ராபின் வில்லியம்ஸ்… மகன் தந்தைக்கு தந்த பாடம்..

மூளைச் சிதைவு நோய் காரணமாக மூளை பாதித்து, கடந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட மிஸஸ் டவுட் பயர்(அவ்வை சண்முகியின் ஒரிஜினல்) புகழ் நடிகர் ராபின் வில்லியம்ஸின் நினைவாக அவரது தந்தை எழுதிய கட்டுரை இது.

“எனக்கும் என் மனைவிக்கும் ஒரு அருமையான உலகத்தைத் தந்த எங்கள் மகன் ராபின் வில்லியம்ஸ் இறந்து ஒரு வருடமாகிறது. அவனது இழப்பு எங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும் அதை அவனுடனான மகிழ்வான கணங்களை வைத்து நிரப்ப முயல்கிறோம்.

ராபின் ஒரு ஆசிரியனோ அல்லது போதகனோ அல்ல. அவன் வாழ்க்கையை எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தான். அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்ட சில விஷயங்கள்.

வித்தியாசமாக இரு: அவன் வாழ்நாள் முழுதும் கூட்டத்தோடு கூட்டமாக இல்லாமல் தனித்தே நின்றான். சைக்கிளோட்டுவது, வீடியோ கேம் விளையாடுவது, கிராபிக் நாவல்கள், கற்பனையான பொம்மைகள் சேகரிப்பது என்று அவன் வயதையொத்த வயதானவர்கள் செய்யாத விஷயங்களையே அவன் செய்தான். யாருடைய கருத்துக்களைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை.

மற்றவருக்கு அளித்தல்: ராபின் வில்லியம்ஸ் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்காகவும், வருந்துபவர்களுக்காகவும் கண்ணீ்ர் விடுபவனாக இருந்தான். ஜூட்ஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவன் செய்த விஷயங்கள் பல. தெருவில் இருக்கும் வீடற்றவர்களைக் கண்டால் தன் கையில் என்ன வைத்திருந்தாலும் அதை அப்படியே எடுத்துக் கொடுத்துவிடுவான். பல நேரங்களில் என்னிடம் கேட்டு வாங்கிக் கொடுப்பான். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் இருந்த வீரர்களை மகிழ்விக்க அங்கே மகிழ்வோடு சென்றான். ரசிகர்களுக்கு அவன் மனதில் தனி இடம் உண்டு. ஒரு முறை நிகழ்ச்சி முடிந்து ஆட்டோகிராப் தரும் போது ஒருவர் தனது மொட்டைத் தலையில் ஆட்டோகிராப் கேட்டபோது சிரித்தபடியே தயங்காமல் போட்டுக் கொடுத்தான்.

அன்பாக இரு: காமெடியன்கள் நிஜவாழ்வில் குரூரமானவர்களாக இருந்திருக்கிறார்கள். ராபின் நிஜவாழ்விலும் அருமையான மனிதன். கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்களில் யு.சி.எஸ்.எப் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டுக்கு சொல்லாமல் திடீரென்று விசிட் அடித்துவிடுவான். பத்திரிக்கையாளர் என்று யார் தொல்லையும் இல்லாமல் கிறிஸ்துமஸ் அன்று வெளியே போகமுடியாமல் வருத்தத்திலிருக்கும் குழந்தைகளுடன் இணைந்து விளையாடி புகைப்படம் எடுத்து, பரிசுகள் கொடுத்து சந்தோஷப்படுத்துவான். அன்பை அவன் அனைவருக்கும் கொடுத்தான்.

எளிமையாக இரு: சினிமாவில் பெரும்புகழ் பெற்றிருந்தாலும் எளிமை விரும்பியாக இருந்தான் ராபின். 80களில் புகழின் உச்சியில் இருந்தபோது ஹோலி சிட்டி மிருககாட்சி சாலையில் ஒரு 100 பேர் மட்டுமே அமரக்கூடிய அரங்கில் இருந்த மக்களுக்காக காமெடி ஷோ செய்தான். 50 பேர் மட்டுமே அடங்கிய பார்வையாளர்களுக்குக் கூட ஷோ செய்திருக்கிறான். அவனுக்காக ஏதும் மெய்ப்பாதுகாப்பாளர்களை வைத்துக் கொள்ளவில்லை. சாதாரண ஆள் போலவே எல்லா இடங்களுக்கும் செல்வான். சுற்றுவான்.

மகிழ்ச்சியாக இரு: எல்லோரையும் மகிழ்விப்பதே அவன் வாழ்வின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அதிலும் அவன் கர்வமடைந்ததேயில்லை. ஆயிரக்கணக்கான மேடை நிகழ்வுகள் செய்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் பாராட்டு பெறும் கலைஞன் போலவே அவன் முகம் பிரகாசிக்கும்.

இறுதியாக அவனிடம் நான் கற்றுக் கொண்டது.. இறப்பு எல்லோருக்கும் வரும். நீ எப்படி இறந்தாய் என்பது நீ சமூகத்தில் எவ்வாறு வாழ்ந்தாய் என்பதை விட முக்கியமானதில்லை. என் உற்ற நண்பனாக இருந்த என் மகனுக்கு என் அஞ்சலி” – ராபர்ட் பிட்ஜெரால்டு வில்லியம்ஸ்.