மருத்துவத்துறையில் புதிய திட்டங்கள் சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு !!

நேற்று சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையொன்றை வெளியிட்டார். மருத்துவத்துறையில் புதிய திட்டங்களை அதில் அவர் அறிவித்துள்ளார்.-

கட்டிடங்கள்-கருவிகள்
* தேனி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்களுக்கு 6 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் விடுதி கட்டிடம் கட்டப்படும்.

* நடப்பாண்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 4 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் குடியிருப்புகளும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், 30 தங்கும் குடியிருப்புகள் மற்றும் 400 மாணவர்கள் அமரும் வகையில் விரிவுரை அரங்கமும் கட்டப்படும்.

* ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது போல 20 அரசு மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கும் மின்கலத்தால் செயல்படும் ஊர்திகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும்.

* கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பழுதடைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோய் தடுப்பு சிகிச்சை உட்பட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற 5 வகை உயர் சிகிச்சைகளுக்கு இலவசமாக காப்பீடு தர உருவாக்கப்பட்ட தொகுப்பு நிதிக்கு கூடுதலாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தாலுகா மருத்துவமனைகள்
சர்க்கரை நோயாளிகளின் 3 மாத கால சர்க்கரை சராசரி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க எச்.பி.ஏ.1 சி. அனலைசர் கருவியும், நோய்தாக்கம் மற்றும் ரத்த உட்கூறுகளின் அளவை கண்டறிய செல் கவுண்டர் கருவியும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் என, 302 அரசு மருத்துவமனைகளுக்கு 9 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

நிர்வாக வசதிக்காகவும், மக்களின் சிரமங்களை போக்கவும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய வட்டங்களை பிரித்து, புதிய வட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 49 புதிய வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 வட்டங்களில், புதிய தாலுக்கா மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 39 புதிய வட்டங்களில் வட்டத்திற்கு ஒன்று வீதம், 39 வட்டம் சாரா மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகளாக 70 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

சென்னை அரசு பொது மருத்துவமனையின் முடநீக்கியல் சிகிச்சை மையத்திற்கு, சிறப்பு மருந்துகளுக்காக 5 கோடி ரூபாய், சிறப்பு நிதியாக வழங்கப்படும்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பர்னாடு கதிர்வீச்சு நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் அணு மருத்துவத்தைப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் 25 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் இமேஜிங் மற்றும் சிகிச்சை திட்டம் மேம்படுத்தப்படும்.

குழந்தைகள் மருத்துவமனை
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல நிலையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் மரபியல் காரணங்களால் ஏற்படும் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக உயர்தர ஆய்வகம் ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருந்துக்கு மட்டும் 307 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. நடப்பு ஆண்டில் தொற்றா நோய் தடுப்பு திட்டம், பேறுசார் மற்றும் குழந்தை நலத்திட்டம், நகரும் மருத்துவப்பிரிவு திட்டம் ஆகியவற்றிற்காக கூடுதலாக மருந்துகள் வழங்க 102 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

புதுக்கோட்டையில்மருத்துவ கல்லூரி
சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள் சேர்க்கையுடன் 3 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் ஏழு அரசு மருத்துவக்கல்லூரிகளில், கூடுதலாக 410 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த தொடர் முயற்சிகளினால், கூடுதலாக 710 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நான் ஏற்கனவே ஆணையிட்டுள்ளேன். அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய அரசு மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்படும்.

50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும்

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்
தற்போது பல தனியார் மருத்துவமனைகள், முழு உடல் பரிசோதனைக்கு 5,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. அனைவராலும் அதிக அளவில் கட்டணம் செலுத்தி, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள இயலாது. முழு உடல் பரிசோதனை செய்யும் வசதிகள் தற்போது அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்ளன. எனவே முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்” தொடங்கப்படும்.

இந்த திட்டத்தில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, ரத்தக் கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு பரிசோதனை, ஹெப்படைடிஸ் பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச் பரிசோதனை, நெஞ்சு சுருள் படம், நெஞ்சு ஊடுகதிர் படம், மிகையொலி பரிசோதனை, இதய மீள் ஒலி பரிசோதனை, தைராய்டு ரத்த பரிசோதனை மற்றும் சிறப்பு சர்க்கரை நோய் பரிசோதனை ஆகியவை செய்யப்படும். இதே போல் மகளிருக்கு என்று தனியாக “அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை” என்ற திட்டமும் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், மேற்கண்ட அனைத்து பரிசோதனைகளுடன் கூடுதலாக கருப்பை முகைப் பரிசோதனை, மார்பக எண்ணியல் ஊடு கதிர்ப்பட பரிசோதனை, எலும்பு திறனாய்வு பரிசோதனை, ரத்த வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பாரா தைராய்டு ஹார்மோன் பரிசோதனை ஆகியவைகளும் செய்யப்படும். இதற்காக 10 கோடி ரூபாய் செலவில் மருத்துவக்கருவிகள் வழங்கப்படும். முழு உடல் பரிசோதனைக்கு மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.

அம்மா ஆரோக்கிய திட்டம்
மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்தில் இரு நாட்களில் பொதுமக்கள் சென்று, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., கொலஸ்ட்ரால், கண் பரிசோதனை போன்ற அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணம் ஏதுமின்றி செய்து கொள்ளும் வகையில் “அம்மா ஆரோக்கியத்திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதில் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும்.

‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ – சித்தமருத்துவம்
* மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் வரும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தவிர்க்க மாதுளை மணப்பாகு மற்றும் கருவேப்பிலை பொடியையும்; அடுத்த மூன்று மாதங்களின் போது தாய்க்கு ஏற்படும் இரும்பு சத்து மற்றும், வைட்டமின் சத்து குறைபாட்டை நீக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை போன்றவற்றையும்; கடைசி மூன்று மாதங்களின் போது ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க உளுந்து தைலத்தையும்; சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம் மற்றும் பாவன பஞ்சங்குல தைலத்தையும் பயன்படுத்தலாம். குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சதாவேரி லேகியம்; இடுப்பு வலி, கைகால் வலிக்கு பிண்ட தைலம்; குழந்தையின் ஆரம்ப கால நோய்களை சமாளிக்க, உரை மாத்திரை ஆகியவை உள்ளிட்ட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ என்ற பெயரில் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்படும்.