அர்விந்த் கேஜ்ரிவால் நரேந்திர மோடிக்கு டெல்லியிலேயே கிடைத்த தலைவலியாக ஆகிவிட்டார். இந்தியா முழுதும் சுற்றி வளர்ச்சிப் பெருமை பேசும் மோடி அரசால் டெல்லியில் சாதாரண மக்களுக்கான வளர்ச்சியைப் பேசிய ஆம் ஆத்மியை வீழ்த்திவிடமுடியவில்லை. அதனாலேயே பதவியேற்ற 6 மாத காலங்களில் ஆம்ஆத்மிக்கு பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது மத்திய அரசு.

கடந்த சனியன்று மோடி அரசின் இந்தப் போக்கை வெளிப்படையாகவே சாடினார் கேஜ்ரிவால். “இந்த ஆறு மாதங்களில் எங்கள் எம்.எல்.ஏக்கள் 3 பேரை கைது செய்திருக்கிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் டெல்லி போலீஸ் எங்களை வேட்டையாடுகிறது. எங்கள் எல்லோரையும் கைது செய்தாலும் நாங்கள் திகார் சிறையிலிருந்தே பணிகளைச் செய்வோம் ” என்று பேசினார். புராரி மருத்துவமனையை விரிவுபடுத்தி 200லிருந்து 800 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றி அதன் திறப்பு விழாவில் அரவிந்த் கேஜ்ரிவால் இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் மேலும் பேசிய அவர் “மூன்று சீட்டுக்கள் மட்டுமே பி.ஜே.பிக்கு நீங்கள் கொடுத்ததால் கோபமடைந்த அவர்கள் 24 மணிநேரமும் எங்களுக்கு இடர் செய்வது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையை எங்களிடமிருந்து மத்திய அரசு ஜூன் 8ம் தேதி கைப்பற்றியது. ஜூன் 8ம் தேதி வரை நாங்கள் துரிதமாக செயல்பட்டு லஞ்சம் வாங்கிய 50 அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜூன் 8ல் அவர்கள் அத்துறையை கைப்பற்றியதிலிருந்து இன்று வரை யார் மேலும் ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை. அவர்(மோடி) எங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு செயவதை வழக்கமாகக் கொணடிருக்கிறார். ஆம்ஆத்மியோ மக்களுக்கு தொடர்ந்து பணி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது” என்றார்.

“இந்த மருத்துவமனையை முந்திய அரசு தனியாருக்குக் கொடுக்க இருந்தது. எங்கள் அரசு அதை 800 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவுபடுத்தியுள்ளது. இதற்கு 270 கோடி தான் செலவானது. பதவியேற்ற ஆறுமாதத்தில் சேரிப் பகுதியில் ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்ட கிளினிக்கை திறந்துள்ளோம். இது போல இன்னும் 15 கிளினிக்குகளை திறக்க இருக்கிறோம்.” என்றார் கேஜ்ரிவால்.

Related Images: