அடிப்படையில் காந்தி ஒரு நிறவெறியரா ?

மகாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தால் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டாலும் அவர் தனது சுய வாழ்வில் தனது தவறான முடிவுகளை மறைத்ததில்லை. அவற்றை தானே சுய விமர்சனம் செய்தவராயிருக்கிறார். தனது வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அனுதாபம் கொண்டுப் பேசிய காந்தி அவர்களை ஹரிஜன் என்றழைத்து இந்துத்துவத்தின் ஜாதிப் படிகளில் அவர்களை தொடர்ந்து இருத்தவே முயன்றார். தலீத்துகளுக்கு அவர்களுக்கான ‘உரிய’ இடத்தை வழங்க முற்பட்டாரே தவிர சமமான இடத்தை வழங்க அவர் முயலவில்லை என்கிற குற்றச் சாட்டு அவர் மேல் உண்டு.
காந்தியின் மீதான இந்த நிறவெறிக் குற்றச் சாட்டை உறுதி செய்கிறது அக்டோபர் 7ம் தேதி வெளிவரவிருக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகம். “தென்னாப்பிரிக்க காந்தி – பிரிட்டிஷ் அரசின் முதலுதவிப் படுக்கை – தாங்கி ” (The South African Gandhi : Stretcher-Bearer of Empire) என்கிற பெயரில் வெளியாகவிருக்கும் இப்புத்தகம் காந்தியின் எழுத்துக்களின் மூலமும், தென்னாப்பிரிக்காவிலுள்ள ஆவணங்கள் மூலமும் அவருடைய தென்னாப்பிரிக்க அரசியல் வாழ்க்கையை அலசுகிறது. அஷ்வின் தேசாய் எனும் சமூகவியல் பேராசிரியரும், கூலம் வாகேத் எனும் சரித்திரப் பேராசிரியரும் இணைந்து எழுதியுள்ள புத்தகம் இது. இப்புத்தகத்திற்கு அருந்ததிராய் முன்னுரை எழுதியுள்ளார்.
புத்தகத்திலிருந்து சில கருத்துக்கள் கீழே..
காந்தி ஆப்பிரிக்காவின் சொந்த மக்களான கருப்பினத்தவர்களை விட இந்தியர்கள் மேல் ஜாதியினர் என்றே கருதினார். ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையருக்கு ஆதரவாகவே எப்போதும் இருந்தார்.

தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்துக்கும் – அயர்லாந்துக்குமிடையே நடைபெற்ற போரில் காயமடைந்த பிரிட்டன் வீரர்களை காப்பாற்றுவதற்காக ஒரு முதலுதவிக் குழுவை உருவாக்கினார். முதல் உலகப் போரின் போது இங்கிலாந்துப் படையில் சேர இந்தியர்களை திரட்டிக் கொடுத்தார். அவருடைய வெள்ளையர் விசுவாசம் அபாரமானது.

தென்னாப்பிரிக்காவில்அவருக்கு வெள்ளையர்களே நண்பர்களாக இருந்தனர். தாயக கருப்பின ஆப்பிரிக்க நண்பர்களே அவருக்குக் கிடையாது. அவர் உருவாக்கிய ‘டால்ஸ்டாய் மாதிரிப் பண்ணை’யில் உறுப்பினர்களாகச் சேர தென்னாப்பிரிக்க கருப்பர்கள் அனுமதிக்கப்படவில்லை.

காந்தியின் ஆரம்பகால தென்னாப்பிரிக்க போராட்டங்களி்ல் டர்பன் தபால் அலுவலகப் போாராட்டமும் உண்டு. அங்கே நுழைவாயிலில் வெள்ளையர்களுக்கு தனி வழியும் வெள்ளையரல்லாதோருக்கு தனிவழியுமாக இரண்டு வழிகள் இருந்தன. காந்தி இந்தியர்களை தென்னாப்பிரிக்கக் கருப்பர்களுடன் சேர்ந்து தனி வழியில் வரச் செய்ததை எதிர்த்தார். வெள்ளையர் வரும் பாதையில் வரவேண்டும் என்பது அவருக்கு முக்கியமில்லை. கருப்பர்கள் வரும் பாதையிலேயே இந்தியர்களையும் வரச்செய்ததையே அவர் முக்கியமாகக் கண்டித்தார். இறுதியில் மூன்று வழிகள் தபால் அலுவலகத்தில் வைக்கப்பட்டன. ஒன்று வெள்ளையருக்கு; மற்றொன்று இந்தியர்களுக்கு ; இன்னொன்று கருப்பர்களுக்கு. அவர் தென்னாப்பிரிக்க கருப்பர்களை காபிர்கள் (Kaffir) அதாவது இழிந்தவர்கள் என்கிற பொருள்படும்படி அழைத்தார்.

1893ல் இந்தியர்களை கருப்பினத்தவர்கள் அளவிற்கு தாழ்வாக நடத்தும் ஒரு தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய அவர் “இந்த முடிவு இந்தியர்களை கருப்பர்களைப் போல தாழ்ந்த பழக்கவழக்கங்கள் கொண்ட நபர்களாக மாற்றிவிடும் ” என்று கருத்து தெரிவித்தார்.

1893ல் நாடல் பார்லிமண்டுக்கு எழுதிய திறந்த மடலில் “இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் இந்தோ-ஆரியன் எனும் ஒரே இனத்திலிருந்து தோன்றியவர்களே… இந்தியர்கள் தென்னாப்பிரிக்க குடிமக்களான காட்டுமிராண்டிகளான காபிர்களை விடச் சிறந்தவர்கள் என்கிற கருத்து நிலவுகிறது… “என்று எழுதினார்.

1896ல் பம்பாயில் பேசிய உரையின்போது “நாடால் நகரத்து ஐரோப்பியர்கள் நம்மை அங்கிருக்கும் பழங்குடி தென்னாப்பிரிக்கக் கருப்பர்களின் தரத்திற்குத் தாழ்த்த நினைக்கின்றனர். இந்தப் பழங்குடியினருக்கு வேட்டையாடுவதே தொழில். நிறைய கால்நடைகளை வளர்த்து விற்று ஒரு மனைவியை வாங்குவதே இவர்கள் லட்சியம். இவர்கள் வாழ்க்கை முழுக்க சோம்பேறித்தனமும் நிர்வாணமுமே தொடரும்”.என்று தென்னாப்பிரிக்க தாயக கருப்பினத்தவர்களை இழிவாகச் சித்தரித்தார்.

1904ல் ஜோஹன்ஸ்பெர்க் நகராட்சி இந்தியர்களை, தென்னாப்பிரிக்க கருப்பர்களுடன் சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்கலாம் என்று தீர்மானம் இயற்றியதை எதிர்த்து அவர் பேசியபோது “காபிர்களை இந்தியர்களுடன் கலப்பது என்பது நியாயமே இல்லாத செயல். எங்களது நாட்டு மக்களின் பொறுமைக்கு இது ஏற்ற பரிசல்ல.” என்றார்.
1908ல் தென்னாப்பிரிக்க சிறைவாழ்வைப் பற்றி குறிப்பிடுகையில் “நாங்கள் காபிர்களுக்கான சிறையை நோக்கி நடத்திச் செல்லப்பட்டோம். எங்களது உடைகளில் காபிர்களை குறிக்கும் ‘என்’ என்கிற எழுத்து முத்திரை குத்தப்பட்டிருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் நாங்கள் இங்கிருக்கும் தாயக காபிர்களுடன் சேர்த்து நடத்தப்படுகிறோம் என்பது. சிறையின் துன்பங்களைத் தாங்குவது எங்களுக்குப் பெரிதல்ல. ஆனால் காபிர்களுடன் எங்களைச் சேர்க்கும் இந்த அனுபவம் தாங்கமுடியாதது. எங்களை வெள்ளையர்கள் தங்களுக்கு இணையாகப் பார்க்காததை எங்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இங்கிருக்கும் ஆப்பிரிக்க காபிர்களுக்கு இணையாக எங்களை அவர்கள் வைத்ததைத் தான் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை ” என்று கூறியுள்ளார்.

காந்தியடிகள் வெள்ளையன் இந்தியனைத் தனக்குச் சமமாக நடத்த இயலாததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவரால் வெள்ளையன் தங்களை ஆப்பிரிக்க கருப்பனுக்குச் சமமாக நடத்தியதைத் தான் பொறுக்க முடியவில்லை. இவ்வாறாக அவரது வருணாசிரம ஆதரவு மனம் தென்னாப்பிரிக்கா போராட்டங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் அவர் எழுதிய அவருடைய வாழ்க்கைச் சரிதத்தில் அவர் இது போன்று துவேஷமான கருத்துக்களைப் பேசுவதை அவர் தவிர்த்திருந்தாலும் பிற்காலத்தில் தலீத்துகளின் தீண்டாமைக்கு எதிராக கோயில் நுழைவு உட்பட போராட்டங்கள் பல நடத்தியிருந்தாலும் அம்பேத்காருடனான கருத்து வேறுபாடுகள் அவருக்குள்ளிருக்கும் சாதீய ஆழ்மனதை வெளிக்காட்டியிருக்கின்றன.
இப்புத்தகம் வெளிவந்த பின் இந்தியாவில் மீண்டும் காந்தியின் வாழ்வும் கருத்துக்களும் பற்றி பெரிய சர்ச்சைகள் கிளம்பும் என எதிர்பார்க்கலாம்.
-அம்பேதன்.