பாலாவின் `பி` ஸ்டுடியோஸ் தயாரிக்க `களவாணி` சற்குணம் இயக்கத்தில் அதர்வா, கயல், லால் நடித்திருக்கும் `சண்டிவீரன்` ஏற்கனவே வெளியான அழகிய டிசைன்களால் சுண்டி இழுத்திருந்ததென்னவோ உண்மைதான். ஆனால்….
முதலில் சண்டிவீரரின் கதையைக் கேட்போம்.
முறையான பாஸ்போர்ட் இல்லாததால் குண்டியில் மூன்று ரோத்தம் அடிகளை வாங்கி வீங்கி சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்குத்திரும்புகிறார் அதர்வா. கைவசம் வேறு வேலைகள் இல்லாததால் தனது இளம்பிராயத்து தோழியும் வில்லன் லாலின் மகளுமான ஆனந்தியைக் காதலிக்கிறார். வயலும் வாழ்வுமாக அக்காதல் வளர்ந்துகொண்டிருக்க, இடைவேளைக்கு சற்றே முன்னர், அதர்வாவின் ஊரான நெடுங்கட்டுக்கும் பக்கத்து கிராமமான வயல்பாடிக்கும் தண்ணீர்ப் பிரச்சினையால் வன்மம் வெடிக்கிறது.
ஃப்ளாஷ்பேக்கில் இதே பிரச்சினைக்காக தன் தந்தையை இழந்து தவிக்கும் அதர்வா, `நியாயம் இருக்கும் பக்கமே நான் நிற்பேன்` என்றபடி பக்கத்து ஊருக்கு சப்போர்ட் பண்ணி ஒண்டி வீரனாக நின்று தர்மம் காக்கிறார். சுபம்.
கதையில் கால்வாசிதான் இருக்கிறது என்றாலும் வாழ்வாதார பிரச்சினையான தண்ணீர் பிரச்சினையை கண்ணீர் கலந்து சொன்ன நற்குணத்துக்காக சற்குணத்துக்கு ஒரு குட்டி சபாஷ். அதைத்தாண்டி ஒரு படமாக காதல் காட்சிகளிலாகட்டும், கண்மாய்ச்சண்டைக்கான காரணங்களிலாகட்டும் ஒரு இடத்தில் கூட சுவாரசியம் இல்லை.
அதர்வா என்னதான் சிங்கப்பூர் ரிடர்னாக இருந்தாலும் பாலாவின் தயாரிப்பு என்பதாலோ என்னவோ நடிப்பிலும் தோற்றத்திலும் இன்னும் `பரதேசி`யை விட்டு வெளியே வரக்காணோம். கயல் சதா ஸ்கூட்டியில் பறக்கும் ரெண்டு கால் முயல். சின்னச்சின்ன எக்ஸ்ப்ரசன்களில் ஸ்மைலிகளை சிந்துகிறார். சேட்டன் லால்.. வழக்கம்போல்…`சண்டைக்கோழி` தொடங்கி அவர் வில்லனாக நடித்த பத்து படங்களிலிருந்து காட்சிகளை கத்தரித்து ஒட்டவைத்தது போல்…
இசையமைப்பாளர் அருணகிரி `அலுங்குற குலுங்குற` மற்றும் `தாய்ப்பாலும் தண்ணீரும்` ஆகிய இரு பாடல்களில் நிக்குறார். அதே சமயம் பின்னணி இசைக்கு ரொம்பத்தான் முக்குறார். ஒளிப்பதிவு பி.ஜி. முத்தையா.
`களவாணி`க்குப் பிறகு சுமாரான `வாகை சூடவா` அடுத்து சொதப்பலான `நையாண்டி`நான்காவதாக நடுத்தரமான `சண்டி வீரன்` என்று குழப்பமான இயக்குநராகவே சற்குணத்தின் பயணம் சருக்கிக்கொண்டேதான் செல்கிறது.
ஆக, `ஒன்ஃபிலிம்ஒண்டர்` என்றொரு சொல்லக்கூடியவர்கள் பட்டியலில் சேர்ந்து கடைசிவரை வேறு உருப்படியான படங்கள் தரமாட்டாமல் `களவாணி` சற்குணமாகவே காலம் தள்ளிவிடுவாரோ என்கிற ஐயத்தை `சண்டிவீரன்` மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

Related Images: