சேனல் 4 செய்தி நிறுவனத்திற்கு ஐ.நா. ஈழப் போர் பற்றி நடத்தவிருக்கும் விசாரணை பற்றிய ஆவணம் ஒன்று, வெளியிடப்படும் முன்பே ”லீக்’ காகி கிடைத்துள்ளது. அதில் போர்க்குற்ற விசாரணையை ஐ.நா வேண்டுமென்றே டம்மியாக்க பல முயற்சிகளைச் செய்வது வெளிவந்துள்ளது.

கடைசி ஈழப்போரில் சிங்கள ராணுவம் ‘குண்டு வீசாத பகுதி’ என்று அறிவித்துவிட்டு தமிழ் மக்கள் அங்கே மொத்தமாக பாதுகாப்பு தேடி அடைக்கலம் போனபின்பு அவர்களை திட்டமிட்டு குண்டுவீசிக் கொன்றதை வெளிக்கொண்டுவந்த, ‘நோ பயர் ஸோன்’ என்கிற ஆவணப்படத்தின் இயக்குனர் கால்லம் மேக்ரே இது பற்றிக் கூறுகையில் “திரைமறைவில் ஐ.நா இலங்கை அரசுடன் கைகோர்த்துச் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

அறுபது ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் மீதும் போர்குற்றங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டது இலங்கை அரசின் ஷெல் தாக்குதலால் தான். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையம் போர் குற்றங்கள் மீது சுதந்திர சர்வதேச விசாரணை தொடங்க இருப்பதாக முடிவெடுத்தது. இது சம்பந்தமாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கின்றது.

ஐ,நா வெளியிடப்போகும் அந்த அறிக்கையில் பாதிக்கபட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதியும் முன்னேற்றம் பெற ஏதும் வழி கிடைக்கும் என்றுதான் ஈழத்தமிழர்களும், சர்வதேச மனித ஆர்வலர்களும் நம்பியிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் இலங்கையின் மீது சர்வதேச விசாரணை நடைபெறும் என்பதே. அது கனவிலும் நடக்காத காரியம் என்பதை லீக்காகியிருக்கும் இந்த ஆவணம் நிரூபித்துள்ளது.

ஐநாவால் இலங்கை அரசின் ஒப்புதலோடு தயாரிக்கப்பட்ட இந்த உள்ளக ஆவணம் ‘இலங்கை அரசே விசாரணையை நடத்தும் என்றும் அதற்கு ஐ.நா. தொழிற்நுட்ப உதவி மட்டுமே வழங்கும்’ என்றும் கூறுகிறது. இது சர்வதேச விசாரணை அல்ல. இலங்கை அரசே தன்மீது நடத்தப்போகும் உள்நாட்டு விசாரணை. அதாவது கண்துடைப்பு விசாரணை. இந்த விசாரணையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு முதலாவதாக இலங்கை அரசிடமும், இரண்டாவதாக தமிழர் இருக்கும் வடமாகாண முதல்வரிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

நடைமுறைபடுத்தும் கூட்டாளிகள் ( Implementing partners) என்று இவர்களிருவரையும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இதில் வட மாகாண சபை தான் பாதிக்கப்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள். வடமாகாண முதல்வர் இந்த ஆவணத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும், இந்த ஆவணம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என்றும் தெரிவித்தார்.

அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணத்தை பார்க்கும்போது இதில் ஐநாவும் அல்லது ஐநாவில் இது தொடர்பில் இயங்குவோரும் இலங்கை அரசோடு சேர்ந்து திரைமறைவில் உள்நாட்டு விசாரணையை கொண்டுவருகிறார்கள் என்ற குற்றசாட்டு உறுதியாகிறது. இது ஒரு போலி நீதிமன்றத்தை தவிர வேறொன்றும் இல்லை – நீதியை எதிர்பார்த்தவருக்கு நம்பிக்கை துரோகத்தை தவிர வேறொண்டும் இல்லை.

இந்த ஆவணம் பற்றி கண்டனம் தெரிவித்துள்ள கால்லம் மேக்ரேயின் நேர்காணலை இங்கே காணுங்கள். https://www.youtube.com/watch?v=5yZ4nKhiLXg

Related Images: