இந்துக் கடவுள்களை அவமதித்து எழுதினால் நாக்கை அறு – ஸ்ரீ ராம் சேனா.

இந்து மதத்தின் பலம் மற்றும் அழகு என்று சொல்லப்படுவது பிற மதங்களின் நல்ல விஷயங்களையும் உள்ளுக்குள் வாங்கி அது மேலும் வளர்வதே. அதனால் தான் இந்துக்கள் அதிகமாக இருந்தாலும் நம் நாடு மதச் சார்பற்ற நாடாக விளங்கிவருகிறது. இது போன்ற இந்தியாவின் தனித்துவங்கள் இந்துத்துவா மதவெறியர்களால் விஷமாக மாற ஆரம்பித்துள்ளன.

எல்லா மதங்களிலும் மதத்தை கிண்டல் அல்லது எதிர்த்து கருத்துக்கள், புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. மாரியாத்தாவை கிண்டல் செய்து படம் எடுத்தாலும் அதை ரசிப்பார்கள் நம் ஊர் மக்கள். தஸ்லிமா நஸ்ரின், டாவின்ஸி கோட் போன்ற நாவல்கள் மற்ற மதத்தின் எழுத்துரிமை மறுப்புகளுக்கு உதாரணம். இவை யாவும் மதவெறியர்களால் கண்டனம் செய்யப்பட்டன. பத்வாக்களும், தலைக்கு விலைகளும் வைக்கப்பட்டன. இப்போது அதே சகிப்பற்ற தன்மை இந்துத்துவா சக்திகளால் இந்து மதத்திற்கு செய்யப்படுகிறது.

ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கிகடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். இதனால், இந்து அடிப்படை வாதிகளின் தனிப்பட்ட எதிரியாக மாறியிருந்தார். கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பை சேர்ந்த பிரசாத் அட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கு கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்க சுவாமி, ”ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. கே.எஸ்.பக்வான், சந்திர சேகர பாட்டில் போன்ற எழுத்தாளர்கள், இந்து கடவுள்களை அவமதிப்பது மக்களின் மனதை புண்படுத்துகிறது. தாங்கள் வழிபடும் ராமனை ஒருவர் விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளா விட்டால் எழுத்தாளர்களின் நாக்கை அவர்கள் அறுப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.

இந்துத்துவா வாதிகளின் நாக்கை அடக்கி வைக்க மோடியோ, அத்வானியோ அல்லது எந்த இந்து மதத் தலைவரோ வாய் திறப்பதில்லையே. ஏன் ? அவர்கள் எல்லாம் இதை ஆமோதிக்கிறார்களா ?