ஷேக்ஸ்பியர் கஞ்சா அடித்து நாடகம் எழுதினார் ?

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 400 வருடங்களுக்கு முந்திய வில்லியம் ஷேக்ஸ்பியர் குடித்த புகையிலை பைப்புகளை நவீன தடயவியல் முறைகளைக் கொண்டு ஆராய்ந்ததில் அவர் அந்த பைப்புகளில் கஞ்சா புகைத்திருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

‘இது தெரிஞ்ச விஷயம் தானே ? கம்பனிலிருந்து கண்ணதாசன் வரை எல்லாம் புகை அல்லது மது மயக்கத்தில் தானே காவியங்கள் படைத்தார்கள்’ என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது. தென்னாப்பிரிக்காவின் அறிவியல் இதழில் பிரான்சிஸ் தாக்கரே என்பவர் ஷேக்ஸ்பியரின் பைப்புகளை ஆராய்ந்து எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்த கஞ்சாத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மண்ணாலான புகைபிடிக்கும் பைப்பில் படிந்திருக்கும் சிறு துகள்களை எடுத்து, அதை வாயு படிநிலைப் பிரித்தல் மற்றும் நிறை நிறப்பிரிகை (Gas chromatography mass spectometry) எனப்படும் படிமப் பிரித்தல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ந்துஇதை கண்டறிந்துள்ளார் இவர். “விக்டோரியா மகாராணியின் அரச மண்டபத்தில் டிரேக், ராலே போன்றவர்களின் முன்னிலையில் ‘புகையிலை’ நிரப்பப்பட்ட பைப்புகளை புகைத்தபடியே தனது நாடகங்களை அரங்கேற்றியிருப்பதை நாம் ஊகிக்க முடிகிறது என்கிறார் தாக்கரே.

அவருடைய நாடகங்களில் சானட் 76ல் “கஞ்சாவில் ஒரு கண்டுபிடிப்பு” என்று ஓரிடத்தில் இது பற்றி ஷேக்ஸ்பியர் குறிப்பிடவும் செய்துள்ளாராம். இதை மேலும் உறுதிப்படுத்த கலைக்குடிமக்கள் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மற்றும் கவிதைகளிலிருந்து ஆதாரங்களைத் தரும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.