‘நான் ஆர்.எஸ்.எஸ் ஊழியன் தான். அதனால் என்ன?’ – அருண் சாதே. 

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின் கல்வி, ராணுவம், சினிமா உள்ளிட்ட பல துறைகளில் அரசின் உயர் பதவிகளில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இது பற்றி பரவலான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. சமீபத்தில் கூட புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக டி.வி. நடிகர் கஜேந்திர சௌகானை அவர் ஆர்.எஸ்.எஸ். காரர் என்பதற்காகவே நியமித்தது அரசு. அதை எதிர்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் போராடிக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டு அரசின் சென்ஸார் போர்டின் உறுப்பினர்கள் கூட ஆர்.எஸ்.எஸ் அபிமானிகளாக மாற்றிப் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த லிஸ்டில் ‘செபி’ சேர்ந்திருக்கிறது. செபி என்பது இந்தியாவில் பதியப்பட்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் முதலீடுகள், பங்கு வர்த்தகச் சந்தை ஆகியவற்றை கண்காணிக்கிறது. இதன் தற்போதைய தலைவர் இன்னும் இரு மாதங்களில் ஓய்வு பெற இருக்கிறார்.

இந்நிலையில் நிதியமைச்சகம் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான அருண் சாதேவை செபியின் பகுதி நேர உறுப்பினராக நியமித்துள்ளது. இது போன்ற வெளிப்படையான அரசியல் தொடர்புள்ளவர்களை செபியின் உறுப்பினராக்குவது அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு சார்பானவர்களை மட்டுமே ஊக்கப்படுத்தும். நடுநிலையான செயல்பாடு இருக்காது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அருண் சாதே கூறுகையில் “நான் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தான். அதனாலென்ன? செபியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே என்னை பகுதிநேர உறுப்பினராக நியமித்துள்ளார்கள். அவர்கள் எனக்கு தரும் வேலைகளை சரியாகச் செய்து முடிப்பேன். இதில் கருத்து முரண்பாடுகளுக்கு அவசியமேயில்லை” என்றார். இவர் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மஹாஜனின் சகோதரர் வேறு.