள் தெரிய இளவரசனை ஏந்திக்கொண்டு மொத்த ராத்திரியும் இருக்கமுடியுமா?. தமன்னாவின் கைகளில் முதுகில் அவரே உணராமல் டாட்டு வரையமுடியுமா?

நடிப்பில் எப்போதுமே ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கும் பிரபாஸ் இதிலும் அங்ஙனமே. ஆக்‌ஷன் ப்ளாக்கில் பின்னிப்பெடலெடுக்கும் தமன்னா பிரபாசண்ணா கைபட்டதும் வழக்கமான மசாலா ஹீரோயின் ஆகிவிடுகிறார். பிரபாசின் அம்மாவாக இருபத்தைந்து ஆண்டுகளாக சங்கிலியில் கட்டப்பட்டுக்கிடக்கும் சங்கடமான கேரக்டர் அனுஷ்காவுக்கு. [அந்தத்தோற்றத்தில் அவர் `லேடி பரதேசி` போல் இருந்ததால் அக்காட்சிகளை மட்டும் இயக்குநர் பாலாவை விட்டு இயக்கச்சொல்லியிருப்பாரோ என்றொரு கமெண்ட் தியேட்டரில்.]

மெல்கிப்சனின் `ப்ரேவ் ஹார்ட்`டை நினைவூட்டினாலும் இந்திய சினிமாவில் இதுவரை இப்படி பிரமாண்டமான போர்க்களக் காட்சிகளை எடுத்ததில்லை என்பதை வீரர்கள் படத்தில் பயன்படுத்திய எந்த ஆயுதத்தின்மீது வேண்டுமானாலும் சத்தியம் பண்ணி சொல்லலாம். ராஜமேக்கிங் மவுலிகாரு.

பார்ட்2 எடுக்கும் பேராசையால், குறைசொல்ல வாய்ப்பே இல்லாத இப்படத்தின் க்ளைமாக்ஸ் மட்டும் படுசப்.

பட டைரக்டர் தவிர்த்து, ஆர்ட் டைரக்டர்,மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர்  என்று இப்படத்தில் பணியாற்றிய முன்னணி டெக்னீஷியன்கள்  பலபேர் இப்போதே டெல்லிக்கு டிக்கட் புக் பண்ணி தேசிய விருத்துக்குக் காத்திருக்கலாம்.

`பாகுபலி`இந்திய சினிமாவெளியில்  ராஜமவுலியின் தனி வழி.