தீஸ்தா சேதல்வாத்தின் பெயிலுக்கு குஜராத் போலீஸ் எதிர்ப்பு!!

சமூக சேவகியான தீஸ்தா சேதல்வாத் பிரதமர் மோடியை குஜராத் கலவர வழக்கில் மாட்டவைத்திருப்பதால் அவரைப் பழிவாங்க நடவடிக்கையில் இறங்கிய குஜராத் போலீஸ், தீஸ்தா தனது தொண்டு நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்து தனது சொந்த செலவுக்கு உபயோகப்படுத்தியுள்ளார் என்று அவர் மேல் வழக்கு போட்டு கைது செய்துள்ளது. பெயிலில் ளிவர தீஸ்தா சேதல்வாத் செய்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குஜராத் போலீஸ்.

யார் இந்த தீஸ்தா சேதல்வாத்? 2002ல் குஜராத்தில் மோடி அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட மதக்கலவரத்தில் சுமார் 2000 பேர் கொன்றழிக்கப்பட்ட இனப்படுகொலை சம்பவத்தின் சான்றுகளையும், சாட்சியங்களையும் சேகரித்து தனித்தனி வழக்குகளாக நீதிமன்றங்களில் தொடுத்து நீதியை பெற்று தரும் முயற்சியில் ஓரளவாவது வெற்றி பெற்று வந்தவர் தான் தீஸ்தா சேதல்வாத். இது வரையிலும் அக்கலவரத்தில் 117 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் மோடியின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த சுகாதாரத்துறை அமைச்சர் மாயா கோட்னானி தீஸ்தா சேதல்வாத்தின் வழக்கினால் 28 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்.

அடுத்ததாக குல்பர்க் சொஸைட்டி வழக்கில், கலவரத்தின் போது குல்பர்க் ஸைட்டியில்முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் இஷான் ஜாப்ரியின் வீட்டில் தஞ்சம் புகுந்த முஸ்லீம்கள் 69 பேரை இந்து வெறியர்கள் சித்திரவதை செய்து கொன்றனர், இஷான் ஜாப்ரியையும் சேர்த்து. ஜாப்ரியின் வீட்டை இந்து அமைப்பின் வெறியர்கள் சூழ்ந்திருந்த போது அவர் தனது வீட்டு போனிலிருந்து அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். அவரிடம் பேசிய மோடி தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னார். இவ்வாறாக மதவெறியர்களை தடுத்து நிறுத்த
தவறிவிட்டார் மோடி என்பது தான் வழக்கு. மோடியின் பெயர் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டுள்ளது.

இப்படி தைரியமாக தற்போது பிரதமரே ஆனாலும் குற்றம் குற்றமே என்று எதிர்த்து நிற்கும் தீஸ்தா சேதல்வாத்தின் மீது தான் இந்த கையாடல்
வழக்கை குஜராத் போலீஸ் போட்டுள்ளது. அவர் தனது தொண்டுநிறுவனமான “சப்ரங் ட்ரஸ் மற்றும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமகன்கள்” (CJP)
ன் பணத்தை சொந்த செலவுகளுக்காக ஆட்டையைப் போட்டுவிட்டார் என்பது போலீஸ் தரப்பு வாதம்.

அப்படி பணத்தை ஆட்டையைப் போட்டு அவர் வாங்கிய ‘முக்கிய’ அயிட்டங்களை போலீஸ் பட்டியலிட்டு, இவ்வளவு பணத்தை கையாடல் செய்த
அவரை வெளியே விடக்கூடாது என்று எதிர்த்திருக்கிறது. அப்படி போலீஸ் போட்ட அந்தப் பட்டியல் கீழே..
1. சில பாட்டில் சரக்குகள்.
2. சிங்கம், ஜோதா அக்பர், பா போன்ற படத்தின் சி.டிக்கள்.
3. சானிட்டரி நாப்கின்கள்.
4. ஹேர் ஸ்டைல் பண்ணிய செலவுகள்.
5. சில கண்கண்ணாடிகள் வாங்கிய செலவுகள்.
6. மும்பையில் சில ஹோட்டல்களில் சாப்பிட்ட பில்கள்.
7. அவரது மியூசியம் கட்டும் செலவுகள் (இது அவர் சொந்த மியூசியமா இல்லை மக்களுக்காகவா என்கிற விளக்கம் இல்லை).

‘இந்த டப்பா செலவுக்கெல்லாம் போய் வேலை மெனக்கெட்டு ஒரு ஆள் என்.ஜி.ஓ ஆரம்பிக்கனுமா ?’ ன்னு நாம கேக்கக்கூடாது. போலீஸ் சொன்னா
நம்பித்தானே ஆகணும். மக்களின் காவலர்கள் இல்லையா அவர்கள்?