ஏற்கனவே இஸ்லாமியர்களை கடலில் தூக்கிப் போடவும், பாக்கிஸ்தானுக்கு ஓடிப் போய்விடவும் என்று மிக அற்புதமான யோசனைகளை வழங்கிய இந்துத்துவா குழுக்களிடமிருந்து இப்போது இஸ்லாமியருக்கு புதிய அறிவுரை வந்திருக்கிறது. இம்முறை இதை வழங்கியிருப்பவர்கள் பாபர் மசூதியை இடித்ததில் பெரும் பங்கு வகித்த சிவசேனாவினர்.

அது என்னவென்றால் இஸ்லாமியருக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்பது. இதுபற்றி சிவசேனா பத்திரிக்கை ‘சாமணா’  பின்வருமாறு மதவெறி நஞ்சை கக்கி கூறியிருப்பதாவது…

“2001லிருந்து 2011 வரை இந்திய இஸ்லாமியரின் மக்கள் தொகை 24 சதவீதம் கூடியிருக்கிறது. அதற்குப் பின் 2015க்குள் ஒரு 5 சதவீதமாவது கூடியிருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவில் இருக்கும் மக்களின் மொழி, இருப்பிடம் மற்றும் உணர்வுரீதியான விஷயங்களில் சிக்கல்கள் உருவாகும். நமது பிரதமர் இஸ்லாமியரிடம் நமது நாட்டின் சட்டத்தை பின்பற்றுமாறு தெளிவாகச் சொல்லவேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டின் தேவையை அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். லோக்பாலை விட தற்போது மிகத் தேவையானது காமன் சிவில் கோட் எனப்படும் பொது சிவில் சட்டமே. ”

“கர்வாப்ஸி யார் வேண்டுமானாலும் செய்யட்டும். இஸ்லாமியரும் கூட. அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால்  நாட்டில் தோன்றியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு இது போதுமான தீர்வல்ல. பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் இஸ்லாமிய அரசுகளைக் கொண்டிருக்கின்றன. அங்கு மக்களின் வாழ்க்கை முறையோ சகல உரிமைகளுடன் இல்லை. அதே சமயம் துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவை பின்பற்றி லேட்டஸ்ட் தொழில்நுட்ப உலகில் செல்கின்றன. எனவே மோடி அரசு முஸ்லீம்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி ( இஸ்லாமியர்களை பழமையிலிருந்து புதுமைக்கு ) கொண்டு வர வழிகாட்ட வேண்டும்”.

இந்த விஷமான கருத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் 24 சதவீதம் என்பது பொய். இஸ்லாமியரின் மக்கள் தொகை அந்த பத்து வருடங்களில் 14 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. கடந்த ஆறு பத்து வருட மக்கள் தொகை கணக்கெடுப்புகளை கவனித்தால் 1951 களில் 9 சதவீதம் வளர்ந்த இஸ்லாமிய மக்கள் தொகையானது 2001 களில் 14 சதவீதமாக கூடியிருக்கிறது. அதாவது 60 வருடங்களில் இஸ்லாமிய மக்கள் தொகை கூடும் விகிதம் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.

வழக்கம் போல நம் பிரதமர் மோடி இது போன்ற மதத் துவேஷ விஷயங்களில் நம் மன்மோகன்ஜியின் அறிவுரையான ‘அமைதி’யை அடை காக்கிறார்.

Related Images: