இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச்சூடு – 2பேர் பலி!!

இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் பார்லிமெண்டரி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. .யுனைடெட் நேஷனல் பார்ட்டி என்கிற கட்சி ராஜபக்சே பிரதமராகப் போட்டியிடும் சுதந்திரா கட்சிக்கு எதிரானது. கடந்த 31ஆம் தேதி அந்தக் கட்சியின் சார்பாக நிதியமைச்சர் ரவி தலைமையில் கொழும்பில் நடந்துகொண்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இரண்டு மோட்டார் வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 600 பேர் இருந்த கூட்டத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டதில் 12 பேர் படுகாயமடைந்தனர். 42 வயது சித்தி நஸீமா என்கிற பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதில் இன்னொருவர் இன்று மரணமடைந்தார்.

சம்பவம் நடைபெற்றபோது நிதியமைச்சர் கருணாநாயகே ரவி அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ‘இது திட்டமிட்ட சதி’ என்று குறிப்பிட்ட கருணாநாயகே ரவி. ராஜபக்சே இந்தச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளதாகவும், இதற்கு அடுத்து நடக்கவிருக்கும் சுதந்திரா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் தாங்களே திட்டமிட்டு வன்முறையை ஏவிவிட்டுக்கொண்டு அதை தங்கள் .யு.என்.பி கட்சியின் மேல் சுமத்துவதன் மூலம் பரிதாப ஓட்டுக்களைப் பெற நினைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

இலங்கை முழுவதும் ஏற்கனவே இளைஞர்களிடையே போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்து எழவிடாமல் செய்யவே கோத்தபய ராஜபக்சே சர்வதேச மாபியா தலைவன் முகமது பராக்குவின் உதவியுடன் உள்நாட்டில் ஹெராயின் உள்ளிட்ட போதை மருந்துகளை தாராளமாக, குறிப்பாக தமிழர்கள் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் புழக்கத்தில் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்தோடு ஆபாச படங்கள், விபச்சாரம் போன்றவற்றை தாராளமாக்கியதாகவும் கூறப்பட்டது. அதற்கேற்றார் போல கோத்தபயா மாபியா தலைவனுடன் பேசிக்கொண்டிருக்கும் படங்களும் வெளியாயின.
அதே போல ராஜபக்சே குடும்பம் கடந்த பத்தாண்டுகளில் ஸ்விஸ் வங்கிகளில் சுமார் 18 பில்லியன் டாலர்கள் பணத்தை சேர்த்து வைத்துள்ளதாகவும் அவற்றில் 2 பில்லியன் டாலர்களை மீட்க அவற்றின் கணக்கு விவரங்கள் கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் மறுக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் தங்களது அவப்பெயரை நீக்கவே இது போன்ற துப்பாக்கிச்சூடு சதிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.