நாம் தமிழரில் இணைகிறார் ‘பரோட்டா சூரி’ ?!

சந்தானத்துக்கு அடுத்த இடத்தில் வளர்ந்து வரும் காமெடியன் பரோட்டா சூரி மிக விரைவில் சீமானின் `நாம் தமிழர்` கட்சியில் இணையவிருக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.சீட்டும் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

இச்செய்தியை உறுதிசெய்யும் விதமாக நாளை வியாழன்று பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் சூரிக்கு சீமான் இன்று பிறந்த நாள் வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில்  சீமான் கூறியிருப்பதாவது:

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.