இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் நிலப்பரப்பில் எண்ணற்ற டெலஸ்கோப்புகள் ஏற்கெனவே உள்ளன. இவை மூலம் கடந்த காலத்தில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இவற்றால் அறிய முடியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தை இடைஞ்சலின்றி நேர கண்காணிக்க எழி்ய வழி பூமிக்கு வெளியே ஒரு டெலஸ்கோப்பை நிறுவுவது தான். ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகள் ஹப்பில் தொலைநோக்கி போல பெரிய சாட்டிலைட்டுகளை ஏவியிருக்கின்றன.

இந்திய ‘ஆஸ்ட்ரோசாட்’ என்ற விசேஷ செயற்கைக் கோளை ராக்கெட் மூலம் உயரே செலுத்துகிறது. இது செயற்கைக்கோள் போல பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற அதே நேரத்தில், விண்வெளியை நோக்கியபடி நட்சத்திரங்களை ஆராயும். பூமியில் அதாவது தரையில் அமைந்த டெலஸ்கோப்புகள் மூலம் கண்டறிய முடியாத விஷயங்களைக் கண்டறிவது அதன் நோக்கமாகும். இது ஒரு பறக்கும் டெலஸ்கோப் என்று கூறலாம்.

பகலில் சூரியனிலிருந்தும் இரவுகளில் நட்சத்திரங்களிலிருந்தும் ஒளி வருகிறது. அந்த ஒளியை நம்மால் காண முடிகிறது. ஆனால் சூரியனாகட்டும் நட்சத்திரங்களாகட்டும் அவற்றிலிருந்து ஒளி மட்டுமன்றி வேறு வகைக் கதிர்களும் வருகின்றன. மின்காந்த அலைகள் பல வகைப்பட்டவை. இந்த அலைகளில் ஒளியும் ஒன்று. எக்ஸ்ரே கதிர்கள், காமா கதிர்கள் எனப்படுபவையும் இந்த மின்காந்த அலைகள் குடும்பத்தைச் சேர்ந்தவையே. புற ஊதாக் கதிர்கள் (அல்ட்ரா வயலட்) அகச் சிவப்புக் கதிர்கள் (இன்பரா ரெட்) ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவை. வானொலி ஒலிபரப்புக்குப் பயன்படுத்தப்படுகின்ற ரேடியோ அலைகளும் இந்தக் குடும்பத்தில் அடங்கும்.

இந்த விதவிதமான அலைகளில் ஒளி அலைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியும். மற்ற வகை அலைகளை நம் கண்ணால் பார்க்க முடியாது. இது ஒரு புறம் இருக்க, நட்சத்திரங்களிலிருந்தும் இதர வான் பொருட்களிலிருந்தும் எத்தனையோ வகையான கதிர்கள் (அலைகள் என்றும் கூறலாம்) வெளிப்படுகின்றன. அவற்றையும் ஆராய்ந்தாக வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன, விசேஷ வகைக் கருவிகளைக் கொண்டு அந்தக் கதிர்களை ஆராயலாமே என்று கேட்கலாம். அதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் எக்ஸ் கதிர்களையும் இதர வகைக் கதிர்களையும் ஆராய காற்று மண்டலத்தைத் தாண்டி உயரே சென்றாக வேண்டும். அப்போது தான் இவ்வலைகள் தெளிவாகக் கிடைக்கும். பல மில்லியன் டிகிரி வெப்பத்தைக் கொண்ட நட்சத்திரங்கள் எக்ஸ் கதிர்களை வெளிவிடுகின்றன. சூரியனையும் சேர்த்து.

கடந்த பல ஆண்டுகளில் பல பறக்கும் டெலஸ்கோப்புகள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஹப்புள் டெலஸ்கோப்பும் அடங்கும். இது சுமார் 560 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிவருகிறது. 11 டன் எடை கொண்ட இந்த டெலஸ்கோப், 1990-ம் ஆண்டில் செலுத்தப்பட்டது. காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய தூசு, வானை ஆராய்வதற்குப் பெரிய தொல்லையாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான் ஹப்புள் செலுத்தப்பட்டது. ஹப்புள் கடந்த பல ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஹப்புள் டெலஸ்கோப்பில் புற ஊதாக் கதிர்களையும் அகச் சிவப்புக் கதிர்களையும் வெளியிடுகின்ற வான் பொருட்களை ஆராயவும் வசதிகள் உள்ளன.

ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப், காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை வெளியிடுகின்ற அனைத்தையும் கிரகித்து ஆராயும் திறன் கொண்ட டெலஸ்கோப், ஆகும். அதற்கான கருவிகள் இந்தப் பறக்கும் டெலஸ்கோப்பில் உள்ளன. இதையே வேறு விதமாகச் சொல்வதானால், இந்த டெலஸ்கோப் நியூட்ரான் நட்சத்திரங்கள், பல்சார்கள் எனப்படும் நட்சத்திரங்கள், வெள்ளைக் குள்ளன்கள் எனப்படும் நட்சத்திரங்கள், கருந்துளைகள், மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற அண்டங்களின் மையங்கள் முதலியவற்றை ஆராயும்.

ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப் 1,650 கிலோ எடை கொண்டது. இது 650 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி மேற்கிலிருந்து கிழக்காக பூமியைச் சுற்றிவரும். இது பல சாதனைகளைப் படைத்துள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும். ஆஸ்ட்ரோசாட் பல்வேறு அலைநீளமுள்ள ஒளிகளை கண்டறிவதன் மூலம் பலவிதமான ஒளியலைகளைக் குவிக்கும் டெலஸ்கோப்பாக பணி செய்யக்கூடியது.

Related Images: