சுற்றுப்பறச் சூழலைப் பாதுகாக்கவும், மரங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் புதிய ஐடியாவைச் செய்துள்ளார்.

வடஇந்தியாவில் இந்துக்களிடையே மிகப் பிரபலமானது ‘ரக்ஷா பந்தன்’ எனப்படும் ராக்கி கயிறு கட்டும் திருவிழா. இவ்விழாவில் பெண்கள் தங்கள் மரியாதைக்குரியவர்களையும், சகோதரர்களையும் வணங்கி அவர்களுக்கு ராக்கி என்கிற கயிறு கட்டுவார்கள். நம் ஊரிலும் கல்லூரிகளில் இந்த நிகழ்வு பிரபலம். பசங்கள் பெண்கள் ராக்கி கயிறோடு வந்தாலே தலைதெறிக்க ஓடுவார்கள். ஏனென்றால் அவள் ராக்கி கட்டிவிட்டால் அப்புறம் சகோதரியாகிவிடுவாளே ! அந்தக் கவலையில் தான்.

இவ்விழாவையொட்டி ராஜ்தானி வாடிகாவில் நடந்த நிகழ்வுக்கு வந்த நிதீஷ் குமார் அங்கிருந்த பெரிய மரத்துக்கு ராக்கி கட்டினார். ஜனதா தள் தலைவர்களும், அதிகாரிகளும், பள்ளிக் குழந்தைகளும் இவ்விழாவில் பங்கேற்றனர். அதில் பேசிய நிதீஷ் “மக்கள் நிறைய மரங்களை நட்டு வளர்க்க முன்வரவேண்டும். அதன் மூலம் நமது சுற்றுப்புறம், நீராதாரங்கள் பாதுகாக்கப்படும். அதனால் நம் சகோதரன் அல்லது சகோதரியாக மரங்களைப் பாவித்து மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டுங்கள். நமது சூழ்நிலையை பசுமையாக்குங்கள். மரங்களைப் பாதுகாத்திடுங்கள்” என்றார்.

நிதீஷ் குமாரின் இந்த ராக்கி ஐடியா பாட்னாவிலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள தர்ஹாரா என்கிற கிராமத்தினர் மரத்தை புனிதமாக மதித்து பின்பற்றி வந்த வழக்கமாகும். இந்தக் கிராமத்தினர் தங்கள் ஊரில் பிறக்கும் ஒவ்வொரு பெண்குழந்தையின் பேரிலும் ஒரு மரத்தை ஊன்றி வளர்க்கிறார்கள். பீகாரின் நிலப்பரப்பில் 9 சதவீதம் மட்டுமே காடுகளாகும்.

Related Images: