வி.எஸ்.ஓ.பி – விமர்சனம்

`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் `சரக்கின்றி அமையாது இவ்வுலகு` என்று இயக்குநர் ராஜேஷ் புரிந்துகொண்டார் போல. எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள பாரிலெல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க’  என்ற இரு வரிகளை கதையாக எடுத்துக்கொண்டு மப்பும் தப்புமாக கப்புமாக மறுபடியும் ஒரு படம் இயக்கியிருக்கிறார்.

தறுதலை, மொள்ளமாரி,முடிச்சவிக்கி, பொம்பள பொறுக்கி இப்படி இன்னும் சில அபத்தமான வார்த்தைகளின் மொத்த வடிவமாக வலம் வருகிறார்கள் சந்தானமும் ஆர்யாவும். இவரது வருங்கால மனைவியை அவர் இண்டர்வியூ  எடுத்து செலக்ட் செய்வதும் அவர் வருங்கால மனைவியை இவர் இண்டர்வியூ எடுப்பதுமான அளவுக்கு திக் ஃப்ரண்ட்ஸாம். ஸோ அந்த வருங்கால மனைவிகளை நட்பைத்துண்டித்துவிட விரும்ப அதற்கெதிராக போராடி எப்படி வெற்றிகொண்டார்கள் என்பது மாதிரியான ஒரு உளுத்துப்போன கதை.

இதற்கு முன்னர் ராஜேஷ் இயக்கிய மூன்று படங்களையும் ஒரு கிளாஸில் கலந்து அளவுக்கு அதிகமாக குடித்து வாந்தி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்று சுருக்கமாகவும் சொல்லலாம்.

இதை ஆர்யாவின் படம் என்பதை விட  சந்தானத்தின் படம் என்றே சொல்லலாம். லொட லொடலொட …இப்படி ஒரு லட்சம் லொட போடுமளவுக்கு பேசித்தீர்த்துக்கொண்டேயிருக்கிறார். சிரிப்புக்குப் பதில் வருவதென்னவோ வெறுப்புதான். படம் முழுக்க 14 ரீலிலும்  இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்துக்கொண்டே இருப்பதால் பேசாமல் சரவணனும் வாசுவும் கலாய்ச்சிக்கிட்டாங்க` என்று டைட்டில் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

தமன்னா ` பாகுபலியில்` தேவதை போல் இதில் வெள்ளைப்பிசாசு போல இருக்கிறார். ஒரு வெட்டிக்கதையில் அதயும் விட வெட்டியாக வந்துபோவதால் இருக்கலாம்.

படத்துக்கு பிசினஸ் வேல்யூ இருந்ததால் செய்யப்பட்ட ஆடம்பர செலவுகள் தாண்டி இமானின் இசை உட்பட ஒரு தொழில்நுட்பமும் ஈர்க்கவில்லை.

படம் துவங்கிய முதல் கால்மணிநேரத்தில் ஒரு கலாய்ப்புப் பாடல் அடுத்த கால்மணிநேரத்தில் ஒரு லவ்டூயட், ஆடுத்த அரைமணிநேரத்தில் டாஸ்மாக் பாடல் க்ளைமாக்ஸுக்கு பக்கத்தில் ஒரு குத்துப்பாடல் என்று ராஜேஷின் மற்ற படங்களின் ஃபார்முலாவும் தவறவில்லை.

ஸோ மொத்தத்தில் வி எஸ் ஓ பி ராஜேஷின் முந்தைய படங்களின் அப்பட்டமான காப்பி.