ஹெச்1 – பி விசாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டொனால்டு ட்ராம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட இருக்கிறார் டொனால்டு ட்ராம்ப். இவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புள்ளது என்று தற்போது கருதப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் போய் வேலை செய்வதற்கான ஹெச்1-பி விசா பற்றி இவர் எதிராகக் கருத்து கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்கள் உட்பட்ட பல நாட்டவர்களையும் இது பாதிக்கக் கூடும்.

அமெரிக்கக் குடியுரிமை சம்பந்தமான தனது நிலைப்பாடு பற்றிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ஐ.டி., பொறியியல் மற்றும் அறிவியல் துறை சம்பந்தமான பணிகளில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 65000 பேருக்கு ஹெச1-பி விசா நுழைவு இசைவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அமெரிக்கா வருவோரில் 50 சதவீதம் பேருக்கு அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த சம்பளமே வழங்கிவருகின்றன. அதே நேரம் அமெரிக்காவில் ஐ.டி, பொறியில் மற்றும் அறிவியல் துறையில் படித்து வெளிவரும் இளைஞர்களில் பாதிப்பேருக்கு உரிய வேலை கிடைப்பதில்லை.

எனவே இந்தத் துறைகள் சார்ந்த வேலை வாய்ப்புக்களில் அமெரிக்காவின் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹெச்1-பி விசாவின் கீழ் பணிபுரிவோருக்கான குறைந்த பட்ச ஊதிய வரம்பு உயர்த்தப்படும். இதன் மூலம், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்நாட்டிலுள்ள அமெரிக்க குடிமக்கள் வேலையிழப்பது குறைந்து கருப்பினத்தவர், பெண்கள் போன்றோரின் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.

முகநூல் நிறுவனர் மார்க் ஸகர்பர்க் மற்றும் ப்ளோரிடா மாகாண எம்.பி. மார்கோ ரூபியோ ஆகியோர் கூறுவது போல ஹெச்1-பி விசா நுழைவு இசைவு எண்ணிக்கையை 3 மடங்காக உயர்த்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் பேராக ஆக்கினால் அது பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் வளர்ச்சியை குலைப்பதாக அமைந்துவிடும்.” இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் தான் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவும் தான் அதிபராக போட்டியிட்டபோது ஹெச்1-பி விசாவுக்கு எதிராக உரத்து முழங்கி மக்களின் ஓட்டுக்களையும் வாங்கினார். ஆனால் பதவிக்கு வநதபின் அவரால் ஹெச்1-பி விசாவின் மேல் அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளை விதித்துவிட முடியவில்லை. காரணம் ? அமெரிக்காவின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைத்தால் மட்டுமே அவை பெரும் லாபம் சம்பாதிக்க முடியும். அந்த லாபத்தை அவர்கள் யாருக்காகவும் விட்டுத் தரப்போவதில்லை. உதாரணமாக வால்மார்ட் தனது தயாரிப்பு ஆலைகள் அனைத்தையும் தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் பிலிப்பைன்ஸ், சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு மாற்றியுள்ளது. அமெரிக்க அரசை பின்னிருந்து ஆட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து புதிதாய் வரும் அதிபர்கள் பெரிதாய் எதுவும் செய்துவிடமுடியாது.