சென்ற வாரம் தெகல்கா பத்திரிக்கையில் மஹாராஷ்ட்ராவில் சிவசேனையின் தலைவராக இருந்த பால் தாக்கரேவைப் பற்றிய கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. அதில் அவர் தனது தீவிர இந்துத்துவா கொள்கைகளால் இந்துக்களைக் கண்டால் மற்றவர்கள் அச்சம் கொள்ளச் செய்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டித்து மாநிலமெங்கும் சிவசேனையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெகல்கா இதழின் பிரதிகளை எரித்தனர். தெகல்கா பத்திரிக்கைக்கு எதிராக சிவசேனையின் அதிகாரபூர்வ ஏடான “சாம்னா” வில் ஒரு கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தார்கள். அதில் பால்தாக்கரேயின் வன்முறையான நடத்தைகள் அனைத்தையும் நியாயப்படுத்தியிருந்தார்கள்.

“இந்துக்கள் இந்த நாட்டில் இந்து என்கிற கர்வத்துடன் வாழவேண்டும். அவர்களின் குரல் ஒரு சிங்கத்தின் உறுமல் போல நாடெங்கும் ஒலிக்கவேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கவேண்டுமென்றால் அது இந்துக்கள் மேலும் மதரீதியாக ஒன்றுபடுவதாலேயே நடக்க முடியும். பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க இந்துக்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி பாகிஸ்தானுக்குள் ஊடுருவ வேண்டும்.” என்று இந்துத்துவா விஷத்தை கக்கி எழுதியிருந்தது.

பால்தக்கரே பற்றி கூறுகையில் “மக்கள் பாலாசாகேப் தாக்கரே”யின் மேல் மிகவும் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள். அவரது இந்திய தேசபக்தியால் கர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர் நிஜமாகவே மற்றவர்களுக்கு இந்துக்களின் மேல் ஒரு பயம் ஏற்படும்படி செய்திருக்கிறார். அவர் சொல்லியிருப்பது போல பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்கிற அவரது கொள்கையை நீங்கள் (இந்துத்) தீவிரவாதம் என்று சொல்வீர்களானால் அது நாட்டுக்காக நாங்கள் செய்யும் தீவிரவாதமாக இருக்கட்டும்.:

“இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது மஹாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள் தாக்கரேயால் தான் காக்கப்பட்டனர். ஒரு பத்திரக்கை (தெகல்கா) பால்தாக்கரே பற்றி அவதூறான கருத்துக்களைப் பரப்புவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மக்களின் கோபம் எழுந்தால் ஏற்கனவே அழிந்துகொண்டிருக்கும் அந்தப் பத்திரிக்கை மார்க்கெட்டிலேயே விற்கப்படாமல் இன்னும் நசுங்கிப் போய்விடும்”

Related Images: